கடன், வறுமை, நோய், குடும்ப தகராறு போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைப் போன்றே, மாணவர்களின் தற்கொலையும் அதிகமாகிறது. சின்னச்சின்ன தோல்விகள், நிராசைகள், வருத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டுபோகிறது இளைய சமுதாயம்.

தோல்வி அடையாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஆனால் தோல்வியை எப்படி பார்க்கவேண்டும் என்பதற்காக இந்தக் கதை.

பள்ளிப் பருவத்தில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான் விவேகானந்தன். அதிகநேரம் பந்துடன் செலவழிக்கும் ஆசையில் அதிகாலையிலேயே மைதானத்திற்கு சென்றுவிடுவான். மாலை பள்ளிக்கூடம் முடிந்தபிறகும் மைதானத்திலேயே கிடப்பான். அதனால் பந்தை கடத்திச்செல்வது, தடுத்துநிறுத்துவது, நீண்டநேரம் ஓடுவதில் கில்லாடியாக இருந்தான். பள்ளியின் கால்பந்து குழுவில் சேர்ந்து, மாநில அளவுக்கு விளையாடினான். அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்தபிறகும் கால்பந்து மீது மோகம் அதிகமானதே தவிர, குறையயவே இல்லை. அதனால் கல்லூரி படிப்பு முடிந்ததும், முழுநேர கால்பந்து விளையாட்டில் இறங்குவதற்கு விவேகானந்தன் முடிவு செய்தான். அவன் ஆசைக்கு பெற்றோரும் ஊக்கம் கொடுத்தார்கள்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஒரு நாள் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டான். வலது காலில் லாரி ஏறி இறங்கியது. அதனால் வேறு வழியே இல்லாமல் முழங்கால் வரையிலும் கால் எடுக்கவேண்டிய சூழல் உண்டானது. அவ்வளவுதான், தன்னுடைய வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனதாக அதிர்ந்தான் விவேகானந்தன். தன்னுடைய ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் கலைந்துபோன பிறகு இந்த உலகில் உயிர் வாழத்தான் வேண்டுமா என்று சிந்தித்தான். விவேகானந்தனை போலவே அவன் பெற்றோரும் ஆழ்ந்த துன்பத்தில் ஆழ்ந்தார்கள். தங்கள் ஒரே மகனுக்கு இப்படியொரு கொடுமை நிகழவேண்டுமா என்று அழுது தீர்த்தார்கள்.

அப்போது விவேகானந்தன் முன்பு இரண்டே கேள்விகள் இருந்தன. நொண்டி காலுடன் வாழ்க்கையை நடத்தி பெற்றோருக்கு ஆதரவாக இருப்பது அல்லது தற்கொலை செய்துகொண்டு இந்த கொடிய துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது. மிகவும் நன்றாக சிந்தித்து, பெற்றோருக்காக வாழத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் விவேகானந்தன்.

படிப்பை பாதியில் நிறுத்தினான். தந்தைக்கு உதவியாக அவர் நடத்திய ஹோட்டல் கல்லாவில் அமர்ந்தான். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் விருப்பம் எதுவாக இருக்கிறது என்று தீவிரமாக ஆய்வு செய்தான். ஹோட்டலை நவீனமாக மாற்றினான். வெளியூரில், வெளி மாநிலத்தில், வெளி நாட்டில் கிடைக்கும் வித்தியாசமான உணவுப்பண்டங்கள் தங்கள் ஹோட்டலிலும் கிடைக்குமாறு செய்தான். இரண்டே வருடத்தில் ஹோட்டல் தொழில் ஓஹோவென வளர்ந்தது. அக்கம்பக்கத்து ஊர்களில் சில கிளைகளைத் திறந்தான். ஐந்தே ஆண்டில் மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்துவிட்டான் விவேகானந்தன். தங்கள் மகனுடைய முன்னேற்றத்தைக் கண்டு மனதார சந்தோஷப்பட்டார்கள் பெற்றோர்கள். வியாபாரத்தில் அவ்வப்போது புதுமைகளை புகுத்தி இன்னமும் முன்னேறிக்கொண்டே இருக்கிறான் விவேகானந்தன். இப்போது ஒரு கால்பந்து கிளப் தொடங்கி, ஏழை மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறான்.

கால்பந்து விஷயத்தில் தோற்றுப்போயிருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டான் விவேகானந்தன். தன்னுடைய ஆசையை, மோகத்தை வேறுவழியில் திருப்பி ஜெயித்திருக்கிறான். ஏதேனும் ஒரு வகையில் அங்கீகாரம் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டதை, ஹோட்டல் தொழிலில் சாதித்திருக்கிறான். இதற்கு அடிப்படை காரணம் தோல்வியை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதுதான்.

எந்த ஒரு விளையாட்டிலும் ஒருவருக்குத்தான் வெற்றி கிட்டும். மாரத்தான் போட்டியில் ஆயிரம் பேர் ஓடினாலும் ஒருவரால்தான் முதல் பரிசு பெறமுடியும். மற்ற அனைவரும் தோற்றுப்போனவர்கள் அல்ல, வெற்றிபெற முடியாதவர்கள். தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்பவரால்தான், அடுத்து வெற்றிபெற முடியும். விவேகானந்தன் போன்று இந்த உலகில் எத்தனையோ பேர், தங்கள் லட்சியத்தை மாற்றிக்கொண்டு மாபெரும் வெற்றியாளர்களாக மாறியிருக்கிறார்கள்.

அதனால் தோல்வி என்பது வெற்றியின் மறுபக்கம் என்பதை குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். தன்னைப்பற்றி ஒருவன் கொண்டிருக்கும் அகந்தையை, அதீத தன்னம்பிக்கையை, கர்வத்தை அடித்து நொறுக்கிறது தோல்வி. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் ஒரு மனிதனை வெற்றிக்குத் தகுதியாக பக்குவப்படுத்துகிறது தோல்வி.

1. ஆனால்…. எனக்கு மட்டும் எப்போதும் தோல்வியே கிடைக்கிறதே?

தோல்வி என்பது உன்னுடைய பலவீனத்தை சுட்டிக்காட்டும் அளவுகோல். உன்னுடைய பலவீனம் எதுவென்பதை கண்டறிந்தது, அதனை பலமாக மாற்றினால் மட்டுமே வெற்றியடைய முடியும். தோல்வியைக் கண்டு பயந்தவனும், தோல்வி ஏன் ஏற்பட்டது என்பதை அறியாதவனும் வாழ்நாள் முழுவதும் தோற்றுக்கொண்டேதான் இருப்பான். உன் ஒவ்வொரு தோல்வியிலும் உனக்கு கிடைத்த பாடத்தை மட்டும் உற்றுப்பார், வெற்றிக்கான சூத்திரம் தெரியும். அதனால் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியைப் போலவே கொண்டாடு.

2. தோல்வியை எப்படி வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும்?

குழந்தை நடக்கத் தொடங்கும்போது ஏராளமான முறை கீழே விழும். உடனே கைதட்டி பாராட்டி, மீண்டும் எழுந்து நடப்பதற்கு நம்பிக்கை கொடுக்கிறோம். அப்போதுதான் அந்தக் குழந்தை விரைந்து நடக்கும். நடப்பதற்கு பழகும் குழந்தை கீழே விழுவதுபோலவே உனக்குக் கிடைக்கும் தோல்விகளை பார்.

ஒருவன் தோல்வியை எதிர்த்து மீண்டும் மீண்டும் போராடும்போது, அவனை வெற்றியாளனாக உலகம் மதிக்கிறது. தோல்வியை நினைத்து பயப்படுவனை உலகம் ஏளனம் செய்கிறது.

3. அப்படியென்றால் தோல்விதான் நல்லதா?

தோல்வியை நல்லதாக அல்லது கெட்டதாக எடுத்துக்கொள்வது உன் கையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக தெரிந்துகொண்டால் போதும். அது, தோல்வி நிரந்தனமானது அல்ல. தோல்வியைக் கண்டு அச்சப்படாதே. அதன் நிழலில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *