ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, இவர் ரொம்பவும் நல்லவர். ஆனா, உடலைப் பத்தி கண்டுகொள்ளாமல் அதிகம் சாப்பிடுகிறார், அதிகம் உழைக்கிறார். கேட்டால், ’என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்’ என்கிறார். அவர் சொல்வது உண்மைதானா?’’ என்று கேட்டாள்.
பாண்டியன் கையைப் பிடித்துகொண்ட ஞானகுரு, ‘’உன் உடல் பற்றி உனக்கு என்ன தெரியும்?’’ என்று கேட்டதும், ‘’நான் என்ன சாப்பிட்டாலும் செரித்துவிடுகிறது. எத்தனை வேலை செய்தாலும் டயர்ட் ஆவதில்லை. என் உடல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அது போதாதா…? அதனால்தான் தேவையில்லாத கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்வதில்லை’ என்று சொன்னான்.
புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’பாண்டியா.. உன்னுடைய வாகனம் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்பதற்காக நீ அந்த வேகத்தில் செல்ல முடியாது, செல்லவும் கூடாது. அப்படித்தான் உன் உடலும். உனக்கு விசுவாசமாக இருக்கிறது என்பதற்காக அதற்கு அதிக சுமையைக் கொடுக்காதே.
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் முதலில் நேசிக்க வேண்டியது என்ன தெரியுமா? அவன் உடம்பைத்தான். ஆம், அதுதான் அவன் வாழ்க்கைக்கு ஆதாரம். அதுதான் அவனுடைய வாழ்க்கை.
ஆனால், மனிதர்கள் பசிக்கும்போதும், நோயின் போதும், பாலியல் தேவையின்போதும் மட்டுமே உடலை கண்டுகொள்கிறார்கள். இந்த மூன்றையும் கொடுத்துவிட்டால் உடல் அமைதியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல பாண்டியா… உடலுக்குத் தேவை முதலில் மரியாதை.
ஆம், ஒரு கோயிலுக்கு நீ எத்தனை மதிப்பு கொடுக்கிறாயோ அதே மரியாதையை உடலுக்கும் கொடுக்க வேண்டும். திருப்பள்ளியெழுச்சி எனப்படும் சுப்ரபாதம் மூலம் இறைவனை துயில் எழுப்பி பூஜை, புனஸ்காரங்கள் செய்து பின்னர் சயன அறையில் தூங்கச் செய்வது போல் உன் உடலுக்கும் மதிப்பும் மரியாதையும் செய். அப்போதுதான் உடலும் உனக்கு கடவுளைப் போன்று கருணை காட்டும்.
நீ உன் உடலை ஒரு கழுதையைப் போன்று நினைத்து பொதியை மட்டும் ஏற்றிக்கொண்டே சென்றால், உன்னை உதைத்துவிட்டு ஓடியே போய்விடும். உன் உடலின் அற்புதத்தை உணராமலே போய்விடுவாய். இப்போது சொல்.. உன் உடல் கழுதையா அல்லது கடவுளா?’’ என்று கேட்டார்.
’’இனி நான் என் உடலையும் கும்பிடுவேன்’’ என்று ஆனந்தமானான்.