கோவணமும் கப்பறையுமாக துறவறமேற்றுப் புறப்பட்டபோது, பட்டினத்தாரின் தாயார் ஒரு துணிமுடிச்சை இடுப்பில் கட்டி அனுப்பினளாம். ‘எல்லாம் துறந்தாலும் நீ என் மகன்தானடா… என் உயிர்போகும் போது இந்த முடிச்சு அவிழும். எங்கிருந்தாலும் வந்து எனக்குக் கொள்ளி வை…’ என்றாளாம். அப்படித்தான், அந்த முடிச்சு அவிழ்ந்தபோது, தாயின் முடிவு தெரிந்து, பட்டினத்தார் ஓடிவந்து தலைமாட்டின் நின்றாராம்.

’அம்மா, நான் வந்துவிட்டேன்’ என்று கன்றாக அவர் குரல் கொடுக்க… ‘அப்படியானால் நான் நிம்மதியாக வெந்துவிடுவேன்’ என்று கண் மூடியதாம், பாசமுள்ள அந்தத் தாய்ப் பசு.

காசியின் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அறைக்குள் இருக்கிற மனிதன் உயிர்விடப் போகிறான் என்று காட்ட, எனக்குள் எந்த முடிச்சும் அவிழவில்லை. அந்த அறைக்குள் போய்க்கொண்டும், வந்துகொண்டும் இருந்த மருத்துவர்கள்,  செவிலியர்களின் முகங்களில் நம்பிக்கை ரேகை செத்துப் போயிருந்ததை பார்த்தே நான் புரிந்துகொண்டேன். மரணத்தின் நிழல் சூழ்கிற இடத்தில்,  அனுபவஸ்தர்கள் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமில்லையே!

எத்தனை மரணங்களை நான் மிக அருகில் இருந்து பார்த்திருப்பேன்!

‘கதை முடிந்தது’ என்று நான் சொன்னது, கணவன் மீள்வதற்காக வெளியே காத்திருந்த பெண்ணுக்கு இடியாக இறங்கியதில் வியப்பில்லை. பலம் கொண்ட மட்டும் அவள் செருப்பால் அடிக்க… எங்கோ செய்த பாவத்தின் கடனை இங்கே கழிப்பதாக எண்ணிப் பொறுத்துக் கொண்டேன்.

அவள் முந்தானையைப் பிடித்தபடி நின்றிருந்த இரண்டு குழந்தைகள் மிரண்டு போய் பார்த்தன. மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்து தடுத்தபிறகே, என்னை அடிப்பதை நிறுத்தினாள். அப்போதும் என் முகத்தில் உறைந்திருந்த புன்னகையைப் பார்த்து ஆக்ரோஷத்துடன் அமைதியானாள்.

சற்று நேரத்தில் அவள் கணவன் இறந்துபோனதை மருத்துவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவே, அந்த ஆஸ்பத்திரியே அதிரும்படி பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள். அந்தப் பெண்ணுக்குத் தமிழ் தெரிந்திருக்கும் என்பது நான் எதிர்பாராதது. ஆனால் கோவிந்தனோ நான் எல்லாம் உணர்ந்தே சொன்னதாகவும், என் நாக்கில் இருந்துதான் எமன் புறப்பட்டு அந்த அறைக்குள் இறங்கிப் போனதாகவும் நினைத்து மிரண்டிருந்தான்.

’’சாமி… வாங்க! நீங்க ஓய்வெடுக்கணும்’’ என்று அவன் அழைக்க.. நகராமல் அங்கேயே சுவற்றோரமாக அமர்ந்துகொண்டேன்.

’’அந்தப் பொண்ணோட புருஷன் செத்துப்போவான்னு உங்களுக்கு மட்டும் முன்கூட்டியே எப்படித் தெரிஞ்சது சாமி…?’’ என்று பவ்யமாகக் கேட்டான். பதில் பேசாமல் வெறுமனே சிரித்துவைத்தேன்.

இறந்தவனுக்கான சிகிச்சை செலவுகளைக் கட்டி விட்டுத்தான் உடலை வெளியே கொண்டுபோக வேண்டுமென்று நிர்வாகம் சொன்னதும், அந்தப் பெண் மேற்கொண்டு அழவும் முடியாமல் கைபிசைந்தபடி நின்றாள்.

துக்கத்தில் என்னை செருப்பால் அடித்தவள், துன்பத்தில் அழுது தீர்த்தவள், இப்போது நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாத  குழப்ப முகத்தோடு வறண்டு நின்றிருந்தாள். கையில் இருந்த ஒற்றை வளையலையும் காதில் இருந்த சின்னஞ்சிறு கம்மலையும் கழற்றி எடுத்துக்கொண்டு போய் கேஷ் கவுன்டரில் நின்றுகொண்டு ஏதோ கெஞ்ச ஆரம்பித்தாள்.

கோவிந்தனை அனுப்பி விசாரித்துவரச் சொன்னதில், நான் எதிர்பார்த்த பதில்தான் இருந்தது. இதய ஆபரேஷன் பில் தொகை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாம். அந்த அளவு பணம் புரட்ட வழியில்லையாம்!

கோவிந்தனைப் பார்த்து, ‘‘இந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் அறை தெரியுமா?’’ என்று கேட்டேன்.

’’தெரியும்’’  என்றான்.

’’வழி காட்டு…’’ என்று கோவிந்தனுக்கு உத்தரவிட்டு வேகமாக முன்னே நடக்க, என்னை முந்திச் சென்று குளிரூட்டப்பட்ட அழகான வேலைப்பாடுகளுடன் இருந்த அறையின் வாசலைக் காட்டினான். வேகவேகமாக நாங்கள் வருவதைப் பார்த்து, குழம்பி நின்ற காவலாளியின் தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாக உள்ளே புகுந்தேன். என்னுடன் கோவிந்தனும், பின்னேயே காவலாளியும் உள்ளே வந்தனர்.

 ஒரு வடக்கத்திய குடும்பத்துடன் தீவிர ஆலோசனையில் இருந்த தலைமை மருத்துவர், திடுமென உள்ளே நுழைந்த எங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து எழுந்தே விட்டார். அவர் பேச முயலும் முன்னே நான் உரக்கப் பேசினேன்.

’’காற்றுப் போன பைக்கு காசு வேண்டுமோ? இப்போது அவளும் உயிர் போன கட்டை… தெரியுமா?’’ என்றேன். தீ ஜ்வாலை புறப்படுமளவு என் கண்கள் கணகணத்துப் போயிருப்பதை உணர முடிந்தது.

பிய்த்துப்போட்ட இந்தியில் அதை கோவிந்தன் தலைமை மருத்துவருக்கு மொழிபெயர்த்துச் சொன்னான்.  அவனிடம் ஏதோ விபரங்கள் கேட்டார் மருத்துவர். என்னைக் காட்டி, கையெடுத்துக் திரும்பத் திரும்பக் கும்பிட்டு, ‘ஈஸ்வர்… ஈஸ்வர்…’ என்று சொல்லி கோவிந்தன் அந்த டாக்டரை பயமுறுத்துவது புரிந்தது.

கோவிந்தன் அந்தப் பெண் பற்றிய தகவல்களுடன், ‘ஆபரேஷனுக்கு முன்னதாகவே, அந்தப் பெண்ணின் கணவன் மரணமடைந்து விடுவான்’ என்று நான் சொன்னதாகவும், நான் ஏராளமான சக்திகளை கைவரப்பெற்ற தமிழ்நாட்டுச் சாமியார் என்றும் நிறைய சரக்குகளை அள்ளிவிட்டுக் கொண்டே இருந்தான். தலைமை மருத்துவரிடம் மாற்றம் தெரிந்தது, எழுந்து நின்று  என்னை வணங்கியபடி கோவிந்தனிடம் பதில் சொன்னார்.

’’சாமி… கிளம்புங்க, அந்தம்மாவுக்கு சிரமம் இல்லாம நல்லபடியா செய்றேன்னு சொல்லிட்டார்’’ என்று கோவிந்தன் வாயெல்லாம் பல்லாகச் சொன்னதும், அந்த மருத்துவரின் டேபிளில் இருந்த காசி விஸ்வநாதர் புகைப்படத்திற்கு என்னுடைய பாணியில் விபூதி பூஜை நடத்தினேன். மருத்துவர் அறையில் இருந்த குடும்பமும் எழுந்து நின்று வணங்கியது. நான் எதையும் கண்டுகொள்ளாமல் மீண்டும் என் அறைக்கு வந்தேன். ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்ற இயேசுவின் வார்த்தைகளில் எனக்கு அலாதி நம்பிக்கை உண்டு. ஏனென்றால் உதவி செய்வதற்கு எத்தனையோ நபர்கள் தயாராக இருந்தாலும், கேட்பதற்குத்தான் பலர் முன் வருவதில்லை. அதனால் நான் கேட்ட சலுகை கண்டிப்பாகக் கொடுக்கப்படும் என்று நம்பினேன். அப்படியே நடந்தது. ஆனால் அந்த சலுகையும் என்னுடைய சக்தியால் நடந்ததாக கோவிந்தன் புளகாங்கிதம் அடைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *