தொலைக்காட்சியிடம் இருந்து மீளமுடியாமல் தவித்த மனிதர்கள் இப்போது செல்போனின் அடிமையாகிவிட்டான்.  தனிமையும், செல்போனும், தொந்தரவற்ற நேரமும் கிடைத்துவிட்டால், அதுதான் வாழ்க்கையின் சொர்க்கம் என்று ஆனந்தப்படுகிறான்.

செல்போனில் விளையாட்டு, சினிமா, செய்திகள் என மூழ்கியிருக்கையில், ஹாலிங் பெல் அடிப்பதையும், செல்போன் அழைப்பையும், ஏன் பெற்றோர் இடையூறு செய்வதையும் மனிதன் விரும்புவதில்லை. செலவில்லாமல் கிடைக்கும் சந்தோஷத்தை ஏன் இழக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய கேள்வி.

ஓய்வு நேரத்தில்தான் செல்போனில் பொழுதுபோக்குவதாக பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மனிதனை செல்போனே இயக்குகிறது. எப்போது தனிமை கிடைக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஏங்குகிறான். பத்து நிமிடம் கிடைத்தால்கூட சமூக இணையதளத்தில் நுழைந்துகொள்கிறான். பெரியவர் நிலையே இப்படி என்றால், குழந்தைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இது ஆபத்தான சாதனம் என்று தெரியாமலே விளையாடுகிறது குழந்தை.

செல்போனில் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது, விஞ்ஞான வளர்ச்சியை எந்தக் காரணம் கொண்டும் தடுக்கமுடியாதுதான். செல்போன் மூலம் பாடம் படிக்கும் நிலையில்தான் குழந்தைகள் இருப்பதும் நிஜம்தான்.

ஆனால், செல்போன் என்பது உடலுடன் ஒட்டிப் பிறந்த விரல் அல்லவே. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை செல்போனை எடுத்துப் பார்ப்பது, மெசேஜ் வரவில்லை என்றால் செல்போனில் ஏதோ பிரச்னை என்று ஆராய்வது, இரவிலும் விழித்துப் பார்ப்பது, செல்போன் இல்லையென்றால் கைகள் நடுங்குவது பலருக்கும் சகஜமாகிவிட்டது. கண்களில் பிரச்னை, தூக்கத்தில் குழப்பம், ஞாபக மறதி, வேலையில் தடுமாற்றம் போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், இதன் பிடியில் இருந்து வெளிவர முடியாமல் அல்லது விரும்பாமலே மனிதன் இருக்கிறான்.

அதுசரி, செல்போன் அடிமையாக இருக்கும் மனிதனை மீட்பது எப்படி?

கண்டிப்பதாலோ, தண்டிப்பதாலோ முடியவே முடியாது. மனக்கட்டுப்பாட்டை வளர்க்க வேண்டும். தினமும் செல்போன் பயன்பாட்டுக்கு என்று நேரம் வரையறுத்துக்கொள். பக்கத்தில் யாரேனும் இருக்கும்போது செல்போனை பேசுவது தவிர, வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ’நான் செல்போன் அடிமை இல்லை’ என்று சந்திக்கும் நபரிடம் எல்லாம் முன்கூட்டியே உரக்கச் சொல்லிவிடு. அதுதான், உனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கொடுக்கும். தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்போன் தேவையில்லை என்ற நிலைமையை நீ உருவாக்கினால், உன் குழந்தையும் அதை தொடரும்.  இந்த கட்டுப்பாடு மூலம் எக்கச்சக்க நேரம் கிடைக்கும். நேரம் கிடைப்பதைவிட பெரிய வரமும் சுகமும் வேறு எதுவுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *