மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தான் ராமச்சந்திரன். தனிமையில் சந்திக்கவேண்டும் என்று வந்திருப்பது தெரிந்தது. பக்கத்தில் வந்து நின்றவன், ‘சாமி… எனக்கு வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வீட்டுக்குக் கொண்டுவந்ததும் எங்கே வைக்க வேண்டும் என்பது குழப்பமாக இருக்கிறது. பணப்பெட்டியில் வைக்கவேண்டும் என்று நான் சொல்கிறேன், பூஜை அறையில் வைத்து இரண்டு நாட்கள் கழித்து எடுக்க வேண்டும் என்று என் மனைவி சொல்கிறாள். எது சரியென்று சொல்லுங்களேன்..’ ரகசியம் கேட்பது போன்று மெலிந்த குரலில் கேட்டான்.
‘’பணத்தை ஒரு நாள்கூட வீட்டில் வைத்திருக்காதே, தூக்கி வெளியில் போடு’’ என்றபடி மீண்டும் இலைகளை அள்ளி விளையாடினார் ஞானகுரு.
‘’என்ன சாமி, இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க..?’’
சிரித்தபடி தொடர்ந்தார் ஞானகுரு. ‘’பணம் என்பது ஒரு செடியைப் போன்றது. அது வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அதை பெட்டிக்குள் அல்லது பூஜை அறையில் அடைத்துவைப்பது அதன் கழுத்தை நெரிப்பதற்கு சமம்…’’
‘’இன்னமும் புரியலை சாமி…’’
‘’பணத்துக்கு குட்டி போடும் குணம் உண்டு. ஆம், பணத்தை வங்கியில் போடு, இடம் வாங்கு, தங்கம் வாங்கு அல்லது தெளிவான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வுசெய்து போடு. அதுவும் இல்லை என்றால், யாருக்காவது கடனாகக் கொடு. இப்படி என்ன செய்தாலும், அது தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும். உன் பாஷையில் சொல்வது என்றால், பணம் குட்டி போடும். அதை உன்னுடைய வீட்டில் எந்த இடத்தில் பூட்டி வைத்தாலும், மூச்சு திணறத்தான் செய்யும். எந்த கோடீஸ்வரனும் வீட்டில் செல்வத்தை முடக்கி வைப்பதில்லை. பல புதிய நிறுவனங்களை வாங்குவதும், உற்பத்தி பொருட்களை வாங்குவதுமாக கைக்கு வரும் பணத்தை செலவு செய்துகொண்டே இருப்பார்கள்…’’ என்று சொல்லி முடித்தார்.
பணத்துக்கு புதிய அர்த்தம் புரிந்து சென்றான் ராமச்சந்திரன்.