என் கண் முன்னே விழித்திருந்த திருநங்கை, என்ன ஆழமாக உற்றுப் பார்த்தாள். அவள் என்ன கேட்கக்கூடாது என்று நினைத்தேனோ, அதையே கேட்டாள்.

’’சாமி… என்னை உங்க அடிமையா… சிஷ்யையா ஏத்துக்கோங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்!’’ என்ற திருநங்கையின் கண்களில் பிரகாசம் ஜொலித்தது.  பொதுவாக அன்புக்கு, பணத்துக்கு மட்டுமல்ல யாரேனும் ஒரு மனிதனுக்கு அடிமையாகத் துடிப்பவர்களைப் பார்த்தாலே எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்போது பரிதாபம் ஏற்பட்டது.

புன்னகையில் அதை மறைத்துக் கொண்டு, ‘‘காற்றடிக்கும் திசையில் நகர்ந்து செல்லும் மேகம் நான். என்னை சிறையில் அடைக்க நினைக்காதே…’’ என்றேன்.

கொஞ்சநேரம் என் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘‘என்னய உங்ககூட வைச்சுக்கிட்டா அசிங்கம்னு நினைக்கிறீங்களா?’’ என்று மீண்டும் ஒரு கேள்வியை வீசினாள்.

’’நீ அசிங்கம் அல்ல. இந்த உலகில் எந்த ஒரு படைப்பும் அசிங்கமாக இருக்க முடியாது. முதலில் இதுபோன்ற தாழ்வு மனப்பான்மையை மனதில் இருந்து புடுங்கி எறி. பிறர் அவமானப்படுத்தினால் அலட்சியப்படுத்து. உன்னிடம் இருக்கும் தனித்தன்மையை,  திறமையை  வைத்து எப்படி வாழ்க்கை நடத்தலாம்  என்று சிந்தித்து செயல்படு. ஒரு வேளை தோல்வியடைந்து  கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து நில், மீண்டும் நட… எல்லாம் நலமாகும்’’ என்று திருநங்கையின் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தேன். பிறகு கண்களை மூடி தியானிப்பது போன்ற பாவனையில் ஆழ்ந்து, நிஜமாகவே தூக்கத்தில் விழுந்துவிட்டேன்.

விடிந்தும் விடியாத மெரீனா கடற்கரை. காலைக் கருக்கலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது கடல்.  அலைகளை ரசித்தபடி அமர்ந்திருந்தேன். ராமச்சந்திரன் வீட்டுக்குப் போகாமல் தப்பித்து வருவதே பெரும்பாடாகி விட்டது. ‘முகவரியை மனதில் எழுதிக் கொண்டேன். தேவையான நேரத்தில் நிச்சயம் காட்சி தருவேன்’ என்று அழுத்திச் சொன்னதை நம்பி வழியனுப்பி வைத்தான். சாதாரண உடைக்கு மாறியிருந்த ராணுவ அதிகாரி, அவனது குடும்பத்துக்கும் சேர்த்து ஆசிர்வாதம் வாங்கிப் போனான்.

கடவுளைப் பார்க்க நினைத்த கான்ட்ராக்டர், நான் ஸ்டேஷனில் இருந்து வெளியே வரும்வரை கண்ணில் தட்டுப்படவே இல்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக மெரீனாவில் கால்வைத்த போது, சொந்த வீட்டுக்குத் திரும்பியது போல் மனம் ஜிலுஜிலுவென்று இருந்தது. கடல் அலைகளைப் பார்க்கும் தொலைவில், தலைக்கு கையை அண்டக் கொடுத்து கால்மேல் கால் போட்டு படுத்தேன்.  வெகு தூரத்தில் சில பெரிய மனிதர்கள் நடை பயிற்சியைத் தொடங்கி இருந்தார்கள். அப்படியே கண்மூடிக் கிடந்தேன்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். திடீரென புகை வாசனை காற்றில் எழுந்துவந்து என்னை எழுப்பவே, திரும்பிப் பார்த்தேன். முப்பது வயசு மதிக்கத்தக்க ஒருவன், தோளில் ஒரு பெரிய கோணி மூட்டையை சுமந்து கொண்டு, கையில் ஒரு குச்சியுடன் மணலில் கிடந்த பேப்பர், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை வேகவேகமாகப் பொறுக்கிக் கொண்டிருந்தான். அவன் பல்லிடுக்கில் பீடி புகைந்து கொண்டிருந்தது. என்னை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தாண்டிச் சென்றான்.

இத்தனை அதிகாலையில், இத்தனை சிரத்தையுடன் வேலை பார்ப்பவனை, அவனை இப்படி பிசாசு மாதிரி வேலை செய்யத்தூண்டும் சக்தி எதுவென அறிந்துகொள்ளும் ஆவல் தொற்றிக்கொண்டது.

’’மகனே, பீடி இருக்குமா…?’’ என்று தூண்டில் விரித்தேன்.

படக்கென என் பக்கம் திரும்பியவன், உதட்டை மட்டும் பிதுக்கிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்.

பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி, ‘‘எனக்காக சுருட்டு இல்லேன்னா ஒரு கட்டு பீடி வாங்கிக்கொண்டு வா… மீதியை நீயே வைத்துக்கொள்…’’ என்றேன்.

பையில் கைவிட்டுத் தேடியபடி என் அருகே வந்தவன், ஒரு பீடியைத் தேடி எடுத்துக் கொடுத்தபடி, ‘‘இப்போ எவன் கடை திறப்பான்… இதைக் குடிச்சுக்கோ, பிறகு போய் வாங்கிக்கோ…’’ என்றவன் தீப்பெட்டியையும் கொடுத்தவன் என் பணத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்,  மீண்டும் கருமமே கண்ணாக மாறினான். அந்தக் கோணிக்காரன் இன்னும் சுவாரஸ்யமாகத் தெரியவே, சிக்கலான நபர்களை மடக்குவதற்காக வைத்திருக்கும் அஸ்திரத்தை எடுத்து வீசினேன்.

’’உனக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகள் தீரும் நாள் வந்துவிட்டது. உன் எதிர்காலத்தைச் சொல்லவா…’’ என்று எழுந்து பீடியைப் பற்ற வைத்தேன்.

பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தவன் அருகில் வந்தான், ‘‘நீங்க சாமியாரா… பிச்சைக்காரன்னு நினைச்சேன்…’’ என்றான்.

ரயிலில் இருந்து இறங்கி, அப்படியே இங்கே வந்துவிட்டதால் என் உடலும் உடைகளும் அழுக்கேறி, ‘பிச்சைக்கார’ கோலத்தில் இருப்பது அப்போதுதான் எனக்கே புரிந்தது. கோணிக்காரன் அப்பட்டமாக உண்மை பேசியது மிகவும் பிடித்திருந்தது. இன்றைய பொழுது இவனோடுதான் என்பதை உணர்ந்து அவனை உற்று நோக்கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *