ஞானகுருவை சந்தித்த மகேந்திரனுக்கு 25 வயது இருக்கலாம். கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனே பேச்சைத் தொடங்கி, மனதில் இருப்பதை கேட்டேவிட்டான்.

‘’நான் இப்போது அரசு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என்னுடன் வேலை செய்யும் பலரும் லஞ்சம் வாங்குகிறார்கள். நான் லஞ்சம் வாங்கவில்லை என்றாலும் என் பெயரைச் சொல்லி அவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை, எல்லோரும்தான் வாங்குகிறார்கள் என்று ஆசை காட்டுகிறார்கள். நான் எந்த நிமிடமும் மாறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது… எப்படி நான் உறுதியுடன் இருப்பது?” என்று கேட்டான்.

மகேந்திரன் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்த ஞானகுரு, ‘’சரியான நேரத்தில் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறாய் மகேந்திரா. முனிவர்களின் தவத்தை கலைக்க அழகிகளை தேவேந்திரன் அனுப்புவது போன்று நல்லவர்களைக் கெடுக்க பலரும் முயற்சி செய்வார்கள். ஏனென்றால், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தனி மனிதனாக பொறுப்பேற்க விரும்புவதில்லை.

கடவுளுக்கே லஞ்சம் போன்று காணிக்கை கொடுத்து, தங்கள் காரியத்தை சாதிக்க விரும்பும் மனிதர்கள்தான் அதிகம். கடவுளுக்கே லஞ்சம் கொடுப்பவர்கள் மனிதர்களுக்குக் கொடுக்க மாட்டார்களா அல்லது கெடுக்க மாட்டார்களா..?

இன்று உன் மனதில் இருக்கும் உறுதி நாளையும் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், பலவீனமான நேரத்தில் உன்னை ஜெயிப்பதற்காக லஞ்சம் காத்திருக்கும். மனம் பலவீனம் அடையும்போது நான் கூறியதை எண்ணிப்பார்.

நீ பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் என்ன நடக்கும் என்று கற்பனை செய்.  நீ எத்தனை பணம் சேர்த்திருக்கிறாய் என்று யாரும் பார்க்கப்போவதில்லை. நீ எப்படி பணியாற்றினாய், எத்தனை தூரம் நேர்மையாக இருந்தாய் என்பதை மட்டும்தான் சிலாகித்துப் பேசுவார்கள், மதிப்பார்கள்.  

ஓய்வு வேண்டுமானால் தாமதமாக வரலாம். ஆனால், உனக்கு எந்த நேரமும் மரணம் வரலாம். நாளையே உன் வாசலில் வந்து நிற்கலாம். அதனால், அலுவலகம் செல்லும் ஒவ்வொரு நாளும், இன்றுதான் உன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாள், நாளை நான் செத்துப் போகலாம் என்ற எண்ணத்துடனே செல். இது ஒரு வகையில் உண்மையாகவும் இருக்கலாம் என்பதால் நீ நினைப்பதில் எந்த தவறும் இல்லை

கண்ணுக்கு முன்னே மரணம் தெரியும்போது, யாருக்கும் துரோகம், துன்பம் இழைக்க மனம் வராது. லஞ்சம் வாங்கவும் தோன்றாது.

அரசு பணியில் இருக்கும்போது உன்னால் கார், வீடு போன்றவை நிச்சயம் வாங்க முடியும். அதுவே லஞ்சம் வாங்குவதால் பெரிய வீடு வாங்கலாம், பெரிய கார் வாங்கலாம். அவ்வளவுதான். எத்தனை பெட்ரூம் வீடு வாங்கினாலும், உன்னால் ஓர் அறையில்தான் படுத்து உறங்க முடியும் என்பதை புரிந்துகொள்.

இன்னும் அதிரடியாகச் சொல்வது என்றால், லஞ்சம் என்பது உன் மனைவி, தாயை பிறரிடம் வாடகைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் கொடூரம் என்ற சிந்தனையை வளர்த்துக்கொள். ஆம், நாட்டுக்குத் துரோகம் செய்வதும் தாய்க்கு துரோகம் செய்வதும் ஒன்றுதான். இந்த சிந்தனையை வளர்த்துக்கொண்டால், அதன்பிறகு உனக்கு லஞ்சம் வாங்கும் எண்ணம் வராது.

கொஞ்ச நாட்கள்தான் உன்னை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதற்கு வற்புறுத்துவார்கள். அதன்பிறகு, ‘பிழைக்கத்தெரியாத பைத்தியம்’ என்று பட்டம் கட்டிவிட்டு போய்விடுவார்கள். அதுவரை பொறுத்திரு மகனே…’’ என்று முடித்தார்.

மகேந்திரன் கண்களில் கூடுதல் உறுதி தெரிந்தது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *