உச்சி வெயிலின் கொடுமையை கண்டுகொள்ளாமல், பீச் மணலின் வெப்பத்தை பொருட்படுத்தாமல், உப்புக்காற்றின் கசகசப்பை மதிக்காமல், கடல் அலைகளை ரசிப்பதுபோல், உரசி உட்கார்ந்து சில ஜோடிகள் காதலிப்பதை பார்த்திருப்பாய். அந்த ஜோடிகளுக்கு அது புனிதமான காதலாக இருக்கலாம். ஆனால், அவர்களை பார்க்கும் மற்றவர்களுக்கு, அது தினவெடுத்த காதலாக தெரியும். ஏனென்றால் அடுத்தவர் காதல் என்றால் எல்லோருக்குமே இளப்பம்தான்.

அப்படியென்றால் சஹானாவுடைய காதல் எப்படிப்பட்டது?

பக்கத்துவீட்டு ராஜசேகரனை உயிருக்கு உயிராக காதலித்தாள் சஹானா. வெவ்வேறு மதம் என்றாலும், அதைப் பற்றிய கவலையும் பயமும் அவளுக்கு இல்லை. அவள் உறுதியைக் கண்டு பிரமித்துத்தான் ராஜசேகரும் காதலுக்கு சம்மதித்தான். இருவரும் நல்லபடியாக காதல் செய்தார்கள், எதிர்காலம் குறித்து நிறைய கனவுகள் வளர்த்தார்கள். குடும்பத்தாருக்கு விஷயம் தெரியவந்தால் நிச்சயம் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிந்தும் காதலித்தார்கள். அவர்கள் நினைத்தபடியே நடந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இருவரும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நின்றார்கள்.

வெட்டிப்போடுவேனே தவிர, ராஜசேகரனுக்கு கட்டித்தர மாட்டேன் என்று சஹானா வீட்டில் பிடிவாதமாக சொன்னார்கள். அதேநேரம் ராஜசேகரனுக்கு அவசரமாக சொந்தத்தில் திருமணம் முடிக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், இருவரும் காதல் பிடிவாதத்தில் இருந்தார்கள். காதல் தவிர வேறு எந்த சமாதானத்தையும் ஏற்க மறுத்தார்கள். ஒரு வருடம் கடந்தது. இவர்களது காதலை பெற்றோர்களால் கரைக்க முடியவில்லை. காதலர்களின் உறுதி பெற்றோர்களை தோல்வி அடையச்செய்தது. அதனால் சிம்பிளாக திருமணம் செய்துவைப்போம் என்று இரண்டு வீட்டாரும் முடிவுக்கு வந்தார்கள். அடுத்த மாதத்தில் திருமணம் முடித்துவிடலாம் என்று தேதி குறித்தார்கள்.

அந்த நேரத்தில் ராஜசேகருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அவசரமாக ஆறு மாத பயணமாக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் ஆறு மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றான் ராஜசேகர். பெற்றோர் இத்தனை தூரம் இறங்கிவந்திருக்கும் நிலையில், திருமணத்தை தள்ளிப்போடுவது சரியில்லை. திருமணத்தை முடித்துவிட்டு வெளிநாடு போகலாம் என்று சொன்னாள் சஹானா. அவசர அவசரமாக திருமணம் முடிக்கவேண்டாம், வெளிநாடு போய்வந்ததும் சிறப்பாக நடத்துவோம் என்று சமாதானம் சொன்னான் ராஜசேகரன்.

நீ சொன்னதை ராஜசேகரன் கொஞ்சமும் மதிக்கவே இல்லை, நீ அவனுக்காக குடும்பத்தை எதிர்த்து காதல் செய்தாய், ஆனால் அவனுக்கோ உன் மீது காதல் இல்லை என்று சிலர் சஹானாவை தூண்டிவிட்டார்கள்.

அதனால் ஆத்திரமானாள் சஹானா. நான் வேண்டுமா அல்லது வேலை வேண்டுமா என்று முடிவாக கேட்டாள். அதுவரையிலும் சஹானாவிடம் இப்படியொரு ஆவேசத்தை ராஜசேகரன் பார்த்ததே இல்லை. யோசித்து சொல்கிறேன் என்று மிரட்சியுடன் நகர்ந்துவிட்டான். பதில் கிடைக்காத கோபத்தில் எரிச்சலானாள் சஹானா. கோபம் கண்களை மறைக்கவே, வேகவேகமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிட்டாள். அவள் மரணத்திற்கு காரணம் என்று ராஜசேகரனை போலீஸ் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டது.

மேலோட்டமாக பார்த்தால் சஹானா தீவிரமாக காதலித்தவள் போலவும் ராஜசேகரன் ஏமாற்றியதாகவும் தெரியும். உண்மையான காதலி என்றால்… ராஜசேகரனை வாழ்த்தி வழியனுப்பியிருக்க வேண்டும் சஹானா. அவள் வேண்டாம் என்றாலும் சிம்பிள் கல்யாணமாவது முடிந்தபிறகுதான் போவேன் என்று அடம் பிடித்திருக்க வேண்டும் ராஜசேகரன். ஆனால் இருவருக்குமே காதல் பற்றிய புரிதல் இல்லை. அதனால்தான் இவர்களது காதல் தோற்றுப்போனது.

ஒவ்வொரு நொடியும் மனிதன் மாறிக்கொண்டே இருக்கிறான் என்பதுதான் அறிவியல் உண்மை. உடல், செயல், சிந்தனை, அறிவு, ஆற்றல், ஆசை போன்ற எல்லாமே தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இதனை காதலர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேற்றுப்போல் நீ இன்று இல்லை என்பதுதான் பெரும்பாலான காதல் முறிவுக்குக் காரணம். நேற்றுப்போல் இன்றும் இருந்தால் அவன் மனிதன் இல்லை, கல். இந்த உண்மை புரியாமல்தான்,  நம்பி மோசம் போய்விட்டேன் என்று பிரிகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள், சிலர் கொலையும் செய்கிறார்கள்.

  • உண்மையில் காதல் என்பது என்ன?

தாய் தரும் அன்பை, வேறு ஒரு பெண்ணிடம் ஆண் தேடுவது காதல். அதேபோல் தந்தை தரும் பாதுகாப்பை வேறு ஒரு ஆணிடம் தேடுகிறாள் பெண். பெற்றோர்களால் காலம் முழுவதும் காவல் இருக்கமுடியாது என்பதால் இயற்கை ஏற்படுத்தியிருக்கும் விளையாட்டுதான் காதல்.

  • காதல் என்பது ஹார்மோன் அரிப்பு என்கிறார்களே?

காதல் மட்டுமல்ல, மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் ஹார்மோன்தான். படிப்பது, வேலை செய்வது, சண்டை போடுவது, ஊர் சுற்றுவது, சந்தோஷமாக இருப்பது தற்கொலை போன்ற எல்லாமே ஹார்மோன் சமாச்சாரம்தான்.

  • காதல் அவசியம்தானா… காதல் திருமணத்தை தடை செய்துவிடலாமே?

மற்ற ஜீவராசிகளிடம் இருந்து மனிதன் மாறுபட்டு வாழ்வதற்கு வழிவகை செய்வது காதல்தான். விலங்கு, பறவைகளின் காதல் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே. மனிதனின் காதல் மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. காதல்தான் மனிதனை குடும்பமாக இயங்கவைக்கிறது. காதல்தான் மனிதனை செம்மைப்படுத்தி சாதனைகள் செய்யத்தூண்டுகிறது. அதனால் மனிதகுலம் தோன்றிய காலம் முதல் இருந்துவரும் காதலுக்கு தடைபோட எந்த ஒரு சக்தியாலும் முடியாது. காற்றைப் போல் காதல் எங்கேயும் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். 

  • காதலில் ஜெயிப்பதற்கு எளிய வழிகள் இருக்கின்றனவா?

காதலுக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு காதல் செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வருமானம் இருப்பது காதலின் முதல் தகுதி. இருவருக்கும் நல்ல உடல் நலம் வேண்டும். ஒருவர் வழியில் மற்றவர் குறுக்கிடாத சுதந்திரம் வேண்டும். நான் வெற்றியடைவதைவிட, நான் விரும்புபவர் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கவேண்டும். சுருக்கமாக சொல்வது என்றால் பிறருக்காக வாழ்தலே காதல்.

  • காதலின் முடிவு திருமணம்தானே..?

காதலின் முடிவும் காதல்தான். திருமணத்தில் முடிவதுதான் உண்மையான காதல் என்ற எண்ணம்தான் காதல் பற்றிய தவறான புரிதலை உண்டாக்குகிறது. காதலர்கள் பிரிந்து, வெவ்வேறு வழியில் சென்றால்தான் வெற்றியடைய முடியும் என்று தோன்றினால், அப்படி பிரிவதும் காதலே. தங்கள் காதலால் சிலருக்கு துன்பம் ஏற்படலாம் என்ற காரணத்தால் பிரிவதும் உண்மையான காதலே. திருமணத்தில் காதல் முடிகிறது என்ற எண்ணம்தான் ஏகப்பட்ட விவாகரத்துக்கு காரணமாக இருக்கிறது. காதல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

  • வாழ்நாளில் ஒரு முறைதான் காதல் வருமா?

மரங்கள் காலம் முழுவதும் பூத்துக்கொண்டே இருப்பதைபோல் காலம் முழுவதும் காதல் வந்துகொண்டே இருக்கும். முதல் காதல் மறக்கமுடியாததாக இருக்கலாம். சேரமுடியாத காதல் தெய்வீகமாக தெரியலாம். உண்மையில் காதல் என்பதும் கடவுள் என்பதும் வேறல்ல. கடவுளால் உலகில் உள்ள அத்தனை பேரையும் காக்கமுடியும் என்றால் உன்னால் அத்தனை பேரையும் காதலிக்க முடியும். எனக்கு மட்டுமே காதல் சொந்தம் என்று சுருக்குவதுதான் ஆபத்து. பழி வாங்குவதும், ஆசிட் வீசுவதும் சுயநல காதல். சேர்ந்து தற்கொலை செய்வது முட்டாள்தனம். காதல் தோல்விக்காக தாடி வளர்ப்பதும், ஓடிப்போவதும் முதிர்ச்சியின்மை.

  • ஒரே வார்த்தையில் காதல் என்பது…?

விட்டுக்கொடுத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *