அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற சினிமா கலைஞர்களை, தொழிலதிபர்களை அறிவாளியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், அறிவு என்று நினைப்பது எல்லாமே, அதிகம் தகவல் தெரிந்து வைத்திருக்கும் புத்தியைத்தான். இதுதான் உண்மையா என்று யாரும் சந்தேகம்கூட கொள்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

ஞானகுருவை தரிசிக்க வந்த ராமநாதன், ’ என் மகனை ஐ.ஏ.எஸ். ஆக்குவதற்கு ஆசைப்படுகிறேன், ஆனால்… அவனுக்கு பொது அறிவு அறிந்துகொள்ளும் ஆர்வமே இல்லை’ என்று வருத்தப்பட்டான்.

‘’உன் மகன் அறிவாளியாக ஆசைப்பட்டால், அவனை புத்தகங்களை தொட விடாதே..’’ என்றார் ஞானகுரு.

அதிர்ந்துபோன ராமநாதன், ‘’என்ன சாமி இப்படி சொல்றீங்க. நிறைய நிறைய படிச்சவங்கதானே அறிவாளியா இருக்காங்க. நிறைய படிச்சாத்தானே ஐ.ஏ.எஸ் ஆகமுடியும்?’’ என்று கேட்டான்.

‘’இந்த உலகில் அதிகம் அறிந்து வைத்திருப்பது கம்யூட்டர்தான். ஒரு லட்சம் தகவல்களை கம்யூட்டரிடம் கொடுத்து, அதில் இருந்து எந்த ஒரு கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் திறன் அதற்கு உண்டு. அதனை நீ அறிவாளி என்று ஏற்றுக்கொள்வாயா? ஒரு புத்தகத்தில் எக்கச்சக்க தகவல்கள் இருக்கிறது என்பதற்காக அதனை நீ அறிவாளி என்று ஏற்றுக்கொள்வாயா? எந்த ஆண்டு பானிபட் போர் நடந்தது, நைல் நதியின் நீளம் என்ன, தாஜ்மஹாலை கட்டியது யார் என்பதை எல்லாம் படித்து, பதில் தெரிந்து வைத்திருப்பது அறிவு அல்ல. நமக்கு ஏன் துன்பம் வருகிறது என்பதை அறிவது அறிவு. அதற்கான விடை எங்கே இருக்கிறது என்று தேடுவது அறிவு. பிறரைப் போன்று வாழ்வது முக்கியம் இல்லை, தனக்கான வழியை அறிந்து செல்லவேண்டும் என்பதை அறிவது அறிவு…’’

‘’என்ன சாமி இப்படி சொல்றீங்க… பையன் படிக்க வேண்டாமா?”

‘’அவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதனை படிக்கச் சொல். அதில்தான் அவனுடைய அறிவு வளர வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வு படிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் இருந்தால், நீ காட்டிய வழியில் எப்போதோ போயிருப்பான். அவன் பாதையில் போகவிடு, உன் குப்பையை அவனுக்குள் திணிக்காதே’’ என்று கண்களை மூடினார் ஞானகுரு.

Leave a Reply

Your email address will not be published.