ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதுவே ஆகச்சிறந்ததாக அறியப்பட்டு விடுகிறது. அது நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சியையும் தாண்டிச் சென்றுவிடும். கோயில்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், புண்ணிய யாத்திரைகள் எல்லாமே இந்த வழியில் வந்தவையே என்பதை சொல்வதற்கு ஒரு குட்டிக் கதை.
ஒரு துறவி காட்டுக்குள் ஆசிரமம் நடத்திவந்தார். மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது, மாடு மேய்த்துக்கொண்டு ஒருவன் அந்தப் பக்கமாக செல்வது வழக்கம். கடந்துசெல்லும் மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகளின் சத்தத்தால் மாணவர்களின் கவனம் சிதறும் என்பதால், அந்த நேரத்தில் மட்டும் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு மாடுகளை வேடிக்கை பார்ப்பார். மாணவர்களும் அப்படியே செய்தார்கள்.
மாடுகளுக்காக பாடத்தை இடையில் நிறுத்துவது சரியில்லை என்று நினைத்தார் துறவி. அதனால் அந்த மாடு மேய்ப்பவன் கடந்து போகும் வரையிலும் காத்திருந்து, அதன்பிறகு பாடம் சொல்லித்தர ஆரம்பித்தார். எப்போது மாடு மேய்ப்பவன் கடந்து செல்வான் என்று காத்திருப்பார். அவன் கடந்துசென்ற பிறகு பாடம் தொடங்குவது பழக்கமானது. இப்படியே காலங்கள் கழிந்தன. துறவி மரணம் அடைந்துவிடவே, மூத்த சீடன் குருவாக மாறினான். அவனும் மாடு மேய்ப்பவன் கடந்துசென்ற பிறகு பாடத்தைத் தொடங்கினான்.
அந்த மாடு மேய்ப்பவன் திடீரென வேறு பக்கமாக செல்லத் தொடங்கினான். என்ன செய்வது என புரியாமல் தடுமாறினான் புதிய துறவி. பழைய குருவின் பாதையில் நடக்கவேண்டும் என்பதற்காக வேறு ஒரு மாடு மேய்ப்பவனை அந்தப் பக்கமாக கடந்து செல்வதற்கு ஏற்பாடு செய்தான். என்ன காரணத்திற்காக முந்தைய குரு அப்படியொரு காரியம் செய்தார் என்பது அறியப்படாமலே, அந்த ஆசிரமத்தில் மாடுகளைப் பார்த்தபிறகுதான், பாடம் ஆரம்பம் என்பது பழக்கமாகிப் போனது.
இப்படித்தான் மனிதர்கள் ஏதாவது ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிப் போகிறார்கள். இப்போது நாடெங்கும் ஒரு புதிய பழக்கம் வைரஸ் நோய் போல் பரவி வருகிறது. அதுதான் தியானம். மனதை ஒருநிலைப்படுத்தினால் வாழ்க்கை நல்லவண்ணம் மாறிவிடும், இறைவனை கண் முன்னே பார்த்துவிடலாம் என்றெல்லாம் நம்புகிறார்கள். நம்பிக்கையோடு ஒரு விஷயத்தை அணுகும்போது எப்படிப்பட்ட விளைவு கிடைக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. முன்முடிவுடன் அணுகும் ஒவ்வொரு விஷயமும் நீங்கள் ஆசைப்பட்ட விதத்தில் மட்டுமே நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் பலன் மட்டும் பூஜ்யமாக இருக்கும்.
தியானம் மனிதனின் இயல்பான குணம் அல்ல. புத்தியின் வழியே அறிந்துகொண்ட ஒன்று. யாரேனும் ஒரு புத்திசாலி பேச்சாளன் அல்லது கடவுளைக் காட்டுவதாக சொல்லும் இடைத்தரக சாமியார் மூலம் தியானத்தின் மேன்மையை அறிகிறார்கள். சங்ககால பாடல்கள், கட்டுரைகளை படித்து தியானம் பற்றி பெருமைப்படுகிறார்கள். தியானம் செய்வது மிகவும் உயர்வானது, தியானம் செய்வதன் மூலம் நிம்மதி கிடைக்கும். எல்லா பிரச்னைகளுக்கும் எளிய முறையில் தீர்வு கிடைக்கும், தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரமுடியும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து உசுப்பேற்றுவார்கள். அதனால் தியானம் செய்தவுடன் வாழ்க்கை மாறப்போகிறது, விழிப்பு கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிறது.
ஆனால், நடப்பது என்ன? உன் புத்தியும் மனமும் என்ன நினைக்கிறதோ அதைத்தான் உன்னால் பார்க்கமுடியும். மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்த முடியாமல் அதன்பின்னே செல்லத் தொடங்குவாய். இதை நல்ல ஆரம்பம் என்று நினைத்துக்கொள்வாய். புத்தி, மனம், உடல் இந்த மூன்றும் சேர்ந்த முக்கோணமே மனிதன். ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு, ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்லவேண்டுமே தவிர, ஒன்றையொன்று அதிகாரம் செய்யக்கூடாது.
தியானம் என்ற போர்வையில் உனக்கு நீயே ஒரு புதிய வட்டம் போட்டுக்கொள்வாய். அந்த வட்டத்துக்குள் மீண்டும் மீண்டும் உன்னை நீயே சுற்றிக்கொண்டு இருப்பாய். பூமி எத்தனை முறை சுற்றினாலும் அதன் வட்டப்பாதையில் இருந்து நகரமுடியாது என்பதுபோல், நீயும் எத்தனை மணி நேரம் தியானம் செய்தாலும் எதையும் சாதித்துவிட இயலாது.
1. காலம் காலமாக தியானத்தை உயர்த்தித்தானே சொல்லிவருகிறார்கள்?
மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால், தியானம் உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளாக பூமி தட்டையானது என்றுதான் நம்பப்பட்டது. பாம்பு விஷத்தை முறிக்கத் தெரியாமல், தீயை கட்டுப்படுத்த முடியாமல், அவற்றை எல்லாம் கடவுளாகத்தான் நம்பினார்கள். குழந்தை பிறப்பது கடவுள் செயல் என்று சொன்னார்கள். இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, தியானத்தை மட்டும் இன்னமும் உயர்த்திப் பிடிக்காதே.
2. தியானம் செய்யும்போது உண்மையிலே மனம் அமைதியாகிறதே…
மனம் அமைதியாவதற்கும் தியானத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தியானம் செய்தால் மனம் அமைதியாகிவிடும் என்ற நம்பிக்கையில் உட்காருகிறாய். அதனால் நீ விரும்புவதுபோல் மனம் பெட்டிப் பாம்பாக மாறுவதாக உணர்கிறாய். மீண்டும் மீண்டும் தியானம் செய்யும்போது நீ விரும்பும்படி மனம் செல்வதாக நினைக்கிறாய். உண்மையில் மனம் விரும்புவதையே நீ தியானத்தில் செய்கிறாய். தியானம் செய்வதற்குப் பதிலாக நீ ஒரு ஓவியம் வரைந்தால் அல்லது முழு கவனத்துடன் சமையல் செய்தாலும் மனம் அமைதியாகத்தான் இருக்கும்.
3. ஞானிகள், சாமியார்கள் எல்லாம் தியானம் செய்கிறார்களே?
வேலைவெட்டி இல்லாதவன், சொகுசாக பொழுதுபோக்க விரும்புபவன், பிறர் முன்பு தன்னை மேதாவியாக காட்டிக்கொள்ள நினைப்பவனுக்கு தியானம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கிறது. புத்தனைப்போல் எவனும் நெஞ்செலும்பு தெரியும்வரையில் கடுமையான தியானம் செய்திருக்க முடியாது. அவர் யாரையும் தியானம் செய்யச் சொல்லவில்லை, ஆசையை மட்டுமே அடக்கச்சொன்னார்.
4. தியானம் மூலம் அழ்மனதை அறியமுடியுமே?
எந்த மனிதனுக்கும் அவனது ஆழ்மனதின் ரகசியம் தெரியாது, அறிய முடியாது. ஒருவன் குறிப்பிட்ட தருணத்தில், எப்படிப்பட்ட முடிவு எடுப்பான் என்பதை அவனே அறியமாட்டான். அப்படிப்பட்ட குழப்பமான ஆழ்மனதை கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், அதை உன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதும் நடக்காத செயல். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதும் அத்தனை கொடூரமானது. மனிதன் அத்தனை பேரும் மிருகங்களைவிட வக்கிர மனம் படைத்தவர்கள். அதனை வெளிக்கொண்டுவர முயற்சிப்பது சரியல்ல. கொலைகாரர்களாக, கொள்ளைக்காரர்களாக இருக்கும் பலர் தங்கள் ஆழ்மனம் சொல்வதை செய்பவர்கள்தான்.
5. அப்படியென்றால் தியானம் வீண் முயற்சியா?
உண்மையான தியானம் இருக்கத்தான் செய்கிறது. படிக்கும்போது, முழுமையாக படிப்பில் ஆழ்ந்து இறங்குவது தியானம். ஒரு வேலை செய்யும்போது முழுஈடுபாட்டுடன் அதனை செய்வது தியானம். சாப்பிடும்போது ரசித்து உண்பது தியானம். நிம்மதியாக தூங்குவது தியானம். குப்பை கூட்டுவதைக்கூட தெளிவாகச் செய்வது தியானம். இதைவிடுத்து கண்ணை மூடிக்கொண்டு தியானிப்பதாகச் சொல்வது மூடத்தனம். கண்கள் இருப்பது பார்ப்பதற்காகவே, மூடிக்கொள்வதற்கு அல்ல.