ஒரு கராத்தே மாஸ்டர் ஞானகுருவை சந்தித்தார். ‘’சாமி நான் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என்னுடன் சண்டைக்கு வருபவர்களை என்னால் சமாளிக்க முடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால், திடீரென நேற்று இரவு இரண்டு பேர் என்னை கத்தி முனையில் மிரட்டிய நேரத்தில், என்னுடைய பலம் எங்கே போனது என்றே தெரியவில்லை. என் கையிலிருந்த அத்தனை பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டேன். ஏன் இப்படி நடக்கிறது..? ஏன் என்னால் தைரியமாக அவர்களை எதிர்க்க முடியவில்லை?” என்று கேட்டான்.
‘’ஏனென்றால் நீ பலமானவன் என்று நீயே நம்பவில்லை…’’
‘’அது ஏன் எனக்கு புரியவில்லை..?”
‘’உனக்கு மட்டுமல்ல, எந்த மனிதனும் அவனை முழுமையாக புரிந்துகொண்டதில்லை, அதற்கு நேரம் ஒதுக்குவதும் இல்லை. உண்மையில் நீ பலமானவனா என்பதை தனிமையில்தான் நீ அறிந்துகொள்ள முடியும்…’’
‘’அதற்கு நான் தியானம் செய்ய வேண்டுமா?”
‘’தியானம் மூலம் உன்னை அறிந்துகொள்ள முடியாது. ஆனால், மனதை கொஞ்சம் கொஞ்சமாக வலிமையாக்கிக்கொள்ள முடியும். கராத்தே கலையானது உனக்கு உடல் பலத்தை கொடுத்திருக்கலாம். மன பலம் இல்லாமல் உன்னால் எதையும் சாதிக்க முடியாது. சிறு வயதில் இருந்து எத்தனை பேருடன் எதற்காகவெல்லாம் மோதியிருக்கிறாய், சண்டை போட்டிருக்கிறாயா..?””
‘’இல்லை, நான் யாரிடமும் சண்டைக்குப் போவதில்லை. உண்மையில் நான் மிகவும் பயந்தவன். அதனால்தான் என் பெற்றோர் என்னை கராத்தே படிக்க அனுப்பினார்கள். கராத்தே கற்றபிறகும் என் தைரியம் எங்கே போனது?”
‘’இப்போதும் உன்னுடன் கராத்தே முறைப்படி மோதுவதற்கு ஆட்கள் வந்தால், நீ ஜெயிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், பொது இடங்களில் நீ இன்னமும் பழைய பயத்துடனே இருக்கிறாய். அதனால்தான், பிளாக் பெல்ட் வாங்கியபிறகும் யாரிடமும் நீ மோதியதில்லை…’’
’’அப்படியென்றால் நான் தைரியமாக இருக்கவே முடியாதா..? எனக்கு வீரம் வரவே வராதா..?”
‘’வரும். அதற்கு தனியே முயற்சியும் பயிற்சியும் செய். தவறு நடந்தால் தட்டிக் கேட்க முடியும் என்ற மன உறுதியை வளர்த்துக்கொள். அதனால் உனக்கு அடியும் உதையும் கிடைக்கலாம். ஏன், உயிரும் போகலாம், அதற்கு தயாராக இருக்கிறேன் என்று உனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன் என்ற மன உறுதியை வளர்த்துக்கொள். முதலில் ஆபத்து இல்லாத இடத்தில் உன் வீரத்தைக் காட்டு. சண்டை வரும் என்று தெரிந்தால், முதலில் அடிப்பவன் நீயாக இரு…. அதுவே உனக்கு தைரியம் கொடுத்துவிடும்’’
‘’உயிருக்கே ஆபத்து வரலாம் எனும்போது சண்டை போடுவது அவசியமா..?””
‘’இல்லைதான். ஆனால், மனதில் தைரியம் இருக்கத்தான் வேண்டும். ஜெயிக்க முடியும் இடத்தில் எதிர்த்து நில் அல்லது ஓடிப் போய்விடு. உயிர் வாழ்தலே அனைத்தையும்விட முக்கியம் என்பதை புரிந்துகொள். யானையால் சிங்கத்தை எதிர்த்து சண்டை போடமுடியும் என்றாலும், அவை சண்டை போட முயல்வதில்லை, தப்பிக்கவே செய்கின்றன. அதுதான் புத்திசாலித்தனம். அதனால் தைரியமாக இரு, ஆனால் சண்டை போடாதே…’’
நிம்மதியுடன் விடை பெற்றார் கராத்தே மாஸ்டர்.