குறுக்குவழியில் செல்வது சில நேரங்களில் நல்ல முடிவைத் தரலாம். ஆனால், நேர்மையான போட்டியாளர்களை தோற்கடித்து பெற்ற வெற்றி என்பது அடிமனதில் கசடாக தங்கியே இருக்கும்.

நேர்வழியில் தோற்றுப்போனாலும், அது ஆரோக்கியமான தோல்வியாகத் தெரியும். எனவே நேர் வழியில் சென்றே தோற்றுப் போ. சில நேரங்களில் தோல்வியும் உனக்கு வெற்றி ஆகலாம். ஆம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெர்னாண்டஸ் தோற்ற பிறகும் வெற்றி அடைந்த சம்பவத்தை கேள்விப் பட்டிருக்கிறாயா..?

ஓட்டப்பந்தயப் போட்டியின் கடைசி ரவுண்ட். முதல் இடத்தை நோக்கி அம்புபோன்று சென்ற கென்யாவின் ஆபில், எல்லை கோட்டின் குழப்பத்தில் வெற்றிக்கோட்டுக்கு சில அடிகள் இருந்த நேரத்திலே நின்றுவிட்டார்.

பின்னே வந்த ஃபெர்னாண்டஸ்க்கு, ஆபிலின் குழப்பம் புரிந்தது. அதனால், ‘இன்னும் சில அடிகள் ஓடு’ என்று கத்துகிறார். ஆனால், ஸ்பெயின் புரியாத குழப்பத்தில் நிற்கிறார் ஆபில்.

அருகில் வந்துவிட்ட ஃபெர்னாண்டஸ், ஆபிலை தன்னுடன் இழுத்துக்கொண்டு ஓடிப்போய் வெற்றிக் கோட்டை தாண்டி நிறுத்துகிறார். இரண்டாவதாக ஃபெர்னாண்டஸ் வருகிறார். போட்டி முடிகிறது. வெற்றி அடைந்த ஆபிலை விட்டு, அனைத்து பத்திரிகையாளர்களும் ஃபெர்னாண்டஸை நோக்கி வருகிறார்கள்.

‘’ஏன் இப்படி செய்தீர்கள். நீங்கள் முதலிடத்தை எளிதில் பிடித்திருக்கலாமே?” என்று கேட்கிறார்கள்.

கொஞ்சமும் தயங்காமல் பேசுகிறார் ஃபெர்னாண்டஸ். ‘’உண்மையான வெற்றியாளர் ஆபில்தான். வெற்றிக் கோட்டின் குழப்பத்தில்தான் அவர் நின்றுவிட்டார். ஒருவேளை அவரை முந்திச்சென்று நான் வெற்றி பெற்றிருந்தால், என்னுடைய தாய் சத்தியமாக அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார். இதுதான் நேர்மை. இதுதான் தாய்மையின் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *