பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் கல்லூரி பேராசிரியர் ஒருவர். புன்னகையை பரிமாறிய ஞானகுருவிடம், ‘சுவாமி என் மனதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, தியானம் செய்தாலும் எந்த முடிவும் தென்படுவதில்லை’ என்று நேரடியாக கேள்விக்கு வந்தார்.

’’குழப்பத்துடன் அமர்ந்தால் குழப்பத்துடன்தான் எழுவாய். உன் மனதை உன்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீ ஒரே நாளில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கிறாய். மல்டிபிள் பெர்சனாலிட்டியாக காட்சி தருகிறாய். அதனால், உண்மையைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படுகிறது’’

‘’நான் அப்படி இருப்பதில்லையே..?’’

‘’சிம்பிள், என் முன்னே ஒரு மாணவனாக நிற்கிறாய், உன்னுடைய மாணவர்கள் முன்பு, எல்லாம் தெரிந்த பேராசிரியராக பேசுகிறாய். உன்னுடைய மேல் அதிகாரிகளிடம் அடக்கமானவன் பவ்யமாகிறாய். உன் மனைவியிடம் அன்பு செலுத்துபவனாகவும், உன் குழந்தைகளிடம் பெரும் பாசம் கொண்டவனாகவும்  காட்சி தருகிறாய். ஒவ்வொரு நபருக்கு ஏற்ப, நேரத்துக்குத் தகுந்த முடிவுகள் எடுக்கிறாய். இவர்களில் உண்மையான நீ யார்..? யாரிடமெல்லாம் உண்மையாக இருக்கிறாய், யாரிடமெல்லாம் நடிக்கிறாய் அல்லது சமயோசித புத்தியுடன் இருக்கிறாய் என்றெல்லாம் உனக்கே புரிவதில்லை…’’

’’இது எல்லாமே நான்தானே…’’

‘’உண்மைதான். உன் மனைவியை பாராட்டும் அதே நேரம் பாராட்டியே காரியம் சாதிக்கும் அதிகாரத்தனத்தைக் காட்டுகிறாய். அதிகாரிகளுக்கு முன்பு நீ அமைதியாக இருந்தாலும், உண்மையில் நீ அவர்களை மதிப்பதில்லை.  உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாகத்தான் நீ மட்டுமல்ல, அத்தனை மனிதர்களும் வாழ்கிறார்கள். அதுதான் மனதை குழப்புகிறது. அதனால் இத்தனை வேடம் அணிந்துகொண்டு மனதை புரிந்துகொள்ள நினைக்காதே. எல்லா பந்தங்களில் இருந்தும் நீ விடுபடும் நேரத்தில், பிறருக்காக நடிக்க விரும்பாத நேரத்தில் உன் மனதை திறந்து பார். உன்னை புரிந்துகொள்வாய்”

பதில் பேச இயலாமல் ஆசிகளை மட்டும் பெற்றுச் சென்றார் பேராசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *