மிகவும் பெருமையோடு ராகவனை ஞானகுருவிடம் அறிமுகம் செய்துவைத்தனர். ’’ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவனாக இருக்கிறான். இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் இவரது நிறுவனம் ஒரு மிகப்பெரிய சாதனை படைக்க இருக்கிறது. உங்கள் ஆசிர்வாதம் பெற வந்தோம்’’ என்றதும் கையில் இருந்து பழக்கூடையை ஞானகுருவின் முன்பு வைத்தான் ராகவன்.
‘’எப்ப பார்த்தாலும் வேலை, மீட்டிங். சரியா சாப்பிடுவது இல்லை, தூங்குவது இல்லை, எந்த நேரமும் கம்பெனி நினைப்புத்தான். ஜெயிக்கிற வரைக்கும் ஓயவே மாட்டேன் என்று உழைக்கிறான்’’ என்று சொன்னதும் பெருமையுடன் பார்த்த ராகவனை உற்றுப் பார்த்தார் ஞானகுரு.
’’வெற்றிக்கு வெறி தேவைதான். ஆனால், அதைவிட முக்கியமான ஒன்றை தவற விடுகிறான். அதனால், வெற்றிக்கு வாய்ப்பில்லை’’ என்றதும் வந்திருந்த அத்தனை பேரும் அதிர்ந்து நின்றார்கள்.
‘’நான் எதை தவறவிட்டேன்’’ தட்டுத்தடுமாறி கேட்டான் ராகவன்.
‘’ஆரோக்கியத்தை தவற விடுகிறாய் ராகவன். போட்டிகள் நிறைந்த இந்த உலகில், உச்சபட்ச செயல்திறன் தேவை. விரைந்து முடிவெடுக்கவும், செயல்படுவதற்கும் மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதாது, உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஒருவனுக்கு எத்தனை பெரிய வெற்றி கிடைத்தாலும், உடல்நலமில்லை என்றால் அவற்றை அனுபவிக்கவே முடியாது. நோயாளியான கோடீஸ்வரரால், ஒரு ஆரோக்கியமான கூலித் தொழிலாளியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க முடியாது. எனவே வெற்றியை பிடிப்பதற்கு முன்பு உன் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள். ஆரோக்கிய உணவும், சீரான தூக்கமும்தான் உன் சிந்தனையை மேலும் வளப்படுத்தும்.
ஆரோக்கியமாக இருப்பவன் என்றேனும் ஒரு நாள் வெற்றியை தொட்டுவிட முடியும். ஆனால், ஆரோக்கியம் இல்லாதவனால் எப்போதும் வெற்றியை நெருங்கவே முடியாது. அதனால், உன் லட்சியத்தை செதுக்குவது போன்று உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வை. கார் பழுதானால் மட்டுமே பராமரிப்பது போன்று உடலையும் நோய் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இராதே… அந்த நோய் பெரும் விபத்தாக அமைந்துவிடலாம். இப்போதே கவனம் வை’’ என்றதும் கையை ஆதாரமாக பற்றிக்கொண்டான் ராகவன்.
’’சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த சரியான ஆசிர்வாதம்’’ என்றபடி கிளம்பினான்.