அதிகாலையில் அவசரம் அவசரமாக குப்பைகளைப் பொறுக்கி கோணியில் போடுபவனின் சுறுசுறுப்பும், என் பணத்தை மதிக்காத அவன் போக்கும் ஆச்சர்யமாக இருக்கவே, அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

’’ஏன் இத்தனை அதிகாலையில் அவசர அவசரமாகப் பொறுக்குகிறாய்…?’’

’’அட ஏஞ்சாமி… இப்ப இதுக்கு எத்தனை போட்டி தெரியுமா? இன்னும் கொஞ்ச நேரத்துல பொறுக்க எத்தனை பேர் வருவாங்கன்னு பாருங்க. வேகமா வந்து இரண்டு சாக்கு எடுத்துட்டா நூறு ரூபாயாவது தேறும். நாலு நாளா பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லே… இன்னிக்காவது கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய், மாத்திரை கொடுக்கணும் சாமி..” என்றான்.

’’சரி… என்னை அங்கே கூட்டிட்டுப் போ…” என்றதும் பகபகவென  சிரித்தான்.

’’சாமி… நாங்க இருக்கிறது நிஜ வீடுன்னு நினைச்சுட்டியா, எங்க வீட்டை பறக்கும் ரயில் வரும்போதே இடிச்சுட்டாங்க. இப்ப கூவத்தை ஒட்டி ரயில்வே காம்பவுன்ட் ஓரமா சும்மா ஒரு தடுப்பு கட்டி வைச்சிருக்கோம். நீயெல்லாம் வந்தா நாறிப்போயிடுவே. ஏதாவது திநீறு இருந்தா குடு, அவளுக்குப் பூசுறேன்…’’  என்றான்.

அவனது இருப்பிடத்திற்கு போயே தீருவது என முடிவெடுத்து எழுந்து, அவன் தோளில் கை போட்டு பெயரைக் கேட்டேன்.

’’என் பேர் முத்துக்கண்னு… அவ பேரு ராசம்மா. ஒரு பையன் இருக்கான் இரண்டு வயசு ஆகுது. அவளும் பையனை இடுப்புல வச்சுக்கிட்டு பிச்சை எடுத்துட்டு வருவா… பேப்பர் பொறுக்கிற காசுல சினிமா, சாராயம்ன்னு நிம்மதியா இருப்பேன். இப்ப அவளால முடியலைன்னதும், சாப்பிடவே தடங்கலாச்சு சாமி. சரியாயிடும்னு இரண்டு நாளா கண்டுக்காம இருந்தேன். ஆனா, இப்ப அவளை பார்க்க ரொம்பவும் பாவமாயிடுச்சு, அதான் சாமி காலங்காத்தாலயே பொறுக்க வந்திருக்கேன்…’’ என்றான்.

’’உன் மனைவியை நான் பார்க்க வேண்டும், வா போகலாம்…’’ என்றபடி நடக்கத் தொடங்கினேன். நான் சொல்வதை நம்ப முடியாமல் என் பின்னே வந்து கொண்டிருந்தான் முத்துக்கண்ணு.

நடைபாதையில் ஐம்பதைக் கடந்த இரண்டு பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களின் பாதுகாப்புக்காக பின்னே இரண்டுபேர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் காவல்துறை அதிகாரி என்பதும், இன்னொருவர் அரசியல்வாதி என்பதும் தோரணையிலே தெரிந்தது.

நாங்கள் வேகமாக வருவதைப் பார்த்து, ‘’பரவாயில்லையே பிச்சைக்கார நாய்களும் வாக்கிங் வர ஆரம்பிச்சுட்டாங்க… இனிமே இந்தியா வல்லரசா மாறிடும்…’’என்று நளினமான ஆங்கிலத்தில் காவல்துறை பேச, அரசியல்வாதி தொப்பை குலுங்கச் சிரித்தார்.

எனக்கு ஆங்கில ஞானம் உண்டு. அதனால் அவர்களது பேச்சும் சிரிப்பும் அசாத்திய கோபத்தை வரவழைத்தது. அவர்கள் அருகே போய், ‘‘உங்களைப் போன்ற அரசியல்வாதிகளும், அடிவருடி போலீஸார்களும் இருக்கும்வரை இந்தியா ஒருபோதும் வல்லரசாக மாறாது, கவலைப் படாதே…’’ என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆத்திரத்துடன் சொன்னேன்.

என் பேச்சு காவல்துறையின் முகத்தை சிவக்க வைத்துவிட்டது.  ‘‘டேய்… யார் நீ…? தீவிரவாதியா?’’ என்றபடி அருகே வர, அவரது பாதுகாவலர்களும் என் மீது பாயத் தயாரானார்கள். ஆனால்  அரசியல்வாதி பயந்துபோய் தடுத்தார்.

’’வேண்டாம்… நாமதான் சும்மா போனவரை வம்புக்கு இழுத்தோம். இவர் ஏதோ சாமியார் போலத் தெரியுறார். விடுங்கோ…’’ என்று காவல்துறையைத் தடுத்தார். அரசியல்வாதி தலையிட்டதும் நிலைமை சுமூகமானது. ஒரே கணத்தில் தன்னுடைய குணத்தை அப்பட்டமாக மாற்றிக் கொண்ட அரசியல்வாதி, ‘‘சாமி… நாங்க பேசியது தப்புத்தான். நீங்க பெரிய மனுஷர், உங்க வாயால இந்தியா வல்லரசா மாறாதுன்னு சொல்லாதீங்க… அதுக்காகத்தான் நாங்க கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.

அவரது திடீர் மாற்றம் எனக்கு இன்னும் சூடேற்றியது. ‘‘நம் நாட்டை அந்நியன் அடிமைப்படுத்தியது அந்தக் காலம். இப்போது நம் நாட்டின் அத்தனை வளங்களையும் தனியாரிடம் அள்ளிக்கொடுத்துவிட்டு, வெளி நாட்டுக்கு வாசலை திறந்துவிட்டீர்கள். இந்தியாவை பணக்கார நாடுகளுக்கு காட்டிக் கொடுத்த பின்னர், இந்த நாடு வல்லரசாக மாறும் என்று எப்படி உங்களால் மனசாட்சி இல்லாமல் பேசமுடிகிறது? அதை விட்டுத்தள்ளு. எந்த ஒரு நாடும் வல்லரசாக மாறுவது முக்கியமே அல்ல, நல்லரசாக இருக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது’’ என்று ஆவேசமாக சொல்லிவிட்டு என் வழியில் நடந்தேன்.

அரசியல்வாதி சிலை போல் நிற்பதை முதுகுவழியே பார்க்க முடிந்தது. இதுவரை நடந்தவற்றைப் பார்த்து பயந்து, தூரத்தில் நின்று கொண்டிருந்த முத்துக்கண்ணு என்னுடன் சேர்ந்து கொண்டான்.

’’சாமி… உங்களுக்கு அவங்ககிட்ட பேச பயமா இல்லையா?’’ என்றான் அப்பாவியாக. நான் பதில் சொல்லாமல் அவன் தோளில் கைபோட்டு நடந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *