மனிதனின் உடல் 100 ஆண்டுகள் வாழ்வதற்கு படைக்கப்பட்டதில்லை, எந்த நேரத்திலும் யாருக்கும் மரணம் வரலாம் என்று ஞானகுரு சொன்னதைக் கேட்டு சிந்தனையில் விழுந்தாள் சகுந்தலா. அவளை சமாதானப்படுத்துவது போல் பேசினார் ஞானகுரு.

’’100 ஆண்டுகள் வாழும் அளவுக்கு மனித உடல் படைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உன் கையில் இல்லை. அதனால், அந்த ரகசியத்தை நீ அறிந்துகொள்ள நினைக்காதே. ஆனால், ஒவ்வொருவரும் நீண்ட நாட்கள் வாழமுடியும். அதற்கான ரகசியத்தை சொல்கிறேன் கேள்.

இந்த உலகில் அத்தனை மனிதர்களும் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசை இருப்பதால்தான், யார் தும்மினாலும், ‘நூறாயுசு’ என்று சொல்லும் வழக்கமே வந்தது. இப்போது ஜப்பான் நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் முதியவர்கள் அதிக ஆயுளுடன் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்.

அவர்கள், மூன்று நேரமும் குறைந்த அளவு மட்டுமே உணவு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் கஞ்சி போன்று காய்ச்சிக் குடிக்கின்றனர். திட உணவு என்றால், நன்றாக மென்று தின்கின்றனர். நொருங்கத் தின்றால் நூறு வயது என்று நம்மவர்கள் சொன்னதைத்தான் கடைபிடிக்கின்றனர். உணவுதான் உடலின் ஆயுளைக் கூட்டும் முதல் சூத்திரம். ஹோட்டல் உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் முழுமையாக தவிர்த்துவிடு. உயிர் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிடு, ருசிக்காக சாப்பிடக் கூடாது.

அடுத்தது உறக்கம். எந்த நேரத்தில் எல்லாம் தூக்கம் வருகிறதோ, உடனே உறங்கிவிடு. கஷ்டப்பட்டு கண் விழித்து படிப்பதும், வேலை செய்வதும் உடலுக்கு பெரும் கேடு. குறிப்பாக பகலில் தூங்குவதற்கு தயங்காதே.

மனித உடலுக்கு நடையைத் தவிர சிறந்த பயிற்சி வேறு எதுவுமே இல்லை. வாகனங்களை முற்றிலும் தவிர்த்துவிடு. எங்கேயும் நடந்தே போ. சீரான பாதையில் மட்டுமே செல்வதைத் தவிர்த்து, மேடு, பள்ளம், மணல், மலை என்று சகல இடங்களிலும் நடந்து செல்.

இந்த மூன்றையும் கடைபிடிக்க முடிந்தால் நூறு ஆண்டுகளை நோக்கி நிச்சயம் செல்ல முடியும். இதனை உன்னால் கடைப்பிடிக்க முடியுமா?” என்றதும் மலைத்து நின்றாள் சகுந்தலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *