புதிய முயற்சிகள் என்றால் அதற்கு உதாரணமாக நாகராஜனைக் காட்டலாம். ஆம், அவர் செய்யாத தொழில் முயற்சி எதுவுமே இல்லை. அதாவது, அவர் செய்யாத தொழில் என்று எதுவுமே இல்லை. மரக்கடை, டீக்கடை, பலசரக்குக்கடை, மாவு மெஷின், லாரி டிரான்ஸ்போர்ட் என்று கண்ணுக்குத் தென்பட்ட தொழில் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால், அவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கவே இல்லை. அதற்கு தன்னுடைய தலையெழுத்துத்தான் காரணமா என்று ஞானகுருவிடம் கேட்க வந்தார். எல்லா முயற்சிகளிலும் தோற்றுப்போன கையாலாகத்தனம் அவரிடம் தென்பட்டது.
எப்படியெல்லாம் சிரமப்பட்டேன். எத்தனை முயற்சிகள் செய்தேன் என்று ஞானகுருவிடம் விலாவாரியாக பேசி, எனக்கு மட்டும் ஏன் எல்லா தொழிலிலும் நஷ்டம் என்று கேட்டார்.
உனக்கு கிரிக்கெட் விளையாடுவதற்குத் தெரியும். அதில் டக் அவுட் ஆகிவிட்டாய் என்றதும், கைப்பந்து விளையாடப் போவாயா..? அப்படியே போனாலும், அதில் உனக்கு வெற்றி கிடைக்குமா?
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லையே..?
உனக்கு எந்த தொழில் மீது ஆர்வமோ அந்த தொழிலில் மட்டும் இறங்கு. அதில் தோல்வி அடைந்தால், ஏன் தோல்வி கிடைத்தது என்பதைக் கண்டறிந்து, அந்த குறையை நிவர்த்தி செய்து மீண்டும் அதிலேயே இறங்கு. அதன்பிறகும் தோல்வி வந்தால், அதுபோன்று தோல்விகள் மீண்டும் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று யூகித்து நன்றாக முடிவெடுத்து மீண்டும் அதே தொழிலில் இறங்கு. அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
உலகில் எல்லா தொழிலும் வெற்றிகரமானதுதான். மரக்கடை, டீக்கடை, பலசரக்குக்கடைகளை வெற்றிகரமாக நடத்துபவர் யாருமே இல்லையா..? அவற்றை நடத்தத் தெரியவில்லை என்றால், சூட்சுமத்தை அறியும் வரை அதிலேயே இரு. ஒரு நாள் வெற்றி நிச்சயம் உன் கைக்கும் வந்து சேரும் என்றதும், தெளிவான மனதுடன் கிளம்பிப் போனார் நாகராஜன்.