குறைந்த உணவு, நிறைய உறக்கம், நல்ல நடை ஆகிய மூன்றையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க முடியுமா, அதுதான் 100 ஆண்டுகள் வாழ்வதற்கான வலுவை உடலுக்குக் கொடுக்கும் என்றதும் சகுந்தலா மலைத்துநின்றாள். அப்படியெல்லாம் வாழ முடியுமா என்று தயங்கியவளுக்கு, கடைசி ரகசியத்தையும் எடுத்துரைத்தார் ஞானகுரு.

‘’மனிதனின் உடல் 100 ஆண்டுகள் வாழக்கூடியதா இல்லையா என்பது, உடலின் அமைப்பைப் பொறுத்தது அல்ல, மனதின் வலிமையைப் பொறுத்தது’’ என்று ஞானகுரு சொன்னதும் ஆச்சர்யமானாள் சகுந்தலா.

’’அதெப்படி சாத்தியம். வலிமை இல்லாத உடலில் மனம் மட்டும் வலிமையாக இருந்தால், அது ஆயுளை நீட்டிக்குமா?’’ என்று கேட்டாள்.

‘’மனதிற்கு உடலின் வலிமையைப் பற்றிய கவலை ஒருபோதும் கிடையாது பெண்ணே. அது நினைத்த நேரத்தில் நிலவில் இறங்கக்கூடியது. ஆயிரம் பேர் எதிரே வந்தாலும் அடித்து நொறுக்கும் ஆசை கொண்டது. அதனால், நீண்டநாள் வாழும் பேராசை மனதுக்கு வேண்டும். எப்படியாவது நூறு நாட்கள் வாழவேண்டும் என்று உடல் விரும்பலாம். ஆனால், மனம் ஆயிரம் ஆண்டுகள் வாழமுடியுமா என்று ஆசைப்படும். நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்றால், அப்படித்தான் ஆசைப்பட வேண்டும்.

அதற்கு முதல் படி என்ன தெரியுமா? என்ன வயது என்பதையும், இன்றும் நாளையும் என்ன நாள் என்பதையும் மறந்துவிடு. இனி, ஒவ்வொரு நாளும் உனக்கானது என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்.

முடிந்த வரையிலும் குடும்பம், நட்பு, உறவினர்கள் என்ற வட்டத்தைவிட்டு விலகியே நில். ஏனென்றால், நீ சிலருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் மற்றவர் உன்னை கட்டுப்படுத்துவதும் மனதை காயப்படுத்தும். புதுப்புது இடங்களை, புதுப்புது மனிதர்களை சந்தித்துக்கொண்டே இரு. நாளைய பற்றிய கவலையை மறந்து இன்றைய தினத்தில் மட்டுமே வாழு. நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடாது பற்றிக்கொள். 100 ஆண்டு மட்டுமல்ல, காலம் உள்ள வரையிலும் நீ வாழ்வாய்” என்று ஞானகுரு முடித்ததும் சகுந்தலாவிடம் முதன்முதலாக  புன்னகை வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *