கனவு என்பது மனதில் நிரம்பிவழியும் குப்பை தவிர வேறு எதுவும் இல்லை என்று சொன்னதும், அம்சவள்ளிக்கு அந்த பதிலில் அத்தனை திருப்தி இல்லை. ஆனாலும், அடுத்த கேள்வி கேட்டாள்.

, ‘‘சாமி… நாங்க பணக்காரங்களாகி சந்தோஷமா இருப்போமா? குறி சொல்லுங்க…. ஆனா உங்களுக்குத் தர காசு இல்லை’’ என்று கேட்டாள்.

’’உனக்குப் பணம் வேண்டுமா..? சந்தோஷம் வேண்டுமா?’’ என்று திருப்பிக் கேட்டேன்.

பதில் சொல்லத்தெரியாமல் விழித்தவள், பின்னர் சமாளித்துக்கொண்டு, ‘‘பணம் இருந்தாத்தான சந்தோஷமா இருக்க முடியும்?’’ என்று சந்தேகமாகவே கேட்டாள்.

‘‘இல்லை அம்சவள்ளி… பணத்துக்கும் சந்தோஷத்துக்கும் துளியும் சந்பந்தம் இல்லை. இந்த உலகத்தை பணக்காரர்கள், ஏழைகள் என்று பிரிக்க முடியாது. சந்தோஷமாக இருப்பவர்கள்…. சந்தோஷம் இல்லாதவர்கள் என்றுதான் பிரிக்க முடியும். கோடிகோடியாகப் பணம் கொட்டிக் கிடந்தும் சந்தோஷம் இல்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். அதுபோலவே, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழி தெரியாத நிலையிலும், கவலையின்றி சந்தோஷமாக இருக்கும் ஏழையும் உண்டு. நீ எந்த பிரிவில் சேர விரும்புகிறாயோ அது உனக்குக் கிடைக்கும் சந்தோஷமாக சென்று வா…’’ என்று ஆசிர்வதித்தேன்.

குழந்தையை என் கையில் கொடுத்தாள், உச்சிமுகர்ந்து அவளிடம் கொடுத்தேன். சந்தோஷமாகப் போனாள்.

‘‘ரொம்ப நல்லாப் பேசுறீங்க… நீங்க எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்…?’’ என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.

நான் அமர்ந்திருந்த தூணுக்குப் பின்னே, நாலைந்து ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருந்தார்கள். அந்த குழுவில் மொட்டைத்தலையுடன் இருந்தவர்தான் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

‘‘எந்த மார்க்கம் என்றால்…?’’ என இழுத்தேன்.

அவர்கள் தமிழகத்தில் வேகவேகமாகப் பரவிவரும் ஒரு ஆன்மிக அமைப்பின் உறுப்பினர்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேலூரில் அந்த அமைப்பு நடத்திய பதினைந்து நாள் அறிமுக வகுப்பில் சேர்ந்து, அதில் பயன் தெரியவே, அந்த இயக்கம் நடத்தும் அடுத்த கட்ட சிறப்புப் பயிற்சி வகுப்புக்காக சென்னை வந்திருக்கிறார்கள். அவர்கள் குருவின் தெய்வீகத் தன்மையைப் பற்றி சிலாகித்துச் சொன்னார்கள். நான் எதுவும் பேசாமல் தவிர்த்தேன், ஆனாலும் மீண்டும் அவர்களது இயக்கத்தைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள்.

‘‘நீங்களும் எங்க குருவைப் பார்க்க வாங்களேன்… அவர் ஆசிர்வாதம் கிடைக்கும்’’ என்றார்கள். அவர்களிடம் தெரிந்த திமிர் என்னை உரசவே, மோதிப்பார்க்க ஆசைப்பட்டேன்.

‘‘நிஜமாகவே உங்கள் குருவின் ஆசிர்வாதம் சக்தி வாய்ந்ததா?’’ என்று கேட்டேன்.

‘‘ஆமாம் சாமி… நான் பூஜை செய்யும் போது, திடீர்னு என் பக்கத்துல இருக்கிற மாதிரி பிரசன்னம் ஆயிடுவார்.. ஒரே நேரத்தில் பல பக்தர்கள் வீடுகளில் அவரைப் பார்க்க முடியும். அவர் ஒரு தெய்வ அவதாரம்’’ என்று ஒருவர் புளகாங்கிதத்தோடு பரவசமடைந்து பேசினார்.

‘‘வீட்டிற்கு குரு வந்ததை, உன்னைத் தவிர யாரும் பார்த்தார்களா?’’

‘‘அதெப்படி சாமி… பக்திமான் கண்ணுக்கு மட்டுமே அவர் தரிசனம் கிடைக்கும்…’’ என்றான்.

‘‘யாரும் பார்க்காத ஒரு உருவத்தை நீ மட்டும் பார்த்திருக்கிறாய்  என்றால், உனக்கு மனநலக் கோளாறு என்று அர்த்தம். எதற்கும் ஒரு நல்ல  மருத்துவரை உடனே பார்த்துவிடு’’ என்றதும் அந்த குழுவே ஆத்திரப்பட்டது.

மொட்டை போட்டு இருந்தவர் அவர்களை சமாதானப்படுத்தி, ‘‘சாமி… தப்பாப் பேசாதீங்க, நீங்க வேற மார்க்கத்தைச் சேர்ந்தவர்னு நினைக்கிறேன். அதுக்காக எங்க குருவை மட்டம் தட்டாதீங்க, அவரைப் பத்தி தப்பா பேசினா நாக்கு அழுகிடும்’’ என்றார்.

‘‘ஒரு மனிதனை தெய்வ அவதாரம், ஆன்மிக வழிகாட்டி என்று சொல்வதும் அவனை ஒரு தெய்வமாக வணங்குவதும்… இறைவனுக்குச் செய்யும் அநியாயம். உங்கள் குருவுக்குப் பசிக்காதா… அடித்தால் வலிக்காதா… தினமும் அவர் உடல் கழிவுகளை வெளியேற்றுவது இல்லையா?  இதுபோன்ற மனித  நிலையை கடந்தவர்கள் மட்டுமே மனிதர்களை விட மேலானவர்களாக, குருவாக   இருக்கமுடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த மனிதனும் அப்படியொரு  சக்தியுடன் பிறக்கவில்லை, பிறக்கவும் முடியாது. பின் எப்படி உங்கள் குருவை தெய்வ அம்சம் என்கிறாய்? அவர் மட்டும் ஏக்கர் ஏக்கராக இடம் வாங்கிப் போட்டு ஆசிரமத்தை பெரிதாக  வளர்த்துக் கொண்டே செல்வார். ஆனால் உன்னிடம், ‘இறைவனை நம்பு… உலகப் பொருட்கள் மீது ஆசை கொள்ளாதே’ என்று  உபதேசம் செய்யும் இரட்டை வேடத்துக்காகவா?’’ என்று கேட்டேன்.

‘‘இவர் நிச்சயமா ஃபிராடு சாமியார்தான். இவர் நிழல் நம்ம மேல படுறதே பாவம்… வாங்க கிளம்புவோம்’’ என்று அந்த மொட்டையர் படக்கென எழுந்து நடக்க மற்றவர்கள் தயக்கத்துடன் பின் தொடர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.