மனைவி கோயில் பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்க, அவளிடம் தப்பித்துவந்து கோயில் மண்டப வாசலில் அமர்ந்தான் கணவன். அருகிலிருந்த ஞானகுருவை பார்த்ததும் ஒரு கும்பிடு வைத்தபடி, ‘’இந்த பொம்பளைங்களை புரிஞ்சுக்கவே முடியலை சாமி. கோயில் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சேன், ஹோட்டலுக்குப் போவோம்னு அடம் பிடிக்கிறா..’’ என்று  புலம்பினான்.

‘’அவள் என்ன மெஷினா புரிந்துகொள்வதற்கு?’’

‘’என்ன சொல்றீங்கன்னு புரியலையே சாமி..?””

‘’ஒரு கடிகாரம் எப்படி ஓடுகிறது என்பதை எளிதாக சொல்லிவிடலாம். பழுது என்றால் என்ன பிரச்னை என்பதை எளிதில் கண்டுகொள்ள முடியும். ஏனென்றால், அது ஒரு குறிப்பிட்ட செயலை மட்டுமே செய்வதற்காக உருவாக்கப்பட்டது. தொழில்நுட்பம் தெரிந்தவனுக்கு அதனை சரிசெய்வதும், புரிந்துகொள்வதும் எளிது. ஆனால், பெண் அப்படியில்லை. பெண் மட்டுமல்ல  ஒவ்வொரு ஆணும்  மனதால் இயங்குபவர்கள். உன்னையே உன்னால் புரிந்துகொள்ள முடியாது எனும்போது, ஒரு பெண்ணை எபப்டி புரிந்துகொள்வாய்..?”

‘’அப்படியென்றால் எப்படித்தான் அவளை வழிக்கு கொண்டுவருவது..?”

‘’இதுதான் பிரச்னை. நீ அவளுக்கு மாஸ்டர் ஆக இருக்க நினைக்கிறாய். நீ நினைப்பதை அந்த பெண் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறாய். அப்படியென்றால் நீ ஒரு பொம்மையைத்தான் திருமணம் முடித்திருக்க வேண்டும். அதுதான், நீ சொல்வதை மட்டுமே செய்யும்…’’

‘’அவளை புரிந்துகொள்வதுதான் எப்படி?”

‘’பேசு. அவள் விருப்பங்களைத் தெரிந்துகொள். உன் விருப்பத்தைச் சொல். அவளை மாற்றுவதற்கு முயலாதே. நீயும் மாற வேண்டாம். யார், எங்கு, எப்படி விட்டுக் கொடுப்பது என்று பேசு. இருவருக்கும் போதிய சுதந்திரம் இருக்கும்பட்சத்தில், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே எல்லாம் தெரிந்துவிடும். அதனால் சுதந்திரமாக இரு, சுதந்திரமாக இருக்கவிடு’’ என்றார்.

மீண்டும் ஒரு முறை கையெடுத்துக் கும்பிட்டான் கணவன்.

Leave a Reply

Your email address will not be published.