பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே என்ன கொட்டியா கிடக்குது, அரைமணி நேரம் பஸ்ஸுக்கு நின்னா ஒண்ணும் ஆயிடாது…’’ என்று கொஞ்சம் உரக்கவே சத்தம் போட்டான். கூட்டத்தினர் திரும்பிப் பார்ப்பது தெரிந்ததும் மனைவி, அங்கிருந்து விலகி தள்ளி நின்றவள், தூணில் சாய்ந்திருந்த ஞானகுருவை பார்த்தாள். உடனே, பர்ஸில் இருந்து சில்லறை எடுத்துப் போட முயல, ‘’அதெல்லாம் வேண்டாம்… இருப்பதைக் கொண்டு வாழ்வது சிரமமாக இருக்கிறதா?” என்று ஞானகுரு கேட்டதும் பேசத் தொடங்கினாள்.

‘’ஆட்டோவுல போனா என்ன தப்பு..?’’

‘’தப்பு, சரி என்பது இங்கே பிரச்னை இல்லை. இப்போது தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியம்…’’

‘’மாசக் கடைசி என்றில்லை, எப்போதுமே இவர் அப்படித்தான் இருக்கிறார். கணக்குப் போட்டு வாழ்வதில் என்ன சந்தோஷம் கிடைக்கும்…’

‘’சந்தோஷத்திற்கும் பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை பெண்ணே. எல்லோருக்கும் தேவை மூன்று வேளை உணவு, உடல் மறைக்க ஆடை, இருப்பதற்கு ஒரு கூரை. உண்மை தெரியுமா? ஒரு மனிதனுக்கு அதிகபட்சம் 30 பொருட்கள்தான் தேவை. உன்னிடம் எத்தனை இருக்கிறது என்று ஒரு கணம் எண்ணிப் பார். மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு பொருளை பயன்படுத்தவில்லை என்றால், அப்படிப்பட்ட பொருள் வீட்டில் இருக்கத் தேவையில்லை, வாங்க வேண்டியதும் இல்லை. அடுத்த வீட்டுக்காரனுடன் ஒப்பிடும் நேரத்தில்தான், உன்னிடம் எதுவும் இல்லை என்ற சோகம் தோன்றும். அதனால், உன் வாழ்க்கையை மட்டும் பார், சந்தோஷம் தானே வந்துவிடும்..’’

‘’எதுவுமே இல்லாமல் எப்படி சந்தோஷம் கிடைக்கும்..’’

‘’குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்திருக்கிறாயா…. மண்ணும் கல்லையும் வைத்தும் சந்தோஷமாக விளையாட முடியும். ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் உணவின் சுவையை, நீ வீட்டில் கொடுத்துவிட முடியும். வீட்டுச் செலவுக்குக் கொடுத்த பணத்தில் கொஞ்சம் மிச்சப்படுத்தி உன் கணவனிடம் காட்டு, அதில் அவனுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைப் பார்…”’

‘’அப்படியென்றால் நாங்கள் எப்போது வீடு வாங்குவது, கார் வாங்குவது..?””

‘’அது வேறு வாழ்க்கை மகளே. அப்படியொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவன், இருப்பதைக் கொண்டு வாழ மாட்டான். செலவுகள் எத்தனை என்றாலும், அதனை சமாளிக்கும் அளவுக்கு இரவும் பகலுமாக உழைப்பான். இரண்டிலுமே சந்தோஷமும் உண்டு, துன்பமும் உண்டு. எந்தப் பாதையில் உன் வாழ்க்கை போகவேண்டும் என்பதை நீ முதலில் முடிவு செய்… அதன்பிறகு மற்றதை சுத்தமாக மறந்துவிடு’’ என்றபடி சாய்ந்தார்.

கொஞ்சநேரம் யோசனையில் இருந்தவள் தூரத்தில் கணவனைப் பார்த்தாள். அவன் ஆட்டோவுக்கு ரேட் பேசுவதை பார்த்ததும், வேகமாக அருகே போனாள். ‘’எதுக்கு வீணா செலவழிச்சுட்டு.. கொஞ்சநேரம் ஜாலியா வேடிக்கை பார்ப்போம், அதுக்குள்ள பஸ் வந்திடும்’’ என்றபடி ஞானகுருவை பார்த்து சிரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *