வயதான தாயுடன் ஞானகுருவை சந்திக்க வந்தான் ஆனந்த். ‘அம்மாவை நகரத்துக்கு அழைக்கிறேன், வர மறுக்கிறார். நீங்கள்தான் அவரை என்னுடன் அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை வைத்தான்.
‘’ஏன் உன்னுடன் அவர் வரவேண்டும்..?”
‘’ஏனென்றால், நகரத்தில்தான் நல்ல மருத்துவ வசதிகள் இருக்கிறது. வயதான காலத்தில் அவருக்கு ஏற்படும் வியாதிகளில் இருந்து நன்றாக குணம் அடைய முடியும். நானும் அருகில் இருந்து கவனிக்க முடியும். கிராமத்தில் இருக்கும்போது அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எப்படி மருத்துவ வசதி பெற முடியும்?’’ படபடவென பேசினான் ஆனந்த்.
‘’உன் தாய் நலமுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், மருத்துவர் இல்லாத இடத்தில் கொண்டுபோய்விடு. அதுதான் அவருக்கு நல்ல மருந்து’’
‘’என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை..?”
‘’கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. இந்த காலத்தில் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பிரச்னைகள்கூட பலருக்கு ஏற்படவில்லை, யாரும் மருத்துவமனைக்குப் போகவில்லை. ஏன் தெரியுமா?”
‘’எல்லோரும் பயந்துபோய் வீட்டில் இருந்தோம், சுகாதாரமான உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டோம், நல்ல ஓய்வு எடுத்தோம், அப்படியே எப்போதும் இருக்க முடியுமா?”
‘’ஏன் முடியாது? மருத்துவர் இருக்கும் தைரியத்தில்தானே ஹோட்டலில் கண்டதையும் தின்கிறாய், இஷ்டப்பட்ட நேரத்தில் தூங்கி விழிக்கிறாய், வாகனத்தில் வேகமாகப் பறக்கிறாய்… பணம் சம்பாதிப்பதைவிட உடல் ஆரோக்கியம்தான் முக்கியம். அருகில் மருத்துவர் இல்லை என்ற உணர்வு இருந்தால், கூடுதல் எச்சரிக்கையுடன் வாழ்வாய். அதுதான் உடலுக்கு நல்லது..’’
‘’இது முட்டாள்தனமான கருத்து இல்லையா…? மருத்துவர் இல்லையென்றால், பெரிய பெரிய நோய்களில் இருந்து தப்பிக்க முடியுமா?”
‘’சரி, கேன்சர், கிட்னி கோளாறுகளில் இருந்து தப்பி 100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரை காட்டுகிறாயா..? மருத்துவர்கள் நோயை அதிகரிப்பார்களே தவிர, குறைக்க முடியாது. இயற்கையும் உன் உடலும்தான் நோயில் இருந்து விடுதலை தரும். அதனால், உன் தாய் இயற்கையுடன் இயற்கையாக கிராமத்தில் வாழட்டும். அவர் உடலால் முடியாத சமயத்தில் உன்னுடன் அழைத்துச்சென்று பணிவிடை செய்… அதுதான் அவருக்கு நல்லது…”
அதுவே தன்னுடைய விருப்பம் என்பதையும் ஆனந்திடம் கண்களால் பேசினாள் தாய்.