வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான்  மனிதர்களின் குறிக்கோள் என்றாலும், அதில் எல்லோருக்கும் ஒரு நிபந்தனை உண்டு. அதாவது அக்கம்பக்கத்து வீட்டுக்காரனைவிட, உறவினர், நண்பர்களைவிட சந்தோஷமாக வாழ்வதைத்தான் வெற்றிகரமான வாழ்க்கையாக கருதுகிறார்கள். அப்படியில்லை என்றால் வாழ்வில் தோற்றுப்போனதாக நினைக்கிறார்கள்.

இது கொஞ்சம் ஓவரான ஆசை என்றாலும் அடைவது மிகவும் எளிது. ஆம், வாழ்வின் மொத்த முரண்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைந்துவிட்டால் அமோக மகிழ்ச்சி கிடைத்துவிடும். ஆனால் மகிழ்ச்சிக்கு ஆசைப்படுபவர்கள் முரண்பாடுகளைக் கண்டு அச்சப்படுவதால்தான் மகிழ்ச்சி கண்ணாமூச்சு ஆட்டம் போடுகிறது.

அதென்ன முரண்பாடு?

முரண்பாட்டின் மொத்த உருவம் என்று மனிதனை சொல்லலாம். அன்பாக இருக்கும் மனிதனே ஆக்ரோஷம் அடைகிறான். பாசமாக இருப்பவனே சிலநேரம் வேஷம் போடுகிறான். தன் மனைவியை நேசிப்பவன் இன்னொரு பெண்ணின் நகையை அறுக்கிறான். தான் வாழ்வதற்காக பிறரை கொலை செய்கிறான். இத்தனை முரண்பாடு கொண்டவனாகத் திகழும் மனிதன் வாழ்க்கை முரண்களை எதிர்கொள்வதற்கு கொஞ்சமும் விரும்புவதில்லை. இதனை விளக்குவதற்கு ஒரு கதை.

ஒரு மனிதன் மிருகங்களை வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் போனான். எப்படியோ பாதை மாறிவிட்டான். நாலைந்து நாட்கள் எங்கெங்கோ அலைந்தும் ஊர் திரும்பும் பாதையை கண்டறிய இயலவில்லை. அந்தக் காட்டுக்குள் ஆறு போகும் பாதையைக் கண்டறிந்து, அதன் பாதையில் சென்றான். தூரத்தில் சில குடிசைகளை பார்த்ததும் சந்தோஷமாகிவிட்டான். அருகே சென்றதும் வேட்டைக்காரன் அதிர்ச்சியில் ஆழ்ந்தான். ஆம், அது ஆதிவாசிகள் வாழும் கிராமம்.

அங்கே ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகத் திரிந்தார்கள். ஆடையுடன் ஒரு மனிதனைப் பார்த்ததும் அவர்களுக்கு சிரிப்போ சிரிப்பு. சரியான முட்டாளாக இருக்கிறானே இந்த புதிய மனிதன். காற்று, வெயில் உடலில் படாதவகையில் ஏன் இவன் உடலை மூடிக்கொண்டு இருக்கிறான் என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள். ஆனாலும் அவனுக்கு விருந்தோம்பல் செய்தார்கள்.

வேப்ப மரத்தில் இருந்து சில கொப்புகளை இழுத்துப்போட்டு, வேப்ப இலைகளை தனியே உதிர்த்துக் கொடுத்தார்கள். எதற்காக இலையைக் கொடுக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகப் பார்த்தான். உடனே ஒரு ஆதிவாசி மனிதன் வேப்ப இலையை வாயில்போட்டு சாப்பிட்டுக் காட்டினான். அங்கே இருக்கும் அனைவருமே மிருகங்களைப் போன்று இலை, தழை, மாமிசங்களை அப்படியே சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ந்தான். இரவில் தூங்கவேண்டும், பகலில் விழிக்கவேண்டும் என்ற வரையறை இல்லாமல், இஷ்டப்பட்ட நேரத்தில் தூங்கினார்கள், நினைத்த நேரத்தில் எழுந்து அலைந்தார்கள். இருட்டும், வெளிச்சமும் அவர்களுக்கு ஒன்றாகவே இருந்தது.

அந்த மக்களுக்கு நாகரிகம் சொல்லித்தர விரும்பினான் வேட்டைக்காரன். தான் கொண்டுபோயிருந்த சப்பாத்தியில் ஜாம் தடவி அவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் இனிப்பை மிகவும் விரும்புவார்கள் என நினைத்தான். ஆனால், அதை வாயில் வைத்ததும் கீழே துப்பினார்கள். ஆம், அவர்களுக்கு இனிப்பு சுவை பிடிக்கவில்லை.

ஆடை உடுத்திக்கொண்டு மானத்துடன் வாழவேண்டும் என்று சொன்னவனை விசித்திரமாகப் பார்த்தார்கள். இனிமேலும் அங்கே இருக்கமுடியாது என்று தெரிந்ததும், ஆதிவாசிகள் உதவியுடன் தன்னுடைய ஊருக்குத் திரும்பினான். அங்கே போய் மக்களிடம் ஆதிவாசிகள் முழுமையாக முரண்பட்ட வாழ்க்கை வாழ்வதை விவரித்தபோது ஓர் உண்மை அவனுக்குப் புரிந்தது. அதாவது அந்த ஆதிவாசிகள் பார்வையில் இன்றைய மனிதர்கள்தான் முரண் வாழ்க்கை வாழ்கிறார்கள். உண்மைதான். முரண் என்பது மனிதனுக்கு மனிதன், சமூகத்திற்கு சமூகம், காலத்துக்கேற்ப மாறுபடுகிறது என்பதுதான் உண்மை.

அடுத்தவர் முரண்பட்டு இருப்பதாக அல்லது நீ முரண்பட்டுள்ளதாக நினைத்து யாரையும் எதையும் மாற்ற நினைக்காதே. அந்த முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழு. அதுதான் உண்மையான சுதந்திரம்.

இந்தக் கதையில் இருந்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வெற்றியை விரும்பும் மனிதன் தோல்வியை விரும்புவதில்லை. செல்வத்தை விரும்புபவன் வறுமையை விரும்புவதில்லை. சுதந்திரத்தை விரும்புபவன் கட்டுப்பாடுகளை எதிர்க்கிறான். வெளிச்சத்தை விரும்புபவன் இருட்டைக் கண்டு அச்சப்படுகிறான். சுருக்கமாக இவ்வுலக வாழ்வில் இன்பத்தை மட்டுமே விரும்புகிறான், துன்பம் வரக்கூடாது என்று நினைக்கிறான். ஒரு நாணயத்தில் தலை, பூ இரண்டுமே இருக்கும். மெழுகுவத்தியில் வெளிச்சம் மட்டுமல்ல, அதன் நிழலும் இருக்கும். அதனால் முரண்பாட்டை விலக்கிவிட்டு இன்பத்துடன் மட்டும் வாழ்வது நடக்காத விஷயம். இரண்டையும் ஏற்கத் தெரிந்தவனே இன்பத்தை எளிதில் கண்டடைய முடியும்.

முரண்களை ஏன் ஏற்கவேண்டும்?

உண்மையில் மனிதனின் நண்பன் முரண்தான். உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் வலி உண்டாகும்போது வேதனையாக இருக்கும். ஆனால் அந்த முரண் உடலுக்கு நன்மை செய்வதாகவே இருக்கும். அதாவது அந்த குறிப்பிட்ட இடத்தில் ஏன் வலி உண்டாகிறது என்று ஆய்வு செய்யவேண்டிய அவசியம் உண்டாகும். அந்த குறிப்பிட்ட இடத்திலுள்ள உறுப்பின் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதும் அந்த வேதனை மறைந்துவிடும். வலியை அனுபவிப்பவனுக்குத்தான் ஆரோக்கியத்தின் ருசி தெரியும். தோல்வி அடைந்தவனுக்குத்தான் வெற்றியின் மகத்துவம் புரியும். நஷ்டம் அடைந்தவனுக்குத்தான் லாபத்தின் மகிமை தெரியும். அதனால் முரணுக்கு ஆசைப்படு.

எனக்கு வருமானம் குறைவு, செலவு அதிகம். அதற்காக செல்வை வரவேற்க முடியுமா?

செலவு செய்யத்தான் வருமானத்தை தேடுகிறாய். செலவே இல்லை என்றால் வருமானம் தேடுவதற்கு அர்த்தமே இல்லை. செலவு அதிகரிக்கும்போது உனக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வருமானத்தை அதிகரிப்பது, அடுத்தது செலவை குறைப்பது. இரண்டுமே எளிய வழிகளே. ஆனால் யாரும் செலவு குறைப்பதைப் பற்றி யோசிப்பது இல்லை. எந்த செலவுமே குறைக்கமுடியாததாகவே தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. திடீரென இயற்கை சீற்றத்தால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத அளவுக்கு நிலைமை மோசமடைகிறது என்றால், உன்னால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, நிச்சயம் ஒரு வாரம் அல்ல ஒரு மாதம்கூட சமாளிக்க முடியும். ஆனால் சாதாரண நாட்களில் ஒரு வேளையைக்கூட சமாளிக்க முடியாமல் தடுமாறுவாய். அதனால் வரவும் செலவும் உன் கையில்தான் இருக்கிறது.

ஆனாலும் முரண் இல்லாத வாழ்க்கை கிடைக்காதா?

ஆணும் பெண்ணும் காலம் காலமாக சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் பெண்ணுக்கு ஆண் முரண், ஆணுக்கு பெண் முரண். ஆனால் ஆண் இல்லாத உலகத்தை பெண்ணும், பெண் இல்லாத உலகத்தை ஆணும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் முரண் என்பதை எதிரியாகப் பார்க்காதே, கவர்ச்சியாகப் பார். எல்லாம் இன்பமாகத் தெரியும்.

முரண்பாட்டைத் தாண்டிய ஓர் உண்மை..?

பெற்றோர் பிள்ளை மீது உயிரையே வைத்திருப்பார்கள். ஆனால் பிள்ளையின் கண்களுக்கு பெற்றோர் எதிரிகளாகத் தெரிவார்கள். இந்த சக்கரம் சுழலும்போது வாழ்க்கை கைமீறி போயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *