உடலுக்கு ஏதாவது சின்ன பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்கும் நபர்தான் ஆனந்த். அப்படித்தான் இரண்டு நாட்களாக மூச்சுவிடுவதில் சிரமம் என்றதும் மருத்துவரிடம் சென்று, ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துக்காட்டி, மாத்திரை, மருந்துகளை வாங்கிக்கொண்டு, அப்படியே ஞானகுருவை சந்தித்து ஆசியும் பெற வந்தார்.
‘’எனக்கு மூச்சுவிட சிரமமா இருக்குது சாமி, சீக்கிரம் குணமாகனும்…’’
‘’அதுக்குத்தான் மருத்துவரிடம் போய் நிறைய அறிவுரைகளும், மருந்துகளும் வாங்கி வந்திருக்கிறாயே…’’
’என்ன இருந்தாலும் கடவுள் அருள் இருந்தாத்தானே சரியாகும்…’’
‘’இதற்காக கடவுளை தொந்தரவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் உன் உயிர் கடவுளிடம் இல்லை, உன் உடலிடம்தான் உள்ளது. அதை கவனித்துக்கொள்ள உன் உடலுக்குத் தெரியும். உடல் எனும் மருத்துவர் சொல்வதை மட்டும் கேட்டு நீ நடந்துகொண்டால் போதும், வேறு மருத்துவரை பார்க்கும் அவசியம் வராது..’’
‘’நான் சும்மா போகலை சாமி. இரண்டு நாளா சளி, தெரிஞ்ச மருந்துகளை வாங்கிப் போட்டும் கேட்கலை, அதான் ஏதாவது சிக்கலாயிடும்னு பயந்துட்டேன்…’’
‘’உன் உடலுக்கு மொத்தமே மூன்று வேலைகள்தான். சாப்பிடுவது, அதை செரிப்பது. பின்னர் தேவையில்லாததை வெளியே தள்ளுவது. அப்படி வெளியே தள்ளிய செயல்தான் சளி. அதை நீ தடுத்து நிறுத்தியதுதான் பிரச்னை. கழிவை வெளியே வரவிடாமல் நீ எதையோ வயிற்றுக்குள் தள்ளியதால், மூச்சு முட்டியிருக்கிறது. இனியாவது உடல் சொல்வதைக் கேள்…’’
‘’ஆனா, பயமா இருக்குதே சாமி…’’
‘’உன் உயிரை காப்பாற்றும் பொறுப்பு உன் உடலுக்கு நிறையவே உண்டு. அதனால் கழிவுகளை நிறுத்தாதே. வாந்தி, பேதி, தும்மல், சளி என எது வந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்…’’
’’சரி சாமி’’ அவசரமாக கிளம்பினான் ஆனந்த். ஆனால், இன்னமும் அவனுக்கு உடலைவிட மருத்துவரே கடவுளாகத் தெரிகிறார் என்பது ஞானகுருவுக்குத் தெரியவர, சிரித்துக்கொண்டார்.
எல்லா விதைகளும் முளைப்பதில்லையே…