காசி நகரை வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டே இருந்தேன். ஏதேதோ பாதைகள்… எத்தனையோ மனிதர்கள்… வகைவகையாக தெய்வங்கள். கையில் பணம் இருந்தாலும் சாப்பிட விருப்பமில்லை. பசியுடன் அலைவதும் ஆனந்தமாக இருந்தது. உண்ணாமல்… உறங்காமல்…. ஆடையெல்லாம் புழுதியாக… பிணங்களை எரிக்கும் மயானத்திற்கு வந்தேன். லாகிரி வஸ்துகளின் மகிமையில் போதையுடன், கையில் எலும்புகளுடன் கால பைரவர்கள் பலர் ஆங்காங்கே சுற்றித் திரிந்தனர்.

சற்றுத்தள்ளி இடிந்து கிடந்த ஒரு வீட்டின்  பின்புறம் நிறைய சாமியார்கள் நடமாட்டம் தெரியவே, அருகே சென்று பார்த்தேன். சின்னக் கள்ளிப்பெட்டி ஒன்றின் மேல் உருண்டை உருண்டையாக, ‘பாங்கு’ அடுக்கி வைத்திருந்தார்கள். பாங்கு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம் என்றாலும், அது  போதை சொர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடும் என்று கேள்விப்பட்டு இருந்ததால், திடீர் ஆசை எனக்குள் எரியத் தொடங்கியது. உடனே இரண்டு உருண்டைகள் வாங்கி, அவர்கள் கொடுத்த பாலில் கலந்து விழுங்கிவிட்டு, மறுபடியும் நடக்கத் தொடங்கினேன்.  எந்த மாற்றமும் அறிகுறிகளும் தென்படவில்லை.

கொஞ்சநேரத்தில் காற்றில் மிதந்து சஞ்சாரம் செய்வதைப் போல் ‘பாங்கு’ அமிர்ந்தமாக இருந்தது. நேரம் போகப்போக கண்கள் மங்கி, நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது. மூளை இட்ட கட்டளையை உடல் ஏற்கவில்லை. கால்கள் நிற்க முடியாமல் தடுமாறவே… அப்படியே தள்ளாடினேன். தடுமாற்றத்தை மிகவும் ரசித்து நானே எனக்குள் சிரித்தேன், பின் வாய்விட்டுச் சிரித்தேன். கொஞ்சநேரத்தில் தலைக்குள் வாணவேடிக்கை நடப்பது போன்று பட்பட்டென்று வெடிக்க, அப்படியே விழுந்தேன்.

கண்களைத் திறக்கும் முன் மனம் விழித்துக் கொண்டது. யாரோ உடலைப் பிடித்து அழுத்துவது போல் இருந்தது… மருத்துவமனை வாசம் மூக்கைத் தொட்டது. யாராவது அருகில் இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள கொஞ்சநேரம் கண்களை மூடி, காதுகளை மட்டும் திறந்து வைத்துக் கேட்டேன். இந்தியில் யார்யாரோ தூரத்தில் பேசுவது கேட்டது. கண் திறந்தேன். மருத்துவமனையில்தான் இருக்கிறேன். தலையை வலதுபுறம் திருப்பினேன். என்னையே பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்து இருந்தான், கோவிந்தன்.

அவன்தான் என்னைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறான். வெறும் வயிற்றில் பாங்கியை சாப்பிட்டதால், கடுமையாக போதை ஏறி இரண்டு நாட்கள் மயங்க வைத்திருக்கிறது. ஊருக்குக் கிளம்புவதை ராமச்சந்திரன் இன்னும் இரண்டு நாட்கள் தள்ளிப் போட்டிருப்பதாகவும், தற்போதுதான் அவன் வீட்டுக்குச் சென்றான் என்பதையும் சொன்னான்.

‘’நீங்க நல்ல சாமியாருன்னு நினைச்சேன், நீங்களும் போதையில…’’ உண்மையாக வருத்தம் காட்டினான்.

‘’சாமியாருன்னாலே போலிதானே, அதுல என்ன நல்ல சாமியார்?” என்று சிரித்தேன். ‘’போதையில் சரியும் இல்லை, தவறும் இல்லை…” என்றபடி படுக்கையில் இருந்து எழ நினைத்தேன், லேசாக தலை சுற்றியது. அதைப் பொருட்படுத்தாமல் கோவிந்தன் தோளைப் பிடித்து எழுந்து அமர்ந்தேன். பின் எழுந்து அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தேன்.

தூரத்தில் அறுவை சிகிச்சை அறை பரபரப்பாக இருந்தது. நர்ஸ்கள் அவசரம் அவசரமாக குறுக்கும் நெடுக்குமாக போய் வருவதைப் பார்த்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கையில் ஏனோ செயற்கைத்தனம் இருந்தது. என்னுடைய பார்வையைப் புரிந்து கொண்ட கோவிந்தன் தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி பேசினான்.

‘‘அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் ஆகுதாம், இப்போ புருஷனுக்கு இதய ஆபரேஷன் நடக்குது…’’ என்றான்.

நான் பார்ப்பதை உணர்ந்தவள் எழுந்து நேரடியாக என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தாள். வாய்க்கு வந்ததைச் சொல்வதைப் போலவே இப்போதும், ‘‘கதை முடிஞ்சு போச்சு’’ என்று சொல்லிவிட்டு, தொண்டையில் கைவைத்து இறந்து போய்விட்டான் என்று பாவனையில் சொன்னேன். அந்தப் பெண்ணுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ, உடனே அவள் முகம் சிவந்து ஆவேசமாகி… தன் காலில் போட்டிருந்த செருப்பைக் கழட்டி ‘சட்சட்’டென சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *