எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வத்தின் மீது அவனது பெற்றோருக்கு அத்தனை பெருமை. வகுப்பில் அவனே எப்போதும் முதல் மாணவன். அதனால், அவன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது, அவர்களது பக்கத்து வீட்டில் பூபேஷ் வந்து சேரும் வரை.

ஆம், வங்கி உயர் அதிகாரி ஒருவர், செல்வத்தின் வீட்டுக்கு அருகே குடி வந்தார். அவர்களுடைய மகன் பூபேஷை செல்வம் படிக்கும் பள்ளியில் சேர்த்தார்கள். அவன் 7ம் வகுப்புதான். ஆனால், படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டியாக இருந்தான்.

தேர்வு முடிவு வந்தபோது செல்வம் எப்போதும்போல், முதல் மாணவனாக வந்திருந்தான். 500 மதிப்பெண்களுக்கு 468 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். ஆனால், பூபேஷ் அவன் வகுப்பில் 500க்கு 480 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக வந்திருந்தான். அவ்வளவுதான், செல்வத்துக்கு வீட்டில் அதுவரை கிடைத்துவந்த மரியாதை அத்தனையும் திடீரென பறி போனது.

எப்போதும் படி படி என்று தொந்தரவு செய்தார்கள். பூபேஷை விட கூடுதலாக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று தினம்தினம் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அவனால் இந்த பிரஷர்களை தாங்க முடியவில்லை. அடுத்த தேர்வில் இரண்டாம் இடத்துக்குப் போய்விட்டான் செல்வம்.

வீட்டில் கொஞ்சநஞ்ச அடி என்று சொல்லமுடியாது. கட்டிவைத்து அடித்தார்கள். அதனால், அன்று இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டான். அதன்பிறகு செல்வத்தின் பெற்றோர் என்னென்னவோ சொல்லியெல்லாம் அழுதார்கள். ஆனால், செத்தவன் என்றைக்கு திரும்பி வந்திருக்கிறான்.

அப்படியென்றால், பிள்ளையை நன்றாக படி என்று சொல்வது தவறா…?

இல்லவே இல்லை. நன்றாகப் படிக்கச் சொல்வது தவறு இல்லை. ஆனால், அக்கம்பக்கத்து வீட்டினருடன் ஒப்பிடுவதுதான் மன்னிக்கவே முடியாத குற்றம். ரோஜாவையும் மல்லிகையையும் ஒப்பிடுவது எப்படி ஏற்க முடியாதோ, அப்படித்தான் ஒவ்வொரு மாணவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது. இந்த ஒப்பீடுதான் மன்னிக்க முடியாத குற்றம். வாழ்க்கையில் படிப்பு என்பது முக்கியமான ஒரு பகுதிதான். ஆனால், படிப்புதான் வாழ்க்கை என்பதில்லை. மாணவர் தற்கொலை இரண்டே விஷயங்களுக்குத்தான் நடக்கிறது. ஒன்று, இந்த படிப்பில் தோற்றுவிட்டால் தன்னுடைய வாழ்க்கை அழிந்துவிடும் என்ற அச்சம் அல்லது இந்த தோல்விக்காக மாணவனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை அல்லது அவமானம். இவற்றுக்காகத்தான் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.

ஒரு தோல்வியால் எந்த வாழ்க்கையும் மாறிவிடப் போவதில்லை, மானம் என்பதற்கு அவசியமும் இல்லை.

மாணவர்கள் தற்கொலையை ஏன் தேர்வு செய்கிறார்கள்?

வயதில் முதிர்ச்சியடைந்த பெற்றோர்களுக்கே எதற்காக படிக்கச் சொல்கிறோம் என்பதில் தெளிவு இருப்பதில்லை. அந்த தெளிவை இள வயதினரிடம் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நன்றாக படிக்காதவன் மட்டுமின்றி நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தவனும் தற்கொலை செய்துகொள்கிறான். தோல்வி அடைந்துவிட்டாலும் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது என்பதை சொல்லிக் கொடுக்காத காரணத்தாலே தற்கொலையை ஒருவன் தேர்வு செய்கிறான்.

பரிட்சையில் தோல்வி அடைந்தால் பிள்ளையின் எதிர்காலமே அழிந்துவிட்டதாக கண்டிப்பதும் தண்டிப்பதும் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறு. அறிவுக்கும், திறமைக்கும் மதிப்பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பெற்றோர் முதலில் நம்ப வேண்டும். அதோடு, வாழ்க்கையில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள், தோல்விகள், தடைகளை தாங்கிக்கொள்வதற்கு குழந்தைகளை பழக்க வேண்டும்.

டாக்டராக ஆசைப்படுவது லட்சியமாக இருக்கலாம். போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் மருத்துவத்துறை சார்ந்த பிற படிப்புகள் படிக்கலாம் என்பதை பக்குவமாக மனதில் பதியவைக்க வேண்டும். திட்டாமல், அடிக்காமல் பொத்திப்பொத்தி வளர்ப்பது முக்கியமல்ல. கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திட்டும்போது, பிரச்னைகள் வரும்போது அதனை சாதாரணமாக ஏற்றுக்கொண்டு முன்னேறிச்செல்லும் மனநிலையை உருவாக்க வேண்டும். தோல்வியினால் கீழே விழும்போது, எழுந்துகொள்ளும வலிமையை மாணவன் வளர்ந்துக்கொண்டால், மரணத்தை தொட்டுப்பார்க்க விரும்பமாட்டான். முடிந்தவரை முயற்சிப்பதால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. முடிவு வரையிலும் முயற்சித்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்ற உண்மை புரியவேண்டும்.

மானம் என்பது முக்கியம் இல்லையா..?

மானம் என்ற ஒன்று மனிதருக்குத் தேவையே இல்லை. அதுவும் மாணவருக்குத் தேவையே இல்லை. உயிர் வாழ்தலே உயிருக்கு முக்கியம். பொதுவாக மானம் என்பதை அக்கம்பக்கத்தினர், உறவுகளுக்காக மட்டுமே நம்புகிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் எது செய்தாலும் தவறு இல்லை, அந்த தவறு வெளியே தெரிந்தால்தான் மானம் போகிறது என்று  முடிவு செய்வதாக நம்புகிறார்கள். வெற்றி அடைந்தால் மானத்துடன் வாழலாம், தோல்வி அடைந்தால் மானம் போய்விடும் என்று கற்றுக்கொடுத்தவர் யார்..? இந்த உலகில் நீ ஒரு தனிப்பிறவி. உன் வாழ்க்கை உன் கையில்தான் என்பதில் உறுதியாக இரு. வாழும் வரை போராடு. அதுதான் உயிர்களின் வாழ்க்கை தத்துவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *