மார்வாடி இனத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாஜி என்று அறிந்து கொண்டேன். பதினெட்டு வயதிலேயே, இப்போது இறந்து கிடப்பவனுடன் திருமணம் முடிந்துவிட்டதாம். இரண்டு குடும்பமும் வசதியாக இருந்ததால், திருமணமானதும் சென்னைக்கு அழைத்துப் போய் வட்டிக்கடை வியாபாரம் செய்திருக்கிறான். மூன்று வருடங்கள் நன்றாக நடந்த வியாபாரத்தில், கடையில் வேலை பார்த்த சிலரே கூட்டு சேர்ந்து நகையை திருடிவிட்டதால், கடும் சிக்கலில் மாட்டி, சென்னை போதுமென்று மிரண்டு போய் மீதமிருந்த பணத்துடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டான்.

இங்கே வந்ததும் தொழில் தொடங்காமல் குடித்தே அத்தனை பணத்தையும் அழித்ததுடன் நில்லாமல், எல்லா கெட்ட சகவாசங்களையும் பழகியிருக்கிறான். உறவு, நண்பர் வட்டாரங்களில் நிறைய கடன் வாங்கிவிட்டதால், அவர்கள் முழுமையாக அவனிடமிருந்து விலகி விட்டார்களாம்.  

சென்னையில் மூன்று வருடங்கள் இருந்ததால் பாஜிக்கு நன்றாகவே தமிழ் புரிந்திருக்கிறது. இறந்தவன் உடல் ஆம்புலன்ஸில் ஏறத் தயாரான நேரத்தில், உறவினர் ஒருவருடன்  என்னுடைய அறையைத் தேடி வந்த பாஜி,

’’சாமி… மன்னியுங்கோ…’’ என்றபடி காலில் விழுந்தாள். கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த நீரைத் துடைத்தேன்.

’’பாஜி… உன்னுடைய கால்களால் நடக்கக் கற்றுக் கொள். எவரையும் சார்ந்திருக்க நினையாதே… அந்த ஆண்டவன் இனி உனக்குத் துணையாக இருப்பான்…’’  என்று ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தேன். அவளுடன் இருந்த உறவினர்களும் அந்த வேதனையான தருணத்திலும் நன்றி சொல்லி, ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அப்போது உள்ளே வந்த ராமச்சந்திரன், நடப்பவைகளை வித்தியாசமாகப் பார்த்தான். கோவிந்தனிடம் நடந்தனவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டான். அனைவரும் வெளியேறியதும், ‘‘புருஷன் மேல அந்த பொண்ணுக்கு ரொம்பவும் பாசம்னு நினைக்கிறேன். ‘புருஷன் பிழைக்கமாட்டான்’னு நீங்க சொன்னதை தாங்கிக்க முடியாம… செருப்பால அடிச்சுப்புட்டாங்க. ஆனாலும் நீங்க தெய்வத்தைப் போல பக்குவமா புரிஞ்சுக்கிட்டு… உங்களால முடிஞ்ச நல்லதைப் பண்ணிட்டீங்க, உங்களை நாங்க பார்த்ததே அதிர்ஷ்டம்…’’என்று சந்தோஷமானான்.

’’அந்த பெண் அழுததன் காரணம் பாசம் என்றா நினைக்கிறாய் ராமச்சந்திரா… அது பாசம் அல்ல பயம்’’  என்றேன் உறுதியான் குரலில்.

’’என்ன சொல்றீங்க சாமி… அந்தப் பெண்ணுக்கு கணவன் மீது பாசம் இல்லைன்னா சொல்றீங்க?’’  என்று குழம்பினான்.

’’ஆம் ராமச்சந்திரா… கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும் உண்மைகளை புரிந்துகொள்ளத்தான் வேண்டும். நெருங்கியவரின் மரணத்தின் போது வெளிவரும் கண்ணீர் இறந்தவருக்கானது அல்ல… நமக்கானதுதான். இனி அவரது உதவியின்றி, இந்த உலகில் எப்படி வாழப் போகிறோம்? அவரால் இதுவரை கிடைத்த சந்தோஷங்களும், வசதிகளும் இனி கிடைக்காமல் போய்விடுமே என்ற ஆதங்கம். இறந்தவர் துணையில்லாமல், இனி வலிமையுடன் செயல்பட முடியாதே என்ற பயம்.

கணவன் இறந்தபின் கதறி அழுகிற மனைவி, தன் தாலி பறிபோனதுக்கு மட்டுமே அழுவது இல்லை. விவரம் அறியாத வயதில் நிற்கும் இந்தக் குழந்தைகளை இனி எப்படி கடைதேற்றுவேன் என்ற அச்சம்தான் பெரும் அழுகையாக வெடிக்கும். இத்தனை பெரிய அழுகைக்குக் காரணம்’’  என்றேன்.

’’சும்மா எதையாவது சொல்லி பயமுறுத்தாதீங்க சாமி…’’ என்றான்.

’’உண்மை ராமச்சந்திரா. என்னைப் பொறுத்தவரை பெண்தான் மிகப்பெரிய சுயநலவாதி. ஆனால் தன்னைப் பற்றி நினைப்பதில் அல்ல… தன்னையும் தாண்டி தன் குழந்தைகளைப் பற்றி முன்னுரிமை கொடுப்பதில் அவள் மிகப்பெரிய சுயநலவாதி. உலகின் மற்ற எல்லா உறவுகளுக்கும் இரண்டாம் இடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராகிற சுயநலவாதி. அதனால்தான் உலகம் முழுவதும் குடும்பங்கள் நெருக்கமும் சகிப்புத்தன்மையும் இல்லாமல் தவிக்கும்போதும்… நம் தேசத்தில் உறவுகளுக்கான மகிமை மாறாமல் இருக்கிறது…’’ என்றேன்.

ராமச்சந்திரன் என்ன பேசுவது என்று புரியாமல் பார்த்தான்.

’’அதனால்தான் அவள் என்னைச் செருப்பால் அடித்தபோது என் தேகம் குளிர்ந்தது. தன் சுகத்தை மட்டுமே நினைத்து, உடம்பை அழித்துக்கொண்ட கணவன் ஒரேயடியாக தன்னைவிட்டுப் போய்விட்டால், இந்தக் குடும்பத்துக்கு யார் கதி என்ற அவள் சுயநலம்தான் என்னை அடிக்கத் தூண்டியது…’’

’’நம்ப முடியலை சாமி…’’ என்று தடுமாறினான்.

’’இன்று பேப்பரில் ஏதாவது மரணச் செய்தி படித்தாயா?’’

’’இன்றைக்கு என்ன… தினமும்தான் பார்க்கிறேன். துக்கச் செய்தி… வயிற்றெரிச்சல் செய்தியைத் தவிர வேறு என்ன பேப்பரில் வருது?’’

’’சரி… பேப்பரில் பார்த்த எத்தனை மரணங்களுக்கு நீ அழுதிருக்கிறாய்..?’’

அமைதியாக இருந்தான் ராமச்சந்திரன்.

’’எந்த மரணத்திற்கும் அழுதிருக்க மாட்டாய், ஏனென்றால் அவர்களால் உனக்கு ஆவப்போவது எதுவும் இல்லை. ஆனால் உன் பாட்டி இறந்தால் தாங்க முடியாமல் கதறியழுவாய். ஏனென்றால் அப்புறம் உனக்கு யார் சமைத்துப் போடுவது? என்ற கவலையில் அழுவாய்… இனி மரணங்கள் பற்றிக் கேள்விப்படுகையில் உன் உள்மனது என்ன சொல்கிறது என்று கேட்டுப்பார்…’’

கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராமச்சந்திரன், ‘‘சாமி… மரணத்தைப் பத்தி ஆழமா ஆராய வேண்டாமே… நாம இவ்வளவுதானான்னு கேவலமா இருக்கு… மனசு கலவரமா இருக்குது’’

’’ராமச்சந்திரா… நீ பயப்படுவதால் மரணம் வராமல் போய்விடுமா?  நிழல் போன்று நம்முடன் இணைந்தே இருக்கிறது மரணம். அதனை சிநேகத்துடன் பார்க்கக் கற்றுக் கொள். குழந்தைகள் கடற்கரையில் மணல் வீடு கட்டி, கற்களால் அலங்காரம் செய்து சந்தோஷமாக விளையாடுவார்கள். தாயின் அழைப்புக்குரல் கேட்டதும், அப்படியே மணல் வீட்டை மறந்துவிட்டு தாயுடன் சென்று விடுவார்கள். அதுபோன்று மரணம் அழைக்கும்போது, இந்த உடலை விட்டுச் செல்லும் மனநிலையுடன்  எப்போதும் தயாராக இரு. இந்த உலகில் நீ சேமித்தது எதுவும் உன்னுடையது இல்லை என்ற எண்ணம் இருந்தால் மரணம் பற்றிய பயம் வராது’’ என்றேன்.

இன்னமும் மிரட்சியில் இருந்தான் ராமச்சந்திரன்.

’’குருஷேத்திரப் போரில் அர்ஜுனன் ஏன் போர் செய்யத் தயங்கினான்?’’ என்று கேட்டேன்.

’’தாத்தா… குரு… சகோதரர்கள்… நண்பர்களைக் கொன்றுதான் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா என்று தயங்கினான்’’  உடனே பதில் சொன்னான்.

’’இல்லை ராமச்சந்திரா. எதிரிகள் இருக்கும்வரையே வீரனுக்கு மரியாதை. அத்தனை பேரையும் மொத்தமாக அழித்துவிட்டால்… அடுத்து யாருடன் சண்டை போடுவது… நம்மை யார் கொண்டாடுவார்கள் என்றுதான் பயந்தான். அவன் பயந்தபடிதான் ஆனது… அந்தப் போருக்குப் பிறகு அர்ஜுனனின் வீரமும் மறைந்தே போனது…’’

’’எங்கேயோ ஆரம்பிச்சு என்னென்னமோ சொல்றீங்க சாமி… எனக்கு இதெல்லாம் வேண்டாம். நீங்க இப்ப ரெஸ்ட் எடுத்துக்கோங்க, நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் ஆனதும் அப்படியே இங்கிருந்தே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிடலாம். உங்களுக்கு என்ன வேணும்னாலும் சொல்லுங்க, கோவிந்தன் வாங்கித் தருவான்’’  என்று கிளம்ப யத்தனித்தான்.

கோவிந்தனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தேன்.

’’ராமச்சந்திரன் சொல்லைத் தட்டாதே கோவிந்தா… எனக்கு  இன்னும் ரெண்டு பாங்கு வாங்கி வா…’’ என்று சொல்லிவிட்டு காலை நீட்டி கண்களை மூடினேன். நான் விளையாட்டுக்குச் சொல்கிறேனா… உண்மையா என்று தெரியாமல் கோவிந்தன் தவிப்பது என் மூடிய கண்களுக்குள் தெரிந்தது. அப்படியே அடித்துப் போட்டது போல் தூங்கிப் போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *