ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும், சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம் கொள்ளும் மனிதர்கள்தான் அதிகம். அதற்கு முக்கிய காரணம் இன்று என்ன செய்யப்போகிறோம் என்பதல்ல, நாளை என்ன நடக்கும் என்பதுதான்.
’நேற்றைய தினத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், இன்றைய தினத்தில் வாழுங்கள், நாளைய தினத்தில் நம்பிக்கை வையுங்கள்’ என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார் எய்ன்ஸ்டீன். ஆனால் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? நாளைய தினத்தில் வாழ்வதற்கு இன்றைய தினத்தை அடகு வைக்கிறார்கள்.
விக்னேஷ்க்கு படிப்பு ஏறவில்லை என்றதும் பணம் புரட்டி துபாய்க்கு அனுப்பி வைத்தார்கள். துபாயில் கட்டிடத்துக்கு கம்பி கட்டும் வேலைக்குத்தான் போனான். கடுமையாக வேலை செய்து, சிக்கனமாக செலவு செய்ததால் விக்னேஷ் கையில் பணம் புழங்கியது. ஊருக்கு பணம் அனுப்பி நிலம் வாங்கிப் போட்டான். பழைய வீட்டை இடித்துக் கட்டினான். வசதி அதிகரித்தது தெரிந்ததும் விக்னேஷ்க்கு பெண் தருவதற்கு நிறைய பேர் போட்டி போட்டார்கள்.
விடுப்பு போட்டு துபாயில் இருந்து வந்த விக்னேஷ்க்கும் சாந்திக்கும் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தது. கணவனை உருகிஉருகி காதலித்தாள் சாந்தி. எல்லாம் இரண்டு மாதங்கள்தான். மீண்டும் துபாய் போகிறேன் என்று பெட்டியைக் கட்டினான் விக்னேஷ். இங்கே இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யலாம் அல்லது பணத்தை வைத்துக்கொண்டு சின்னதாக தொழில் செய்யலாம் என்று உற்றாரும் உறவினரும் நிறையவே ஆலோசனை சொன்னார்கள். ஆனால் விக்னேஷ் எதையும் கேட்டுக்கொள்ளவே இல்லை.
இன்னும் ஐந்து ஆண்டுகள் துபாயில் வேலை செய்துதிரும்பினால், வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்துகொண்டே சாப்பிடலாம் என்று சமாதானம் சொன்னான். தன்னையும் துபாய்க்கு கூட்டிச்செல்லும்படி வற்புறுத்தினாள் சாந்தி. அதெல்லாம் சரிப்படாது என்று தட்டிக்கழித்துவிட்டு துபாய்க்கு கிளம்பினான் விக்னேஷ்.
முன்பைவிட இந்த ஐந்து வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டான். தினமும் கூடுதலாக சில மணி நேரங்கள் வேலை செய்தான். பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் ஊருக்கு போன் பேசுவதைகூட குறைத்துக்கொண்டான். கஷ்டப்பட்டு உழைத்து, பை நிறைய பணத்துடன் ஐந்து ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்பிவந்தான் விக்னேஷ். ஆர்வமாக வரவேற்றாள் சாந்தி. சம்பாதித்த மொத்த பணத்தையும் ஒரே வங்கிக் கணக்கில் போட்டு பாதுகாக்கச் சொன்னாள். மனைவி சொன்னபடி, ஐந்து வருட உழைப்பையும் ஒரே வங்கியில் போட்டு வைத்தான் விக்னேஷ்.
அடுத்த நாள் மார்க்கெட்டுக்குப் போய் நாட்டுக் கோழி வாங்கி வாட்டி எடுத்துவருகிறேன் என்று கிளம்பிய சாந்தி, மதியம் வரை வரவே இல்லை. வீட்டில் அத்தனை பேரும் தேடிப் பார்த்தார்கள். அப்போதுதான் வீட்டில் அவளுடைய புடவை, நகைகள் எதுவுமே இல்லை என்பது தெரியவந்தது. பதறியபடி வங்கிக்குப் போனான் விக்னேஷ். முழு பணத்தையும் விக்னேஷின் பொய் கையெழுத்து போட்டு சாந்தி எடுத்துப் போய்விட்டாள். ஆம், யாரோ தூரத்து உறவினர் ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள் சாந்தி. ஒட்டுமொத்த பணம் மட்டுமின்றி, தன்னுடைய எதிர்காலமும் கேள்விக்குறியான அதிர்ச்சியில் உறைந்துவிட்டான் விக்னேஷ். அடுத்து விக்னேஷ் எந்த வேலைக்கும் போகவில்லை. எதற்காக வேலைக்குப் போகவேண்டும், எதற்காக சம்பாதிக்க வேண்டும் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டான். ஒரு பிச்சைக்காரன் போல் கிடைத்ததை தின்று வாழ்ந்துவருகிறான். இது ரத்தமும் சதையுமாக வாழும் ஒரு மனிதனின் நிஜம்.
எதிர்கால கனவுடன் உழைக்கும் அத்தனை ஆண்களின் மனைவிகளும் ஓடிப்போவார்கள் என்று எச்சரிப்பதற்கு விக்னேஷ் கதையை சொல்லவில்லை. நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தில் மட்டும் வாழ நினைப்பவர்களுக்கு, அப்படியொரு காலம் வராமலே போகலாம் என்பதை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட கதை.
நேற்று என்பது உடைந்துபோன கண்ணாடி பாத்திரம். அதனை பத்திரமாக பாதுகாப்பதால் எந்த பயனும் இல்லை. இன்று என்பது கையில் இருக்கும் ஆப்பிள் பழம், இப்போது ரசித்து ருசித்து சாப்பிட முடியும். சாப்பிடாமல் வைத்திருந்தால் கெட்டுப்போகலாம். நாளை என்பது பெருங்கனவு. நல்லதாக அல்லது கெட்டதாக தோன்றும் கனவுகளால் எந்த பிரயோஜனமும் கிடையாது. கனவில் பார்த்த வசதி, சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இன்றைய சந்தோஷத்தை இழப்பது முட்டாள்தனம். அதனால் அன்றன்று கிடைக்கும் மகிழ்ச்சியை சந்தோஷமாக அனுபவிப்பதுதான் வாழ்க்கை.
1. படிப்பு, வேலை, திருமணம் போன்ற திட்டமிடுதல் எல்லாமே எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்குத்தானே..?
படிப்பு என்பது அறிவை விருத்திசெய்யும் செயல். வாழும் ஒவ்வொரு கணமும் உன் அறிவை விரிவுபடுத்தித்தான் ஆகவேண்டும். இன்றைய காலத்திற்கேற்ப நவீனமாக மேம்படுத்திக்கொள்வது அவசியம். அதுபோல் வேலை செய்தால்தான் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். உண்ண உணவும் உடுக்க உடையும் தங்குவதற்கு இடமும் கிடைப்பதற்காக வேலை செய்துதான் ஆகவேண்டும்.
ஒரு செல் உயிரியில் இருந்து உலகிலேயே பெரியதான திமிங்கலம் வரையிலுமான அத்தனை உயிர்களுக்கும் இருக்கும் அடிப்படை குணங்களில் ஒன்று சந்ததியை பெருக்குதல். அறிந்தும் அறியாமலும் இந்தப் பணியை அத்தனை உயிர்களும் செய்கின்றன. அதனால் திருமணம் என்பதையும் குழந்தை பிறப்பையும் இன்றைய செயலாகத்தான் பார்க்கவேண்டும்.
2. அப்படியென்றால், எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டாமா?
சேமிப்பு அவசியம். ஆனால் இன்றைய வாழ்க்கை அதைவிட முக்கியம். ஒரு வகையில் மனித வாழ்க்கையை இயந்திரத்தோடு ஒப்பிடலாம். இயந்திரத்தை முறையாகவும் சரியாகவும் பராமரித்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் எதிர்காலத்தில் கிடைக்கும். இயந்திரத்தை ஜாக்கிரதையாக பாதுகாப்பதாக நினைத்து, நீண்டகாலம் மூடி வைத்திருந்தால், மோட்டார் முதலான பாகங்கள் துருப்பிடித்து எதற்குமே பயன்படாமல் போய்விடும். இயந்திரத்திற்கு போதிய ஓய்வு கொடுத்து, சின்னச்சின்ன பழுதுகளை அவ்வப்போது சரிசெய்து, தொடர்ந்து பராமரிப்பு செய்துவந்தால் மட்டுமே, பிரச்னை இல்லாமல் இயந்திரம் ஓடும். அதனால் இன்றைய வாழ்க்கையை அனுபவிக்காமல் எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பது சரியல்ல, இன்றைக்குப் போக சிதறியவற்றை சேமித்தால் போதும்.
3. எதிர்காலம் நிம்மதியாக அமைய எவ்வளவு சேமிக்க வேண்டும்?
இன்னும் சில காசுகள் போட்டாலே நிரம்பிவிடும் போல் தோற்றமளிக்கும் மாய உண்டியல்தான் எதிர்காலம். எத்தனை காசு போட்டாலும் உண்டியல் நிரம்பவே செய்யாது என்பதுதான் உண்மை. அதனால் நீ எதிர்காலத்திற்காக எவ்வளவு சேமித்து வைக்கிறாய் என்பது முக்கியமே அல்ல. ஒரு பைசாகூட இல்லாதவன் தன் வாழ்நாளை நிம்மதியாக வாழ்ந்துமுடிக்கலாம். பெரிய கோடீஸ்வரன் பணம் போதாமல் விழிபிதுங்கலாம். அதனால் நிச்சயமற்ற பயணத்துக்காக உன்னை அதிகம் சிரமப்படுத்திக் கொள்ளாதே.
4. எதிர்கால ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் பிடிப்பு, நம்பிக்கை ஏற்படாதே…?
நான் படித்து டாக்டராகப் போகிறேன் என்று ஆசைப்படுவது நியாயமே. இந்த ஆசை தவறும் அல்ல. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, மருத்துவப் படிப்புக்கான புத்தகத்தைப் படிக்க முயற்சிப்பது அபத்தமான செயல். இப்போது ஒரு மாணவனாக உன்னுடைய கடமையானது, பத்தாம் வகுப்பில் நன்றாக படித்து, நிறைய மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்து மருத்துவம் படிப்பதற்கான அறிவியல் பிரிவில் இடம் பிடிப்பதுதான். இதுதான் இன்று செய்யவேண்டிய பணி. அதனால் மருத்துவ ஆசை இருந்தால் பத்தாம் வகுப்பில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இதைவிடுத்து சின்ன வயதிலேயே எதிர்கால கனவில் மூழ்குவது அபாயமே. ஏனென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும்போது உனக்கு மருத்துவத் துறையில் ஆர்வம் குறைந்திருக்கலாம் அல்லது போதிய மதிப்பெண் எடுக்க முடியாமல் போகலாம். மனதில் முடிந்துவைத்திருந்த ஆசை நிறைவேறவில்லை என்றதும் நிலைகுலைய அவசியம் இல்லை. ஏனென்றால் நீ மருத்துவம் படிக்கவில்லை என்பதால் உன் வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை. அதைவிட சிறப்பான எதிர்காலம் அமையலாம். அதனால் இன்றைய தினத்தில், இன்றைய நேரத்தில், இந்த நொடியில் சந்தோஷமாக வாழ்ந்து பழகு. எதிர்காலமும் சிறப்பாகவே அமைந்துவிடும்.