ரயிலின் தள்ளாட்டத்தை ரசித்தபடி  படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ராணுவத்தாருடன் நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் தள்ளி நின்று வணக்கம் வைத்தபடி நழுவினார். இன்னொருவர் புன்சிரிப்புடன் நெருங்கிவந்து, ‘‘சாமி என்னோட இடத்தில் வந்து அமரணும்’’  என்று கட்டளை இடுவதுபோன்று அழைத்தார். அந்த நபரை பார்வையால் எடை போட்டேன்.

நெற்றி நிறைய திருநீறு, தும்பைப் பூவாய் வெள்ளை வேட்டி… வெள்ளை சட்டை, முகத்தில் பிசினஸ்மேன் மிடுக்கு. அவர் இடத்திற்குச் சென்றேன். பக்கத்தில் ஒரு வடக்கத்திக் குடும்பம் மட்டுமே இருந்தது. ஜன்னலையொட்டி வசதியாக அமர்ந்தேன்.

’’நீங்க ஒரு சாமியார்ன்னு சொன்னாங்க… திருநீறுகூட பூசாம இருக்கீங்க. அதையும் துறந்துட்டீங்களா..?’’ குரலில் லேசான கிண்டல் எட்டிப் பார்த்தது.

முணுக்கென்று கோபம் வந்தது, ஆனாலும் அதை அப்படியே அடக்கிக் கொண்டு, ‘‘அது எதுக்கு?’’ என்றேன்.

’’என்ன சாமி திருநீறு எதுக்குன்னு கேக்குறீங்க… அதோட மகிமை உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?’’ என்றார். அப்படி அவர் சொன்ன தோரணையைக் கேட்டபொழுதே, திருநீறு பற்றி நிறையத் தகவல்கள் தெரிந்து வைத்திருப்பதும், அதை சொல்லத் துடிப்பதும் தெரிந்தது. அவர் வழியிலே செல்ல நினைத்தேன்.

’’எனக்குத் தெரிவது இருக்கட்டும், உனக்குத் தெரிந்ததைச் சொல்…’’ என்றேன்.

’’எல்லா விபூதியும் சாம்பல் நிறத்தில் இருந்தாலும், அதில் சாந்திகம், பௌஷ்டிகம், காமதம் என்று மூன்று வகையான விபூதிகள் இருக்கிறது. இதனை நேரத்திற்கு ஏற்ப நெற்றியில் தினமும் தரித்து வந்தால், பிரம்மன் எழுதிய தலை எழுத்தையே மாற்றி விடலாம். ‘விபூதி இல்லாத நெற்றியைச் சுடு, சிவன் கோயில் இல்லாத ஊரைச் சுடு, சிவசிந்தனையில்லாத வித்தையைச் சுடு’ என்று பெரியோர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்’’ என்று கடகடவென பேசிய பிசினஸ்மேன் குரலில் கர்வம் தெரிந்தது. நான் எந்த ஆச்சர்ய  பாவனையும் காட்டாமல் அவரையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்க… மேலும் தொடர்ந்தார்.

’’சாமி… திருநீறு பூசிக்கிட்டா நோய் நொடி இல்லாம, ஏன் மரணமே இல்லாமக் கூட வாழ முடியும்…’’

’’அப்படி என்றால் உனக்கு மரணம் இல்லை என்று சொல்ல வருகிறாயா?’’

’’அதெப்படி? வேதத்துல சொன்னபடி முறையா திருநீறு பூசுனாத்தான மரணத்தை வெல்ல முடியும்…’’ என்று பம்மினார்.

’’ஓ… அப்படியானால் நீ வேதமுறைப்படி பூசவில்லையா..?’’   என்னுடைய குத்தல் அவரை காயப்படுத்தி இருக்க வேண்டும். 

’’சாமி… நான் நிறைய ஆன்மிகப் புத்தகமெல்லாம் படிச்சிருக்கேன். எத்தனையோ பெரிய பெரிய சாமியார்களை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டிருக்கேன், ஹோமம் பண்ணியிருக்கேன், எங்க ஊர்ல வந்து கேட்டுப் பாருங்க, என்னை பெரிய பக்திமான்னு பெருமையா சொல்வாங்க…’’  என்றார்.

’’அப்படியா… கடவுள் மீது அத்தனை அன்பு வைத்திருக்கிறாயா..?’’

’’பின்னே… ஒரு நாள்கூட கோவிலுக்குப் போகாம இருக்கமாட்டேன். நல்லநாள் வந்தா எங்க வீடே தெய்வீகமா இருக்கும். நிறைய அன்னதானம் செய்றேன். அவன் அள்ளியள்ளிக் கொடுக்கிறான், நானும் ஏழைகளுக்கு நிறைய செய்றேன். எனக்கு ‘ஆன்மிகச் செம்மல்’னு ஒரு பட்டம்கூட கொடுத்திருக்காங்க சாமி…’’ என்று பெருமை பொங்கச் சொன்னார்.

’’என்ன தொழில்?’’

’’கான்ட்ராக்டர் சாமி… ரோடு போடுறது, பாலம் கட்டுறதுன்னு எல்லா வேலையும் எடுத்துச் செய்றேன்’’ என்றார்.

’’தொழில்ல நிறைய தப்பு செய்ய வேண்டி இருக்குமே…’’

’’தொழில்ன்னா கொஞ்சம் முன்னபின்னதான் இருக்கும், அதைப் பார்த்தா முடியுமா சாமி? எல்லாம் அவன் இஷ்டப்படி நடக்குது சாமி. கடைசிவரைக்கும் இதேமாதிரி ஆண்டவன் கடாட்சம் இருந்தாப் போதும்’’ என்றார்.

ஆன்மிகச் செம்மலுடன் விளையாடிப் பார்க்க ஆசை வந்தது.

’’கடவுள் மீது இத்தனை அன்பாக இருக்கிறீர்கள், கடவுளை நேரில் தரிசிக்க விருப்பமா?’’ என்று கேட்டேன். கண்கள் நூறு வாட்ஸ் பல்பு போல பிரகாசிக்க, ‘‘யாருக்குத்தான் ஆசை இருக்காது..?’’ என்று பரவசப்பட்டார்.

’’உங்களுக்கு தரிசனம் தரும் இறைவனுக்குக் காணிக்கையாக எதைக் கொடுப்பீர்கள்?’’

’’என்ன சாமி இப்படிக் கேட்டுப்புட்டீங்க… இந்த சொத்து, சுகம் எல்லாம் அவன் கொடுத்ததுதானே, என்ன கேட்டாலும் கொடுப்பேன்’’ என்றார்.

‘‘சரி…. நாளை காலை ஊர் போய் சேர்ந்ததும், குளித்து சுத்தமாகி பூஜையறையில் அமர்ந்து கண்களை மூடி இறைவனை தியானம் செய். நானும் அந்த சமயத்தில் நிஷ்டையில்தான் இருப்பேன், அதனால் மந்திர உச்சாடனைகள் மூலம் நான் காணும் இறைவனை, நீயிம்  தரிசனம் செய்வதற்கு வழி செய்கிறேன். இறைவன் தரிசனம் கிடைக்கும் வரை பூஜையறையில் இருந்து வெளியே வருவதோ அல்லது கண்களைத் திறக்கவோ வேண்டாம்…’’ என்றேன்.

எதையோ சொல்லத் தயங்கிக் கொண்டே இருந்தவரைப் பார்த்து, புருவத்தை உயர்த்தி கண்களாலே ‘என்ன’ என்று கேட்டேன்.

‘’சாமி… எத்தனை நேரம் கண்ணை மூடியே இருக்கணும், ஏன்னா…’’ என்று இழுத்தார்.

’’ஓ.. நீ  வெளியூரில் இருந்துவிட்டு ஊருக்குத் திரும்புவதால், நிறைய வேலைகள் இருக்கலாம். ஆனால் கடவுளுக்கு அப்படியெல்லாம் கிடையாது. அதனால் விரைவில் அதாவது நீங்கள் தியானத்தில் அமர்ந்த அரை மணி நேரத்திற்குள் இறை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் போதுமா..?’’ என்று நம்பிக்கையான தொனியில் சொன்னேன்.

அவர் முகம் சந்தோஷத்தில் டாலடித்தது. ‘‘சாமி… கடவுளை மட்டும் பார்த்துட்டேன்னா, உங்களுக்கு என்ன வேணும்னாலும் தர்றேன்’’ என்றார்.

’’எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் உனது அதீத பக்தியைப் பார்த்தால்  எனக்கே ஆனந்தமாக இருக்கிறது. அதனால், உன்னிடம் இறைவன் என்ன கேட்பார் என்பது இப்போதே தெரிந்து விட்டது…’’ என்றேன்.

’’கடவுள் என்ன கேட்பார் சாமி…’’ என்று ஆவலுடன் கேட்டார். நான் கொஞ்சநேரம் பிகு செய்வது போல் யோசித்து, பின் மிகுந்த தயக்கத்துடன் சொன்னேன்.

’’கடவுளின் தாசனாக நீ இருப்பதைக் கண்டு ஆனந்தப்படுவார். மக்களுக்கு சேவை செய்கிறாய், நிறைய தர்மம் செய்கிறாய்.. அதனால் உன் மீது மிகுந்த அன்புகொண்டு, ‘இப்பொழுதே என்னுடன் வந்துவிடு’ என்று அழைத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அதனால் உடனே அவருடன் ஐக்கியமாவதற்கும் தயாராக இரு… எத்தனை பேருக்குக் கிடைக்கும் இப்படியோர் அரிய வாய்ப்பு…’’ என்று கிசுகிசுப்பான குரலில் அவர் காதில்  சொன்னேன்.

அவ்வளவுதான். அடுத்த கணம் அவர் முகம் அமாவாசை இரவானது.. பொறியில் சிக்கிய எலி போன்று திருட்டு விழி விழித்துக் கொண்டிருந்தவர், கொஞ்சநேரத்திற்குப் பின் ‘‘சாமி… இன்னும் நிறைய கடமை இருக்குதே… கொடுத்த கடன், எடுத்த கான்ட்ராக்ட் எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி சாமி… என் இரண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் வேற செய்யணும்…’’ என்று தடுமாறினார்.

’’மரம் வைச்சவன் தண்ணீர் விட மறக்கமாட்டான்.  அதுவும் நீ கடவுளின் பிள்ளை. நீ  செய்த புண்ணியங்கள் உங்கள் சந்ததியைக் காக்கும்…’’ என்றேன்.

கொஞ்சநேரம் ஏதோ சிந்தனையில் இருந்தவன், ‘’அப்படின்னா, இன்னும் நாலைஞ்சு வருஷம் கழிச்சு இந்த பூஜையை வச்சுக்கலாமா சாமி…’’ இறைஞ்சலும் பயமும் கலந்த குரலில் கேட்டதும், சட்டென அதிர்ந்த குரலுக்கு மாறினேன்.

’’ஓ… கடவுள் மயிரைப் போன்று எதையாவது கேட்டதும் கொடுத்துவிடலாம் என்று நினைத்தாய். படைத்த கடவுளே கேட்டாலும் உயிரைத் தரமுடியாது… அப்படித்தானே?’’

இப்படியொரு பட்டவர்த்தமான கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதால், அதிர்ச்சியடைந்து தடுமாறி, ‘‘கடமை மட்டும் இல்லேன்னா…’’ என்று உளறினார். நான் எதுவும் பதில் சொல்லாமல் பலமாக சிரித்தேன். ஒரு சுருட்டை எடுத்து பற்றவைத்து ஆழமாகப் புகையை இழுத்துவிட்டேன். சுருட்டின் சாம்பலை கையில் தட்டி அவர் நெற்றியில் பூசிவிட்டு, ‘‘இனி யாரிடமும் திருநீற்றின் மகிமையைச் சொல்லும்போது, கடவுளின் அழைப்பையும் சொல்லு’’  என்றபடி என்னுடைய ஸீட்டுக்குப் புறப்பட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *