செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து ஓடினார் என்ற கதை வெகுபிரபலம். உண்மையில் பணம் அத்தனை கொடூரமானதா..?
பணத்துக்காக என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம்.
தான் பெற்ற பிள்ளையை பணத்துக்காக விற்கிறாள் ஒரு தாய். சிறிய தொகை கிடைக்கிறது என்பதற்காக, தனக்கு எந்த தொந்தரவும் தராத ஒரு மனிதனை கொலை செய்கிறான் கூலிப்படையை சேர்ந்தவன். பணம் வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடலை கொஞ்சநேரம் அடுத்தவனுக்கு தானமாகத் தருகிறாள் பெண். பணத்துக்காக பொது சொத்தை கொள்ளை அடிப்பதற்கு அனுமதி கொடுக்கிறான் அதிகாரி. பணத்துக்காக தாய் நாட்டை காட்டிக் கொடுக்கிறான் ராணுவ அதிகாரி.
ஆனால், இன்று இந்த உலகத்தை ஒரே மனித இனமாக வடிவமைத்ததில் பணத்திற்குத்தான் முக்கிய பங்கு உண்டு. பணம் என்பது நம்பிக்கை தருகிறது. பணம் கிடைக்கும் என்ற உறுதியில், நம்பிக்கையில் ஒருவன் உழைக்கிறான். இந்த பணம் நாளை உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் சேமித்து வைக்கிறான்.
எல்லாவற்றையும்விட பணத்துக்கு ஒரு மாபெரும் சக்தியுள்ளது. அது எதுவாகவும் உருமாறும் தன்மை கொண்டது. வாஷிங் மெஷின் வாங்க வேண்டுமா? வீடு வாங்க வேண்டுமா? வாகனம் வாங்க வேண்டுமா? உன்னிடம் பணம் இருந்தால் போதும், அது நீ என்ன ஆசைப்படுகிறாயோ அவை எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். உன்னை சுகவாசியாக, வள்ளலாக, பிச்சைக்காரனாக மற்றவர்களிடம் காட்டுவதும் பணம்தான். அதனால், மனிதகுலத்தின் அத்தனை தீமைகளுக்கு மட்டுமல்ல, நன்மைகளுக்கும் காரணம் பணம் மட்டும்தான். பணம் என்பது நெருப்பைப் போன்றது. அதனை நீ எப்படி பயன்படுத்துகிறாய் என்பதில்தான் வெற்றி உள்ளது. தீ மூட்டி குளிர் காயவும் முடியும், மேனியில் தீ வைத்து மரணிக்கவும் முடியும்.