மனித வாழ்க்கை விசித்திரமானது. எப்போது ஒருவருக்கு முழு தெளிவு வரவேண்டுமோ, அந்த நேரத்தில் அச்சம் வருகிறது. அதாவது தெளிவை வரவழைத்துக்கொள்ளாமல், வளர்க்கப்படுகின்றனர்.

பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் வாழ்க்கையை செட்டில் செய்வது என்று முடிவதற்குள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட நேர்கிறது. அதுவரை பரபரவென வாழ்ந்தவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகுதான் பெரும் அச்சம் வருகிறது. இன்னமும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி கழிக்கப் போகிறோம் என்று அஞ்சுகிறார்கள்.

அப்படியொருவர், ஞானகுருவை தேடிவந்தார். எதிர்காலம் பற்றிய அச்சத்துக்கு முடிவு கட்டும் வகையில் பேசினார்.

நீ மனிதனாக வாழ விரும்புகிறாயா, மற்ற உயிரினங்கள் போன்று வாழ ஆசைப்படுகிறாயா..?

என்ன கேட்கிறீர்கள் என்பதே எனக்கு புரியவில்லையே, இதற்கு நான் எப்படி பதில் சொல்வது..? – அவர் முழுமையாக ஞானகுருவிடம் சரண்டைந்தார். ஞானகுருவே பேசத் தொடங்கினார்.

இந்த உலகில் மனிதன் மட்டுமே ஓய்வு வயதை எட்டுகிறான். மற்ற உயிரினங்கள் பள்ளிக்குப் போவதில்லை, திருமணம் முடிப்பதில்லை, வேலைக்குச் செல்வதில்லை, ஓய்வு அடைவதில்லை. வாழ்நாள் முழுவதும் உண்பது, உறங்குவது, உயிர் வாழ்வது மட்டுமே அவற்றுக்குத் தெரியும். அந்த வகையில் மனிதனும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இயற்கை வழிக்குத் திரும்பிவிடலாம்.

அதாவது, எவ்விதமான எதிர்கால திட்டமிடலுமின்றி, சாப்பிட்டு, தூங்கி எழுந்து மீண்டும் சாப்பிட்டு மரணம் வரை பொழுது போக்கலாம். எதிர்காலம் பற்றிய லட்சியம், சிந்தனை, திட்டமிடல் இல்லையென்றால் நிச்சயம் துன்பமும் இருக்காது. ஒவ்வொரு நேரம் உணவு சாப்பிடுவதும், தூங்கி எழுவதும் ஆனந்தமாகவே தோன்றும். அப்படியொரு மனநிலைக்கு சென்றுவிடு. வாழ்நாள் முழுவதும் இயற்கையையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடி பொழுதை போக்கிவிடு.

மனிதனாக வாழ்வது என்றால்..?

எது சிக்கல் இல்லையோ, அதனை மனிதர்கள் விரும்புவதில்லை. அதனால்தான், நாகரிகம் என்ற பெயரில் வாழ்க்கையை சிக்கலாக்கி, இத்தனை பெரிய அவலத்தில் மாட்டியிருக்கிறான். ஆனால், இதிலும் நீ இன்பத்தைக் காணும்படி ஓய்வு காலத்தை அனுபவிக்க முடியும்.

ஏனென்றால் இப்போதுதான் நீ முழு அளவு அறிவு பெறும் நிலைக்கு வந்திருக்கிறாய். இப்போதுதான் நீ திறமையின் உச்சத்தில் இருக்கிறாய்.

  • ஏனெனில் 30 வயது வரை விளையாட்டுத்தனத்துடன், இன்பமான வாழ்க்கையை ரசிக்கத் துடிப்பவனாக, எதிர்காலத்தை முடிவு செய்பவனாக இருந்தாய்..
  • அதன்பிறகு 50 வயது வரை உன்னுடைய வாரிசுகளை சரியான படி வளர்க்கவும், குடும்ப வாழ்க்கையை சரியாக அமைக்கவும் உன் சக்தியை செலவிட்டாய்..
  • 60 வயது வரை உனக்கான எதிர்காலத்தை முடிவு செய்யவும்,  குடும்பத்தின் சுமையை இறக்கிவைக்கவும் பணியாற்றினாய்.
  • 60 வயதுக்குப் பிறகுதான் உனக்கு எந்த சுமையும் இல்லை. உனக்காக உன்னுடைய முழு நேரத்தையும் செலவிட முடியும். உன்னிடம் இப்போது நிறைய நிறைய அனுபவமும் எக்கச்சக்க ஆற்றலும் இருக்கிறது.
  • இந்த வயதில் உடல் தளர்ந்திருக்குமே தவிர, மூளை சிறப்பாக செயல்படும். அதனால்தான், நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலோர் 60 வயதை தாண்டியவர்களாக இருக்கிறார்கள். 60 முதல் 75 வரையிலும் உன்னால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும். இழப்பதற்கு உன்னிடம் எதுவும் இல்லை என்பதால், நீ ஆசைப்பட்ட எதையும் செய்துபார்க்கலாம்.
  • 75 வயதுக்குப் பிறகு உன் உடலில் ஆற்றல் இருந்தால், அப்போதும் செயல்படு. ஆற்றல் முழுமையாக குறையும் வரையிலும் செயலாற்று. உடல் ஆற்றல் குறைந்ததும், மற்ற உயிரினங்களைப் போன்று, எல்லா கடமைகளையும் உரிமைகளையும், பொறுப்புகளையும் தூக்கிப் போட்டுவிட்டு இந்த உலகத்தை வேடிக்கை பார்.
  • அதனால் 60 வயது என்பது அச்சப்படுவதற்கான வயது அல்ல, ஆனந்தம் அடையும் வயது. எத்தனை பெரிய வாழ்க்கையும், எத்தனை பெரிய அனுபவமும் உன் முன்னே இருக்கிறது என்று எண்ணிப்பார்.

நீங்கள் சொல்வதை எண்ணும்போது ஆனந்தமாக இருக்கிறது, ஆனால், எனக்கு வாழும் வரையிலும் மருத்துவம் மற்றும் உணவுக்குத் தேவையான அளவு சேர்க்கவில்லையோ என்ற அச்சம் இருக்கிறதே..?

நாளை காலையில் ஏதேனும் இரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பறவை மரத்தின் மீது நிம்மதியாக தூங்குகிறது. மழை வந்துவிடும், உணவு கிடைக்காமல் போய்விடும் என்று அச்சப்பட்டு எதையும் சேமிக்க நினைப்பதில்லை. எத்தனை கோடி பணம் உன்னிடம் இருந்தாலும், அவை உனக்கு நம்பிக்கை கொடுத்துவிடாது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வை. உணவும் மருந்தும் கிடைத்தால் எடுத்துக்கொள். இல்லையென்றால், பசியையும் நோயையும் ரசித்து மரணத்தைத் தழுவு.

திடமான மனதுடன் விடைபெற்றார் அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published.