’’பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது. நாம் மனமார நேசிக்கும் ஒருவர் நம்மை விரும்பவில்லை என்றாலும், அதற்காக வருந்தாமல் அவரை விரும்புவதுதான் காதல்’’ என்று விளக்கம் சொன்னதும் ரசித்தாள் சுஜா.
உடனே, ‘’அப்படின்னா, நீங்க காதல் தோல்வியால் சாமியாராகிட்டீங்களா?” என்றும் கேட்டாள்.
‘’நான் ஒருபோதும் காதலைவிட்டு விலகுவதில்லை. இப்போதும் காதல் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இதோ, இந்த நிமிடத்தில் உன்னை நான் காதலிக்கிறேன்’’ என்று கண்களை ஆழமாகப் பார்த்து சொல்லி சிரித்தேன்.
’’சாமி… விளையாடாதீங்க…’’ என்று கொஞ்சினாள்.
’’நிஜமாகத்தான் பெண்ணே… உன்னை மட்டுமல்ல, உனக்காக வேண்டிக்கொள்ளும் உன் தாயை, இந்த கோயிலில் இருக்கும் அத்தனை ஜனங்களையும், இந்த கோபுரத்தில் படபடக்கும் புறாக்களை, கருவறையில் இருக்கும் இறைவனை, காற்றுக்குத் தலையசைக்கும் மரங்களை… இந்த உலகில் உள்ள சகலத்தையும் சதாகாலமும் காதலிக்கிறேன். உன்னுடைய காதலும் அதுபோல் விரிவடைய வேண்டும் சுஜா. உன் காதலை காதலனுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாதே.. உன் குடும்பம், நண்பர்கள், உறவு, உலகம் என்று காதல் எல்லைகள் கடந்து விரிந்து பரவட்டும்…’’ என்றேன்.
தூரத்தில் சுஜாவின் அம்மா வருவதைப் பார்த்ததும், அவசரமாகத் தணிந்த குரலில், ‘‘சாமி… காதல் சமாச்சாரத்தைப் போட்டுக் கொடுத்துடாதீங்க..’’ என்றாள்.
’’பார்க்கலாம்…’’ என்றபடி அவளது கலவரத்தை ரசித்தேன்.
மகள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தது, அவளது அம்மாவுக்கு அதிக சந்தோஷம் தந்திருக்க வேண்டும். அவளும் அருகே உட்கார்ந்தபடி, ‘‘சாமி… உண்மையிலே அதிசயமா இருக்கு. இவ அஞ்சு நிமிஷத்துக்கு மேல எங்கேயும் உட்காரவே மாட்டாளே… ஏதாவது தப்பா பேசினாளா?’’ என்று பணிந்து கேட்டாள்.
’’இல்லை… சரியான வயதில் சரியான விஷயத்தைத்தான் கேட்டாள்…’’ என்றேன்.
உடனே சுஜா பேச்சை மாற்றுவதற்காக, ‘‘மம்மி… நீயும் உன் லேடீஸ் கிளப் பத்திக் கேளேன்..’’ என்றாள்.
’’சுஜா… சாமிகள்கிட்ட அதையெல்லாம் கேட்கக்கூடாது. பூஜை… தியானம்… பக்தின்னு ஆண்டவனைப் பத்தித்தான் பேசணும்’’ என்றாள் கண்டிப்புடன்.
’’ஏன் ஆஷாடபூதிகளுக்கு ஆன்மிகம் தவிர வேறு எதுவும் தெரியாது என்று நினைக்கிறாயா..?’’ என்றேன்.
’’அப்படியில்ல சாமி… ’’ என்று அவள் தயங்கிய நேரத்தில் நடுத்தர வயது வியாபாரி ஒருவன் என் முன் வந்தான், கைகளைக் கட்டியபடியே… ’’சாமி… எனக்கு ஒரு சந்தேகம். நிறைய பேர்கிட்டே கேட்டும் திருப்தியான பதில் கிடைக்கலை…’’ என்றான்
’’நீ விரும்பும் பதிலை எதிர்பார்த்தால் அது கிடைக்காது. மேலும், குழப்பவாதிகள் எந்த பதிலிலும் திருப்தி அடைவதும் இல்லை அப்பனே…’’ என்று பதில் சொன்னேன்.
அவன் நான் சொன்னதை பொருட்படுத்தாமல், ‘‘சாமி நீங்க சொல்லுங்க… ஒவ்வொரு அமாவாசையிலும் என் கடைக்கு முன்னாலே பூசணிக்காய் உடைப்பேன். இப்ப கொஞ்சநாளா, போலீஸ்காரங்க உடைக்க விட மாட்டேங்கிறாங்க. அதனால, கொஞ்சம் தள்ளிப் போய் உடைக்கிறேன். இப்படி செஞ்சா கண் திருஷ்டி போயிடுமா இல்லேன்னா எந்தக் கடைக்கு முன்னே உடைக்கிறேனோ, அந்தக் கடைக்காரனுக்குத்தான் திருஷ்டி கழியுமா?’’ என்று தன் மாபெரும் சந்தேகத்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான்.
உணவுப் பொருட்களை நடு ரோட்டில் வீசி நாசம் செய்பவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும் என நினைப்பவன் நான். ஆனாலும் என் ஆத்திரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
’’உன் கடை முன்னால் உடைத்து, அதில் நாலு பேராவது தடுக்கி விழுந்து, ரத்தக்காயம் பட்டால்தான் உண்மையில் திருஷ்டி விலகும்…’’ என்றேன்.
உடனே அந்த ஆசாமி சந்தோஷமாக, ‘‘அதான சாமி… நீங்க சொல்றதுதான் சரி…’’ என்று ஆனந்தப்பட்டான்.
’’மகனே, நீ ஒவ்வொரு முறை பூசணிக்காய், தேங்காய் உடைக்கும்போதும் தொழில் வளரும், திறமை பெருகும், பணம் கொட்டும் என்பதை நம்புகிறாயா?’’
இதற்கு பூம்பூம் மாடு போல் தலையாட்டிய மனிதனிடம், ‘‘நல்லது. அப்படியானால் இதையும் நீ நம்பத்தான் வேண்டும். ஒவ்வொரு முறை ஒரு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம் பழத்தை உடைக்கும் போதும் தொழில் வளரும், பெருகும், பணம் கொட்டும். ஆனால் உன் வீட்டுப் பெண்கள் உன் கையை விட்டு விலகிக் கொண்டே இருப்பார்கள். இது தேவ ரகசியம். நீ மிகவும் நல்லவனாகத் தெரிவதால் உன்னிடம் சொல்கிறேன், வேறு யாரிடமும் சொல்லாதே..’’ என்றேன் திகில் கலந்த அமுக்கமான குரலில்.
பதறிப்போனவன், ‘‘சாமி… என்ன அர்த்தத்தில் சொல்றீங்க?’’ என்று கேட்டான்.
’’நீ என்ன அர்த்தத்தில் நினைக்கிறாயோ அதே அர்த்தம்தான். அதனால்தான் நம் முன்னோர்கள் ஒரு கற்பூரம் காட்டித்தான் திருஷ்டியை விலக்கினார்கள்’’ என்றேன்.
மேற்கொண்டு ஏதோ கேட்க நினைத்தவனை கண்களாலே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினேன்.
’’சாமி… நீங்க சொன்னது நிஜமா?’’ என்று சுஜா ஆச்சர்யம் காட்டினாள்.
‘‘நிஜம், பொய் என்பதெல்லாம் அவரவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவன் கவலை உனக்கெதற்கு?’’ என்றேன்.