மிகுந்த சோகத்துடன் வந்து நின்றார் மகேந்திரன். ‘’என் பொண்ணு கல்யாணத்தை நல்லா நடத்துறதுக்காக கொஞ்சம் கடன் வாங்கினேன். அதை கட்ட முடியாம என் வீட்டை விற்க வேண்டியதாப் போச்சு. இப்போ எல்லா பணத்தையும் ஒரேயடியா தொலைச்சிட்டு வந்து நிற்கிறேன்…’’ என்று சொன்னார்.
‘’உன் மகள் திருமணத்துக்கு எவ்வளவு சேமித்து வைத்தாய்..?’’
‘’ஆசிரியர் வேலை. கை நிறைய சம்பளம். ஆனால், ஒரு பெரிய வீடு கட்ட ஆசைப்பட்டு நிறைய கடன் வாங்கினேன். அதை அடைக்குறதுக்குள்ள பொண்ணுக்கு கல்யாண வயசு வந்திடுச்சு. எப்படியும் கடனை கட்டிறலாம்னு வீட்டை அடமானம் வைச்சு கல்யாணத்தை முடிச்சேன். கடன் அடைக்குறதுக்குள்ளே ரிடயர் ஆயிட்டேன். வேற வழியில்லாம வீட்டை வித்துட்டேன். இப்போ கையில் எதுவுமே இல்லை, என்னை கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார்” என்று அப்பாவியாகக் கேட்டார்.
‘’கடவுள் முட்டாள்களை சோதிப்பதில்லை, கைவிட்டு விடுவார்’’ என்றதும் பதறினார் மகேந்திரன்.
‘’உனக்கு ஒரு மகள் பிறந்த நேரத்திலேயே அவளுக்குத் திருமணம் முடிக்கவேண்டும் என்பதும், அதற்கு பணம் தேவைப்படும் என்பதும் உனக்குப் புரியும். அதேபோன்று உன் சம்பளம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு கடனுக்குக் கட்ட முடியும் என்பதும் தெரியும். வயதானால் ஓய்வு பெற்றுவிடுவாய் என்பதும் உனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் சேமிக்காமல் தவறு செய்திருக்கிறார்.
உனக்கு ஒரு நல்ல வேலை கொடுத்தது இறைவன். படிப்பு செலவு, திருமண செலவு போன்ற எதுவுமே திடீரென வருவதில்லை. அறுவை சிகிச்சை போன்ற செலவுகூட திடீரென வருவதில்லை. முன்கூட்டியே உனக்கு தெரியவரும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாத பட்சத்தில்தான் சாதாரணமாக தீரவேண்டிய நோய், அறுவை சிகிச்சை அளவுக்குப் போய்விடுகிறது. ஆக, எந்த ஒரு செலவும் ஒரே நாளில் உன் முன்வந்து நின்றுவிடவில்லை. ஆனால், எல்லாம் தெரிந்தும் மாத சம்பளம் வாங்கும் திமிரில் அசட்டையாக இருந்துவிட்டாய்.
கடவுள் முட்டாள்களை மன்னிப்பார். ஆனால், தெரிந்தே தவறு செய்தவர்களை மன்னிப்பது இல்லை. உன் தண்டனையை அடைந்தே தீரவேண்டும்’’ என்றார் ஞானகுரு.
‘’இந்த சிக்கலில் இருந்து தப்பவே முடியாதா..?”
‘’கடவுள் முட்டாள் இல்லை. அதனால் உன் துன்பத்தை நீயே ஏற்றுக்கொள் மகேந்திரா… ஒரு கட்டத்தில் இந்த துன்பமும் உனக்கு பழகிவிடும். உன்னைப் போன்று தவறு இழைப்பவர்களுக்கு வழி காட்டு. கடவுள் அருள் காட்டலாம், காட்டாமலும் போகலாம்..’’ என்றபடி தியானத்தில் ஆழ்ந்தார் ஞானகுரு.