அன்றாட வாழ்க்கையில் மனிதன் சந்தோஷப்படுவதைவிட, துன்பப்படும் நேரம்தான் அதிகம். ஆற்றாமை, ஏக்கம், பொறாமை, கோபம், எரிச்சல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறான். அதனால் இன்பமாக இருப்பதைவிட அதிக நேரத்தை துன்பம் ஆக்கிரமிக்கிறது. ஆனால், நம் மனம் விசித்திரமானது. எது தேவையானதோ அதை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. வேண்டாதவற்றை புறம் தள்ளிவிடும் தன்மை கொண்டது.
மரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவை சந்தித்தான் ராமசாமி. ‘’சாமி, என்னுடைய வாழ்க்கை எப்போதும் துன்பமாகவே வாழ்க்கை நகர்கிறது… நான் ஆனந்தமாக இருப்பதற்கு வழியே இல்லையா…?’’ என்று கேட்டான்.
‘’நீ இப்படி சொல்கிறாய். ஆனால், உன்னுடைய பழைய காலங்களில் எல்லாம் இன்பமாகத்தானே இருந்திருக்கிறாய்?’’ என்று கேட்டார் ஞானகுரு.
‘’இல்லையே சாமி, இதுவரை பெரிய இன்பம் எதையும் நான் அனுபவித்ததாக நினைவு இல்லையே…’’ என்றதும் அவனை அருகில் அமர வைத்தார்
‘’கண்களை மூடி உன் சிறுவயது ஞாபகங்களை கொஞ்சம் கொஞ்சமாக நினைத்துப் பார். உன் ஒவ்வொரு வயதிலும் உனக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களை மட்டும் எனக்குச் சொல்’’ என்று நேரம் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் திடீரென பிரகாசமான முகத்துடன் கண் விழித்தான்.
‘’என் கடந்த காலங்களில் நிறைய நிறைய பழைய நினைவுகளில் சந்தோஷம் மட்டுமே இருக்கிறது. குடும்பத்துடன், நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்தேனோ அந்த நினைவுகளே அதிகம் உள்ளன. என் தந்தை இறந்தபோது நான் அனுபவித்த துன்பம் இப்போது துன்பமாகத் தெரியவில்லை… ஏன். மனம் ஏன் இப்படி மாயம் செய்கிறது?” என்று கேட்டான்.
‘’உனக்கு எது தேவை என்பதை மனம் அறியும். உனக்கு ஏற்படும் துன்பம், சோகம் போன்றவை எல்லாமே தேவை இல்லாத சுமை. அவற்றை நீ சுமக்கக்கூடாது என்றுதான் வெளியே தள்ளிவிடுகிறது. அது தெரியாமல் நீ மீண்டும் மீண்டும் துன்பத்தையே சுமையாக தூக்கிக்கொண்டு திரிகிறாய். இனியும் உன்னிடம் துன்பம் மட்டுமே இருக்கிறது என்று நினையாதே, உன் பழைய காலத்தை அசை போடுவதற்கு நிறைய நிறைய சந்தோஷ தருணங்களை இன்றைய தினத்தில் இருந்து சேமிக்கத் தொடங்கு’’ என்றார் ஞானகுரு.
மனம் நிறைய சந்தோஷத்துடன் கிளம்பினான் ராமசாமி.