ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர்.
‘’அடுத்த வாரம் குழந்தைக்கு பர்த் டே வருது, எப்படியாவது வேலையைக் குறைச்சுட்டு வரப் பாருங்க..’’ என்று ராதை அடிக்குரலில் அழுத்தமாகப் பேசினாள்.
‘’எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது, அன்னைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்குது. நான் போய்த்தான் ஆகணும்..’’ என்றதும் முகம் சுருங்கி திரும்பி அமர்ந்தாள். அவர்கள் சம்பாஷணையைக் கேட்டபடி அருகே படுத்திருந்த ஞானகுரு, ‘’பணம் உன்னை ஓட வைக்கிறது. இந்த குழந்தைக்காகவும், குடும்பத்துக்காகவும்தானே ஓடுகிறாய்..?” என்று கேள்வியை வீசினார்.
இதனை எதிர்பாராத ராமன் சற்றே திகைத்தாலும், ‘’ஓ… உங்களுக்கு தொந்தரவு தர்ற மாதிரி பேசிட்டோமா…? மன்னிச்சிடுங்க சாமி. உங்களுக்குத் தெரிஞ்சது, இவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது. சம்பாதிக்கிற வயசில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சம்பாதிக்கணும், அதை கொஞ்சம் தெளிவா இவளுக்குத் தெரியுற மாதிரி சொல்லுங்க சாமி…’’
‘’எனக்கு பணமே வேண்டாம்…’’ கோபித்தபடி திரும்பியமர்ந்தாள் ராதை.
‘’உன் மகன் பிறந்த நாள் அன்று நடைபெறும் பிசினஸ் சந்திப்பு மூலம் உனக்கு எவ்வளவு பணம் கிடைக்கலாம்…’’
‘’அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது சாமி… ஆனா அது ஒரு நல்ல டீல்..’’
‘’நீ இல்லைன்னா, வேறு யாராலும் அதை செய்ய முடியாதா..?’’
‘’செய்யலாம் சாமி, என்ன இருந்தாலும் நாமே முடிக்கிற மாதிரி வருமா…? அடுத்த வருஷம் பிறந்த நாளை கொண்டாடிக்கலாம் நல்லா’’
‘’அப்படியா..? ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள். நீ எந்த வருடமும் உன் குழந்தை பிறந்த நாளை அருகிலிருந்து கொண்டாட மாட்டாய் மகனே, ஏனென்றால் உனக்குத் தேவை பணம், குடும்பம் அல்ல…’’ என்று சொன்னதும் அதிர்ந்தான்.
‘’நீங்கதானே, பணம் முக்கியம்னு சொன்னீங்க.?”
‘’முக்கியம்தான். சாப்பிடவும், வீடு வாங்கவும், ஒரு கார் வாங்கவும் அவசியம்தான். மீண்டும் ஒரு வீடு வாங்கவும், இன்னொரு கார் வாங்கவும் நீ நேரத்தை ஒதுக்கிக்கொண்டே இருந்தால் எப்போதும் குடும்பம் உன் நினைவுக்கே வராது…’’
குற்றவுணர்வுடன் தலை குனிந்தவன், ‘’நான் எதுக்கு முக்கியம் கொடுப்பதுன்னு தெரியலையே சாமி… பணம் போயிடுமேன்னு பயமா இருக்குது..?’’ என்றான்.
‘’பணம் போனால் சம்பாதிக்க முடியும். குடும்பம் அப்படியல்ல மகனே. உன் குடும்ப சந்தோஷத்துக்கு நீ ஒதுக்கும் நேரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கணக்குப் போடு. அந்த நேரத்தில் நீ சம்பாதிக்கும் பணத்துக்கு ஈடாக, உன் மனைவியின் சந்தோஷமும், குழந்தையின் புன்னகையும் இருக்குமா என்று பார்… அவை போதாது என்று தெரிந்தால் நீ பணத்தையே தேடு’’ என்று அமைதியானார்.
கொஞ்சநேரம் அங்கு அமைதி நிலவியது. ‘’இந்த வருஷம் குடும்பத்தோடு பிறந்த நாள் கொண்டாடப்போறோம், ஆசிர்வாதம் செய்யுங்க சாமி…’’ என்று எழுந்து வணங்கினான் ராமன்