தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். ஏனென்றால் ஒருவர் படும் வேதனையை மற்றவர்களால் எப்போதும் முழுமையாக உணரமுடியாது. யார் வந்து ஆறுதல் சொல்வதாலும் வலி நின்றுவிடுவதில்லை. அதனால்தான் வலியின் கொடுமை தாங்கமுடியாமல் தினமும் எத்தனையோ பேர் தற்கொலை செய்கிறார்கள்.

நோயினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நபரும், இந்த உலகத்திலேயே தனக்கு மட்டும்தான் இப்படி கொடுமையாக வலிக்கிறது என்று எண்ணுகிறார்கள். நோயினால் வேதனை அனுபவிக்கும்போது, தங்கமுடியாமல் வலிக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பது பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை, ஏன் மருத்துவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால்தான் வலி, வேதனையை அனுபவிப்பவன் தப்பும் தவறுமாக முடிவு எடுக்கிறான்.

இந்த நேரத்தில்தான் நாத்திகன் ஆத்திகனாகிறான், ஆத்திகன் நாத்திகனாகிறான். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்றாலும் மாறுகிறான். இன்பமும் துன்பமும், வெற்றியும் தோல்வியும், ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை வசதியாக மறந்துவிடுவான். இந்த வேதனைக்குக் காரணம், ஒருவேளை கடவுள் நிந்தனையாக இருக்குமோ என்று நாத்திகன் அச்சம் கொள்வான். கடவுள் இருந்திருந்தால் தன்னை இந்த வலியில் இருந்து காப்பாற்றியிருப்பாரே என்று ஆத்திகன் சந்தேகம் கொள்வான். இப்படி மாறியவன்தான் செல்வேந்திரன்.

செல்வேந்திரனின் அப்பா திராவிடர் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அதனால் செல்வேந்திரனும் நாத்திகனாகவே வளர்ந்தான். படித்துமுடித்து நல்ல வேலை கிடைத்ததும் பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டான். இருவரும் ஆதர்ச தம்பதியாக வாழ்ந்தார்கள். ஆனால் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகள் கடந்தபிறகும் குழந்தை இல்லை. அவன் மனைவி பூர்ணிமாவுக்கு கடவுள் பக்தி அதிகம். அவளை தடுக்கவில்லை செல்வேந்திரன். அதனால் அவள் போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை.

குழந்தைக்காக இருவரும் சேர்ந்து நகரில் பிரசித்திபெற்ற மருத்துவரை சந்தித்தார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் சிகிச்சை எடுத்தபிறகும் குழந்தை பிறக்கவில்லை. ஒரு ஜோசியனை பார்த்துவிட்டு வந்தாள் பூர்ணிமா. நீங்கள் கடவுளை மதிக்காமல் இருப்பதால்தான் நமக்கு குழந்தை பிறக்கவில்லை என்று ஆத்திரத்தோடு சொன்னாள். நான் கடவுள் மறுப்பாளன் என்று தெரிந்துதானே திருமணம் முடித்தாய் என்று சண்டை போட்டான். அதே நேரத்தில் செல்வேந்திரனின் ஆண்மையை சிலர் கிண்டல் செய்து பேசத்தொடங்கினார்கள். இது செல்வேந்திரனுக்கு தாங்கமுடியாத அவமானத்தையும், வேதனையையும் கொடுத்தது. ரோட்டில் யார் தன்னை பார்த்து சிரித்தாலும், தன்னுடைய ஆண்மையை கேலி செய்வதாகவே நினைத்தான். அதனால் நண்பர்களை பார்த்து பேசுவதை தவிர்த்தான். ஆனால் அவன் மனதுக்குள் முதன்முதலாக சந்தேகம் எழுந்தது. இரண்டு பேருக்குமே உடலில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் தெய்வகுற்றம் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தொடங்கினான்.

அந்த நேரத்தில்தான் சிறு விபத்தில் சிக்கினான் செல்வேந்திரன். தலையில் அடிபட்டிருந்தும் வேறு பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. காலில் மட்டும் ஆழமான காயம் ஏற்பட்டது. என்னுடைய தாலி பாக்கியத்தால்தான் நீங்கள் பிழைத்திர்கள் என்று சொன்னாள் பூர்ணிமா. உடல்நிலை தேறவேண்டும் என்பதற்காக செல்வேந்திரன் உடம்பில் திருநீறு பூசிவிட்டாள். வேதனையை மீறி அதனை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டான் செல்வேந்திரன்.

எழுந்து நடக்கமுடியாதபடி, செல்வேந்திரனுக்கு கால் கடுமையான வலியைக் கொடுத்தது. நான் யாருக்கும் எந்த துன்பமும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று கேள்விகேட்கத் தொடங்கினான். கடவுளை சின்ன வயதில் இருந்தே திட்டியதற்கான வினை என்று பூர்ணிமா சொன்னதை யோசிக்கத் தொடங்கினான். அவன் கடவுள் மீது கொஞ்சமாக நம்பிக்கை வைத்த நேரத்தில்தான் அந்த திருப்பம் நிகழ்ந்தது.  ஆம், மருத்துவ சிகிச்சையாலோ அல்லது கடவுள் கிருபையாலோ பூர்ணிமா கர்ப்பமானாள். அதுவரை அறைகுறை மனதுடன் கடவுள் நம்பிக்கையில் இருந்த செல்வேந்திரன், முழுபக்தனாக மாறியே விட்டான். வலி, வேதனை, அவமானத்தில் இருந்து தப்புவதற்கு ஆத்திக அவதாரத்தை எடுத்துவிட்டான் செல்வேந்திரன்.

  • பூர்ணிமாவின் பக்திக்காக உண்மையிலே கடவுள்தான் செல்வேந்திரனை ஆன்மிக பாதையில் திருப்பினார் என்று இந்த சம்பவத்தை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

மனிதனின் மூளையால் என்றுமே அளவிட முடியாத பிரமாண்டமான பிரபஞ்சத்தை படைத்தவர் கடவுள் என்றால், மனிதனால் உருவாக்கவே முடியாத உயிர்களை படைத்தது கடவுள் என்றால், அவர் நிச்சயம் செல்வேந்திரன் மனம் மாறுவதற்காக எந்த முட்டாள்தனமான காரியமும் செய்ய மாட்டார். கடவுள் நேரில் வந்து விளையாடும் அளவுக்கு எந்த மனிதனும் தகுதியானவன் அல்ல.

  • கடவுளை கும்பிட்டால் வேதனை, வலி குறையும் என்பது நிஜம்தானே?

கடவுளை கும்பிட்டால் வலி தீர்ந்துவிடும் என்பது உண்மை என்றால், நோயின் வேதனையை பக்தி மாற்றிவிடும் என்றால் இந்த உலகத்தில் மருத்துவமனைகளே தேவை இல்லை. அதனால் வலி, வேதனைகளை பொறுத்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கற்கவேண்டும்.

  • அது எப்படி வலியை ஏற்றுக்கொள்ள முடியும்?

உலகத்திலேயே கொடுமையான வேதனை என்றால், அது பிரசவம் மட்டும்தான். சுயநினைவுடன் இருக்கும் மனிதனின் கையை முறிப்பதற்கு சமமான வேதனையை பிரசவத்தின்போது பெண் அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்தனை கொடுமையான வேதனை என்பதால்தான் பிரசவ நேரத்தில் ஒவ்வொரு பெண்ணும் அலறுகிறாள், கத்துகிறாள், கூப்பாடு போடுகிறாள். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டதும் அதுவரை அனுபவித்த அத்தனை வேதனைகளையும் மறந்துவிடுகிறாள். மீண்டும் அப்படியொரு வேதனையை தாங்கிக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயாராகிறாள். பிரசவம் மட்டுமின்றி, குழந்தை வயிற்றில் இருக்கும் ஒன்பது மாதங்களும் வேதனை தரும் சுமையுடனே வாழ்கிறாள். குழந்தையை சுகமான சுமையாக நினைப்பதால், வலியை விரும்பி ஏற்றுக்கொள்கிறாள் பெண். அப்படித்தான் நோயையும் வலியையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மனதை பழக்க வேண்டும்.

  • பிரசவ வலிக்கு பிரதிபலனாக குழந்தை கிடைக்கிறது, ஆனால் நோயினால் உண்டாகும் வலி, வேதனையை ஏற்றுக்கொள்வதற்குப் பிரதிபலனாக என்ன கிடைக்கும்?

உறுதியான மனம் கிடைக்கும். ஏனென்றால் நோய் என்பது உடலுக்குத்தான் கேடு விளைவிக்கிறது, மனதுக்கு அல்ல. விபத்து நடந்தால், அதனை விபத்தாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் செல்வேந்திரனுக்கு இருந்திருக்க வேண்டும். அவன் நம்பிக்கைவாதியாக இருந்திருந்தால், காலில் காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது, உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். அவன் என்ன இழந்தான் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சமிருக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு விபத்தில் கடவுளை நம்பியவன், நாளை மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டால் கடவுள் மீது நம்பிக்கையை இழப்பான். கடைசிவரை உண்மையை கண்டறியவே மாட்டான்.

  • விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்கும்போது, எதிர்பாராத நோயினால் தாக்கப்பட்டு கொடுமையான வேதனையை அனுபவிக்கும்போது, அதனை எப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும்?

முதலில் நடந்ததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஏனென்றால் நடந்ததை இனி மாற்றவே முடியாது. நான் வண்டி எடுக்காமல் போயிருந்தால் விபத்து நடந்திருக்காது. உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் நோய் பாதித்திருக்காது என்று புலம்பித்தள்ளுவதால் எந்த லாபமும் இல்லை.

அடுத்த தீர்மானம்தான் மிகவும் முக்கியமானது. ஆம், இந்த வலி, வேதனை எல்லாமே விரைவில் தீர்ந்துவிடும். இத்தனை கொடுமையான வலி தொடர்ந்து இருக்காது என்று நம்பவேண்டும். அதனால் துன்பத்தை உண்டாக்கும் வலியை ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டும். எப்படி கர்ப்பிணி வலியை தாங்கிக்கொண்டு குழந்தை பெறுகிறாளோ, அப்படியே நாளைய ஆரோக்கியத்துக்காக இன்றைய வலியை தாங்கிக்கொள். நோயின் வேதனையும் வலியும் நீடித்தாலும் உனக்கு பழகிவிடும்.

  • வலித்தால் அழக்கூடாதா?

நன்றாக அழு. வேதனையை வெளிப்படுத்து. ஆனால் இது நிரந்தரமல்ல, இதோ முடிந்துவிடும் என்ற நம்பிக்கையை மட்டும் வளர்த்துக்கொள்… நீ குணமடைந்தால் நல்லது. செத்துப்போனால் அதைவிட நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *