எல்லா மனிதருக்கும் நீண்ட நாட்கள் வாழ்வதுதான் ஆசையாக இருக்கிறது. வயது முதிந்தாலும், நோயால் அவதிப்பட்டாலும், இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்து பார்க்கும் ஆசை மட்டும் குறைவதே இல்லை. உடல் ரகசியம் அறிய ஞானகுருவை சந்தித்தாள் சகுந்தலா. கல்லூரி பேராசிரியை, விரைவில் ஓய்வு பெறப் போகிறவள். மரண அச்சம் வந்ததாலோ என்னவோ, 100 ஆண்டுகள் என்னால் வாழ முடியுமா என்று கேட்டாள்.
புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ’’சுவாரஸ்யமான ஒரு கதை கேட்டிருப்பாய். மனிதகுலத்தின் மரணம் குறித்து சித்திரபுத்திரர், பறை அடிப்பவரிடம், ’பூவிருக்க, பிஞ்சிருக்க, காயிருக்க, கனி உதிர’ என்று அறிவிக்கச் சொல்லிக் கட்டளையிடுவார். ஆனால் பறை அடிப்பவரோ, ’பூவுதிர, பிஞ்சுதிர, காயுதிர, கனியுதிர’ என்று மாற்றி அறிவிப்பு செய்துவிடுகிறார். மரண அறிவிப்பு மாற்ற முடியாதது என்பதால் அன்றுமுதல் ,தாயின் கருப்பையில் உருவாகும் கருவில் துவங்கி, அனைத்து வயதினருக்கும் மரணம் வருவதாக சித்திரபுத்திர நயினார் கதை சொல்கிறது.
இந்த கதை சொல்லும் ரகசியம் என்னவென்றால், மரணம் எந்த நேரத்திலும், யாருக்கும், எப்படியும் வரலாம் என்பதுதான். இந்த உடல் ரகசியம் அறிவதற்கு முன்பு மனிதன் படைத்த பொருட்களின் ஆயுள் ரகசியத்தை அறிந்துகொள். ஒரே மாதிரியான மூலப்பொருள் கொண்டு, ஒரே மாதிரியான இயந்திரங்கள் கொண்டு, ஒரே மாதிரி செயலாக்கத்தில் உருவாக்கப்படும் கார் 25 ஆண்டுகள் உழைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அத்தனை கார்களின் ஆயுளும் ஒரே அளவு இருப்பதில்லை. ஏன் தெரியுமா?
காருக்கு போடும் பெட்ரோல், கார் ஓட்டும் விதம், ஒரு நாளைக்கு கார் ஓடும் நேரம், ரோட்டின் தரம் போன்ற பல்வேறு விஷயங்கள் அதன் ஆயுளை நிர்ணயம் செய்கின்றன. எதிர்பாராமல் நிகழும் விபத்து காரணமாகவும் காரின் ஆயுள் குறைந்துவிடும். இதுபோன்றுதான் மனித உடலின் ஆயுளையும் நிர்ணயம் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்லன.
உன்னுடைய பெற்றோர் கொடுத்த ஏதாவது ஒரு பரம்பரை நோய் உடலில் இருந்தால், நீ எத்தனை விழிப்புடன் கவனித்தாலும் 100 ஆண்டுகள் வாழ முடியாது பெண்ணே… அதனால், வாழும் வரை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று மட்டும் ஆசைப்படு, 100 ஆண்டுகள் என நிர்ணயித்து கஷ்டப்படாதே…’’ என்றதும் சிந்தனையில் விழுந்தாள் சகுந்தலா.