இந்த மண்ணின் தன்மை என்பது என்னவென்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது. ஆம், எந்த நேரமும் காலில் செருப்புடன் நடமாடும் தலைமுறைக்கு மண்ணுக்கு உயிர் இருப்பதும், அதன் வாசனையும் தெரியவே செய்யாது.  

குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை எந்த பெற்றோரும் இப்போது விரும்புவதில்லை. செருப்பு இல்லாமல் நடமாடவும் விடுவதில்லை. சிமெண்ட் மற்றும் தார் கொண்டு மூடப்பட்ட சாலைகள் மிகுந்த சுகாதாரக் கேடு நிறைந்தது என்பது உண்மையாகவே இருந்தாலும், தினமும் ஐந்து நிமிடங்களாவது மண்ணில் கால் பதியவேண்டும். அதுவே உடலுக்கு பலம் தரக்கூடியது. ஆம், அதுவும் ஒரு வகையில் மண் சிகிச்சையே. இரவும் பகலுமாக வயலில் வேலை செய்யும் எந்த உழவனுக்கும், பெண்ணுக்கும் தோல் வியாதிகள் ஏற்படுவதில்லை, பசியின்மை, ஜீரணக் கோளாறு உருவாவதும் இல்லை. அதற்கு காரணம் மண்ணின் மகிமைதான்.

இன்றைய நாகரிகத்தில் மண்ணில் கால் பதிக்க நேரமும் இடமும் இல்லை என்றாலும், வாரத்தில் ஒரு நாளாவது இயற்கை மண்ணில் எழுப்பப்பட்ட பூங்கா, கடற்கரை, மைதானம் போன்ற இடங்களில் அரை மணி நேரமாவது வெறும் காலுடன் நடைபோட வேண்டும். வெளிநாட்டினர் மண்ணின் மகிமை உணர்ந்ததாலே, மண்ணை உடல் முழுவதும் தடவி, அதனை சிகிச்சையாக எடுத்துக்கொள்கிறார்கள். மண்ணில் நடப்பதும், மணலில் விளையாடுவதும், மண்ணை உடலில் பூசிக்கொள்வதும் உடல் சூட்டைக் குறைத்து, ஜீரணக் குறைபாடுகளை நீக்கக்கூடியது.

முகத்தில் முகப்பரு, கரும்புள்ளி, கீறல்கள் தென்படுகிறதா? கண்ட க்ரீம்களையும் தடவி பணத்தை வீணாக்க வேண்டாமே. சுத்தமான மண்ணை எடுத்து முகத்தில் தண்ணீர் கலந்து பூசி, 30 நிமிடம் கழித்து கண் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை தினமும் கடைபிடிக்கலாம்.

நாம் பொதுவாகவே சமைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால், உடலில் விஷத்தன்மை தேங்கிவிடுகிறது. மண் குளியல், மண்ணில் கால் பதிப்பதும் உடலில் உள்ள விஷத்தன்மையை உறிஞ்சும் தன்மை கொண்டது. மலச்சிக்கல், பசியின்மை, தலைவலி போன்ற நோயில்லாத பிரச்னைகளுக்கும் மண் நல்ல அரு மருந்து. பூமா தேவியை தாயென்று சும்மா சொல்லிவைக்கவில்லை, நம் முன்னோர். தாய்மையும் அன்பும் கொண்ட மண்ணை மதிக்கக் கற்றுக்கொண்டால், அது மருந்தாகவே பயன்படுகிறது. பஞ்ச பூதங்களுக்கும் உடலுக்கும் எப்போதும் ஏதேனும் வகையில் தொடர்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதனால், மண்ணை வணங்குகிறோமோ இல்லையோ, மண்ணில் பாதமாவது பதித்து மதிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *