முத்துக்கண்ணுவின் ஜாகை குறைந்தபட்சம் நைந்த கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும் என நினைத்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கும்வண்ணம் பிளாஸ்டிக் உரச்சாக்குகளால் பந்தல் போல் கட்டப்பட்டிருந்தது.

கீற்றுக் கொட்டகை, அஸ்பெஸ்டாஸ், பிளாஸ்டிக் படுதா என்று விதவிதமாக நூற்றுக்கணக்கில் குடிசைகள் அக்கம்பக்கம் நிரம்பிவழிந்தன. ஒரு புறம் சாக்கடை கூவம் அகழி போன்று நகர்ந்தும் நகராமலும் நின்று கொண்டிருக்க, இன்னொரு புறம் ரயில்வே மதில்சுவர் இருந்தது. அந்த பிளாஸ்டிக்  படுதாவை விலக்கிக்கொண்டு உள்ளே கூட்டிப் போனான் முத்துக்கண்ணு.

முத்துக்கண்ணுவின் மனைவி ராசம்மா, நைந்துபோன பாயில் படுத்துக் கிடந்தாள். பக்கத்தில் அம்மணமாய் அவள் குழந்தை.

அருகே போய் ராசம்மாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். நெருப்பாய்ச் சுட்டது. மணிக்கட்டில் கை வைத்து நாடி பார்த்தபோது லேசாக விழிகளைத் திறந்தாள். பேசக்கூட திராணியற்று, வாயைத் திறந்தவள் பக்கத்தில் கணவனைப் பார்த்ததும் ஆறுதலடைந்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். அதற்குள் பக்கத்து குடிசைகளில் இருந்து சில பெண்கள் கண் விழித்து எட்டிப் பார்த்தார்கள்.

’’ஏம்ப்பா முத்து… நாட்டு வைத்தியரை இட்டாந்திருக்கே… நல்ல டாக்டர்கிட்ட இட்டுக்கினுப் போ…’’ என்றார்கள்.  நான் விழிகளை விரித்து திரும்பிப் பார்த்ததும் அந்தப் பெண் அடங்கிப் போனாள். இன்னும் சில பெண்கள் வேடிக்கை பார்க்க வந்தார்கள்.

’’முத்து உடனே இவளை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்…’’  என்றபடி பையில் கைவிட்டு கொத்தாக பணத்தை எடுத்து அவன் முன் நீட்டினேன்.

’’ஐயோ… எதுக்கு சாமி இம்மாம் துட்டு…’’ என்றவன் அவனாகவே இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டான். உடனே ஓடிப்போய் ஒரு ஆட்டோ பிடித்துவந்து அக்கம்பக்கத்துப் பெண்கள் உதவியுடன் ராசம்மாவை ஏற்றியதும், என்னைப் பார்த்தான்.

’’நீ வரும்வரை உன் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்…’’  என்றதும், ‘‘ஐயே… வேணாம் சாமி… நீ பேசாம இந்த கலீஜை விட்டுக் கிளம்பு சாமி… அவன் எந்தரிச்சா பக்கத்து வீட்ல கிடப்பான்…’’ என்றான்.

எனக்கு அந்த சூழல் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனால் கொஞ்சநேரமாவது இருக்க விரும்பி முத்துக்கண்ணுவை வலுக்கட்டாயமாக சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். வாசல் எனப்படும் படுதாவுக்கு அந்தப் பக்கம் அமர்ந்தேன். சில மணித்துளிகள் முன்பு, ஒரு மகா சமுத்திரத்தின் முன்பு உட்கார்ந்து ரசித்ததும், அடுத்த சில கணத்தில் ஒட்டு மொத்த அழுக்கையும் திரட்டி வரும் கூவத்தின் கரையில் அமர்ந்து கசப்புகளை ருசிப்பதும் எனக்கே விசித்திரமாக இருந்தது.

அதற்குள் என் திடீர் வருகையும், முத்துக்கண்ணுக்கு பணம் கொடுத்த கொடைத் தன்மையும் அந்த மக்களிடையே பரவிவிட்டது. எதிர்பார்ப்பு நிறைந்த பார்வையுடன் நண்டு சிண்டு முதல் பலரும் என்னைச் சுற்றிக் குவிந்தனர்.

’’ஏஞ்சாமி… எங்களுக்கும் துட்டு கொடுப்பியா…’’ இடுப்பில் கைக்குழந்தையுடன் இருந்த ஒருத்தி ஆர்வமாய்க் கேட்டாள்.

’’பணம் கொடுத்தா என்ன செய்வீங்க..?’’ என்று கேட்டதும், ‘‘உம் பேரைச் சொல்லி நாலுநாள் நல்ல சாப்பாடு துண்ணுவோம்…’’  என்றாள் வேறொருத்தி.

’’தருகிறேன். ஆனால் எல்லோருக்கும் என்னால் பணம் தரமுடியாது. அதனால் உங்களில் ஐந்து பேருக்கு மட்டும் பணம் தருகிறேன். எல்லோருக்கும் சமமாக தர மாட்டேன். அதாவது ஒருவருக்கு நூறு ரூபாய் என்றால் இன்னொருவருக்கு  ஐநூறு, ஆயிரம் என்று ஏதாவது ஒரு தொகை தருவேன். நான் பணம் தரவேண்டிய ஐந்து பேரை மட்டும் நீங்கள் அடையாடம் காட்டுங்கள்…’’ என்றேன்.

அந்தக் கூவத்துப் பிரஜைகளுக்கு என் நிபந்தனைகள் பிடிக்கவில்லை. பணம் என்பது மாயப் பிசாசு போன்றது. தனக்கு கிடைக்கிறதோ இல்லையோ, தன் பக்கத்தில் இருப்பவனுக்கு தன்னைவிடக் கூடுதலாக எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்ற எண்ணம்தான் எல்லா மனிதர்களிடமும் உண்டு.  யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் ஐந்து பேர் மட்டும் வாங்கி, அனைவருக்கும் பங்கு போட்டுக் கொடுப்போம் என்ற யோசனை அவர்களுக்கு வராது. அப்படிப்பட்ட  ஒற்றுமைக்கு நிச்சயம் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தே அப்படியொரு நிபந்தனை போட்டேன்.

கொஞ்சநேரம் கசகசவென பேசிக் கொண்டார்கள். சிறிதுநேரத்தில் ஒருவன் கூட்டத்தில் இருந்து முன்வந்து, ‘‘அதெல்லாம் இன்னாத்துக்கு சாமி.. என்னா முடியுமோ அதை, நீயே எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடு… இல்லாங்காட்டி பேமானிங்க அடிச்சிக்கினு டேசனுக்குப் பூடுவானுங்க…’’ என்றான்.

’’உங்கள் ஒற்றுமை நீடுழி வாழட்டும்… எவருக்கும் பணம் தருவதாக இல்லை…’’ என்றபடி மீண்டும் கூவத்தைப் பார்த்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *