ரயில் தடதடத்துக் கொண்டிருந்தது. பெட்டியின் தாலாட்டில் லயத்து புறக்காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த எனக்கு, புகைக்கும் ஆசை எட்டிப் பார்த்தது. பையில் இருந்த கடைசி சுருட்டை எடுத்தேன். இனி சென்னையில்தான் அடுத்த சுருட்டு வாங்கமுடியும் என்பதால், அந்த சுருட்டின் மீதான என் காதல் அதிகரித்தது. நுரையீரலின் தூர்பாகத்தைத் தொட்டுப் பார்க்கும் அளவுக்கு ஆழமாக இழுத்துப் புகை விடும் விருப்பம் ஏனோ என்னை ஆட்டுவித்தது. பற்றவைக்க நினைத்த நேரத்தில்… திடுமென அந்த சுருட்டை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிந்தேன்.
அதீத ஆசையே மனிதனை பழக்கத்தின் பிடியில் சிக்கவைக்கும் பிசாசு. அப்படித் தோன்றும் ஆசைகளை அந்தந்தக் கணமே நசுக்கிவிட்டால்… ஆனந்தம் பேரானந்தமே!
’’யேய்… இங்க பாரு ஒரு சாமியார்..’’ குரல் வந்த திசையில் திரும்பினேன். திருநங்கை ஒருவர் கூப்பிட, இன்னும் இருவர் வந்து சேர்ந்துகொண்டு… என்னைப் பார்த்து சிரித்தார்கள்.
’’சாமி… கஞ்சா வச்சிருக்கியா..?” என்று ஒருத்தி கேட்க, இன்னொருத்தி, ‘‘யேய் சாமிகிட்ட அப்படிக் கேட்காத! கோவிச்சுக்குவாரு’’ என்று நாணிக்கோணி சிரித்தாள். புன்னகையுடன் அவர்களை அழைத்து, என்னருகே உட்காரும்படி சைகை செய்தேன்.
’’யேய்… வாங்கடி! சாமிக்கு மூணு பேரும் வேணுமாம்…’’ என்று ஒருத்தி வெடிச்சிரிப்புடன் சொல்ல, மற்றவர்கள் அந்த கம்பார்ட்மென்டே குலுங்கும்படி சிரித்து அருகே உட்கார்ந்தார்கள். அருவருப்பான வாடை சூழ்ந்ததைக் கண்டுகொள்ளாமல் இருந்தேன். அக்கம்பக்கத்து இருக்கைகளில் இருந்து சிலர் எட்டிப்பார்க்க உடனே ஒரு திருநங்கை, ‘‘இங்க என்ன அவுத்துப்போட்டா ஆடுறோம்… வேடிக்கை பார்க்க வந்துடுறானுங்க…’’ என்று ஆக்ரோஷமாக சில கெட்டவார்த்தைகளை அள்ளி வீச, எட்டிப் பார்த்தவர்கள் அதேவேகத்தில் தலையை இழுத்துக் கொண்டார்கள்.
’’எல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா?’’ என்று வாஞ்சையுடன் கேட்டேன். உதடுகளில் நெளிந்த கேலிச் சிரிப்பு சட்டென்று உறைந்துபோனது.
’’சாமி… எல்லா பயலும், எங்க உடம்புக்குள்ள என்ன இருக்குதுன்னு பார்க்கத்தான் கூப்பிடுறான், நீங்கதான் சாப்பிட்டாச்சான்னு கேட்டிருக்கீங்க… ஒருத்தனும் மதிக்கிறதில்லை… நாங்க கேவலமான ஜென்மம் சாமி…’’ என்று ஒருத்தி சொல்ல, மற்றவர்களும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.
’’சாப்பிடவில்லை என்றால் என் நண்பர்களிடம் இருந்து உணவு வாங்கித் தருகிறேன்…’’ என்று மீண்டும் கேட்டேன்.
’’அதெல்லாம் ஆச்சு சாமி, இப்பத்தான் ஒரு நாசமாப்போறவன் பிரியாணி வாங்கிக் கொடுத்தான்…’’ சலிப்புடன் ஒரு திருநங்கை சொன்னாள்.
’’சபாஷ்… உணவு கொடுத்தவருக்கு நல்ல பாராட்டு’’
’’பிரியாணி வாங்கிக் கொடுத்து, ஐம்பது ரூபாய் தர்றேன்னு சொன்னான். சரின்னுதான் அவன்கூட டாய்லெட்டுக்குள்ள போனேன். இதோ தர்றேன்னு வெளியே வந்த நாய், பத்து ரூபாயைக் கொடுத்துட்டு, ‘போதும்… போ’ன்னுட்டான் அந்தத்…..’’ என்று கெட்ட வார்த்தைகள் வரும் முன்னரே தடுத்து நிறுத்தினேன். கொஞ்சநேரம் மூவரும் அமைதியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து சிரித்து வைத்தேன்.
’’ஏன் சாமி…’’ என்று எதையோ பேச வந்தவள் அப்படியே நிறுத்திக் கொண்டாள்.
அவளது தலையைத் தடவியபடி, ‘‘கேட்க விரும்பியதைக் கேட்டு விடு…’’ என்றேன்.
’’எங்களை மட்டும் எதுக்காக அந்தப் பாழாப்போன ஆண்டவன் இப்படி ரெண்டுங்கெட்டானா படைச்சார்… நாங்க என்ன பாவம் செஞ்சோம்…’’ என்று கேட்டாள்.
’’கை நிறைய அள்ளித்தரும்போது கொஞ்சம் சிதறும். நிறைய எழுதும்போது சில பிழைகள் வரும். மனிதனைப் படைத்து அவன் தலையெழுத்தை எழுதும் பிரம்மன் தன்னையும் அறியாமல் செய்த எழுத்துப் பிழைதான் நீங்கள். ஏன் இப்படிப் பிறந்தோமென்று வருந்துவதைவிட்டு… அருவருப்பாகப் பார்க்கப்படும் பன்றியாக, நாளெல்லாம் வேலை வாங்கப்படும் கழுதையாக பிறக்கவில்லையே என்று சந்தோஷப்படுங்கள்…’’ என்றேன்.
’’எங்க பிழைப்புக்கு கழுதை, பன்னியெல்லாம் எவ்வளவோ தேவலை சாமி. எந்த கழுதையும் இன்னொரு கழுதையை கூட்டத்தில இருந்து விலக்கி வைக்காது. ஆனா, தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கிற கக்கூஸ் மாதிரி ஆம்பிளைங்க பார்க்குறாங்க. அதுகூட பரவாயில்லை… இந்தப் பொம்பளைங்களோ, நடுவழியில் நரகலைக் கண்டது மாதிரி எங்களைப் பார்த்ததுமே முகத்தைச் சுளிச்சுக்கிட்டு ஒதுங்கிப் போறாங்க…’’ என்றாள் ஒருத்தி.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் தருவதை விட இந்த உலகில் எளிதான செயல் வேறு எதுவும் இல்லை. தொண்டையை செருமியபடி பேசத் தொடங்கினேன்.
’’குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு ஆண், பெண் என்ற பேதம் தெரியாது… புரியாது. பஸ்ஸில் ஆண்கள் பக்கமும் உட்காரும், பெண்கள் மடியிலும் தாவிச் செல்லும். குழந்தைகளால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் நேராது…’’
என் பேச்சை இடைமறித்த ஒரு திருநங்கை, ‘‘ஆனா சாமி… நாங்க ஆம்பளைங்க பக்கத்திலே உட்கார முடியாது. பொம்பளைங்க பக்கத்திலேயும் உட்கார முடியாது. பப்ளிக் டாய்லெட்டுலகூட இரண்டு பக்கமும் விட மாட்டேங்குது கஸ்மாலாங்க..!’’ சலித்துக் கொண்டாள்.
’’எங்களை மூன்றாவது இனமாக அறிவிச்சு, தனி டாய்லெட்ல இருந்து வேலை வாய்ப்பு வரைக்கும் ஒதுக்கீடு செய்யணும்…’’ இன்னொருத்தி ஆவேசமாகக் குரல் கொடுத்தாள்.
மெள்ள சிரித்துக் கொண்டே, ‘‘மூன்றாவது இனமாக அறிவித்தால் பிரச்னைகள் கூடுமே தவிர குறையாது. அதனால்தான் உங்களைக் குழந்தையாக மாறுங்கள் என்கிறேன். ஆண், பெண் இரண்டு இனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய, யாருக்கும் தீங்கு செய்யாத குழந்தைகளாக மாறுங்கள்…’’
’’எப்படி சாமி, குழந்தைன்னா… மொட்டைக்கட்டையாவா? இப்பவே பாடாப் படுத்துறானுங்க, அதுவும் போலீஸ்காரப் பசங்க தொல்லை இருக்கே… எங்களைத் தடவலைன்னா அவன்களுக்குத் தூக்கமே வராது…’’ என்று ஒருத்தி ஆத்திரமானாள்.
’’எழுத்துப் பிழையாகப் பிறந்துவிட்டால், தவறான வழிகளில்தான் பிழைக்க வேண்டுமா? கைதட்டி பிச்சை எடுப்பது, ஆண்களுக்கு வடிகாலாக இருப்பது, கூட்டமாக சேர்ந்து மிரட்டி காசு பார்ப்பது தவிர வேறு வழிகளில் வாழமுடியாதா?’’
‘’நாங்க ரெடிதான், ஆனா… என்ன வேலைக்குப் போனாலும் கடைசியில கீழதான் வைக்கிறாங்க…’’
‘’உனக்கு மட்டும் இந்த பிரச்னை இல்லை, வேலைக்குப் போகும் அத்தனை பெண்களுக்கும்தான். ஆனால், கொத்து வேலைக்குப் போகும் பெண்களைப் போலவோ அல்லது இட்லி, வடை சுட்டு விற்பவர்களைப் போன்றோ கஷ்டப்பட நீங்கள் தயாராக இல்லை. தங்கள் சக்திக்கு மீறி சுட்டுப் பொசுக்கும் வெயிலில் தார் ரோடு போடுபவர்களைப் பார்த்திருப்பீர்கள். தள்ளாடும் வயதிலும் பால்பாக்கெட் போடும் கிழவிகள், மாடு போன்று மூட்டைகளைத் தூக்கித் திரியும் ஆண்களை எவரும் துன்புறுத்துவதில்லை, கேவலப்படுத்துவம் இல்லை. இதுபோன்று கடினமாக உழைக்கத் தயாராக இல்லாத நீங்கள், உங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறீர்கள். தனியாக உழைக்க பயந்துகொண்டு, கூட்டமாக சேர்ந்து எளிதாக வாழ முடியும் என ஆசைப்படுகிறீர்கள்.’’
அவர்கள் அடிமனதில் இருந்த அவஸ்தையை தொட்டது, அவர்களை நெருடியிருக்க வேண்டும். சில நிமிடங்கள் பெட்டியில் இறுக்கமான அமைதி நிலவியது. அதை உடைத்துக்கொண்டு கிளம்பியது ஒரு திருநங்கையின் குரல்.
’’எங்களை மாதிரி பிறவிகளுக்கு சொந்த வீட்லகூட மரியாதை இல்ல சாமி… என் கூடப்பிறந்த தங்கச்சியே, ‘வீட்டை விட்டு வெளியே போடா பொட்டை’னு சொல்லிட்டா. இப்பக்கூட அதை நினைச்சா தற்கொலை பண்ணிக்கத்த்தான் தோணுது…’’ என்று சொன்னவளை ஆதரவுடன் தடவிக்கொடுத்தேன்.
’’உலகில் எந்த மிருகமாவது அல்லது பறவையாவது தற்கொலை செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ஊனமுற்றவர்கள்கூட வாழ்க்கையுடன் போராடி எதிர்த்து நிற்கும்போது, உங்களுக்கு மட்டும் ஏன் வாழ்க்கையின் மீது இத்தனை பயம்? வாழ்கை என்பது இயற்கை பரிமாறியிருக்கும் அற்புதமான விருந்து. அதைக் கடைசிவரை ரசித்து ருசித்து சாப்பிடுவதை விடுத்து, பாதியிலேயே புறக்கணிப்பது இயற்கைக்கு செய்யும் துரோகம்….’’ மென்மையாக சொன்னேன்.
’’சாமி எங்களை ஏத்துக்கவும், வழிகாட்டவும் யாருமே இல்லை. எங்கள் கூட்டத்தில் இருக்கிறவங்களே… எங்களை ஏமாத்துறாங்க, மிரட்டுறாங்க. ஆனா இந்தக் கூட்டம்தான் ஆதரவா இருக்கிறது. இதையும் விட்டா எங்களுக்கு வேற நாதியில்லையே…’’ ஆற்றாமையுடன் வந்தது பதில்.
’’கூட்டம்தான் பலம் என நினைக்காதீர்கள். முதலில் தனித்தனியாக வாழ்க்கையை நேருக்கு நேர் சந்தியுங்கள். தனித்தனியாக ஜெயிக்க வேண்டும். தனித்தனியாக உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் பாருங்கள். அதில் நீங்கள் வெற்றியடைந்தால், அந்த பாதையில் உங்கள் கூட்டத்தினர் ராஜநடை போட்டு வருவார்கள். உங்களைப் பற்றி இந்த சமூகம் குத்தியிருக்கும் முத்திரையை அழியுங்கள். கேட்பதற்கு இனிப்பாக இருந்தாலும், நடைமுறையில் இது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற உத்வேகத்துடன் இறங்குங்கள்…’’ என்றேன்.
அதன்பிறகு அங்கு அமைதிதான் பேசியது. ரயிலின் தாலாட்டு, அட்டகாசமான காற்று, என்னுடைய உரையாடல் எல்லாம் சேர்த்து ஒருத்தியை என் மடியிலே தூங்க வைத்துவிட்டது. இன்னொருத்தி முகம் கவிழ்த்து சிந்தனை முகத்துடன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மூன்றாமவள் என் முகத்தையே பார்த்தபடி மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்கத் தயாரானாள்.
எந்தக் கேள்வியை அவள் கேட்டு விடக்கூடாது என நினைத்தேனோ, அதையே அவள் கேட்டாள்.