குழந்தையை கவனித்துக்கொள்ள தாய் இருக்கும்போது, அதற்கு என்ன பிரச்னை இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா..? பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் போன்றவை இருப்பதால், மனம் பாதிப்படைகிறது என்பதுதான் உண்மை.
இதனை எப்படி வெளிக்காட்டும் என்பதில்தான் குழந்தைக்கு குழந்தை மாறுபடும். மனம் பாதிக்கப்பட்ட ஒருசில குழந்தைகள் அதிகம் சாப்பிடும், ஒருசில குழந்தைகள் அமைதியாக கை சூப்பிக்கொண்டு உட்கார்ந்துவிடும். ஒருசில குழந்தைகள் தரையில் புரண்டு அழுவது, மண்ணைத் தின்பது, சுவரில் முட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும்.
இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். குழந்தையின் மனம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால், ரொம்பவே சிம்பிள். ஆம், ’நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன், எனக்கு எந்த ஆபத்தும் வராது’ என்பதை குழந்தை உணரவேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும்.
அதனால், குழந்தைக்கு எதிரே பெற்றோர்கள் சண்டை போடுவது, பெற்றோரை வேறு யாராவது திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அதேபோன்று, தாய் அல்லது தந்தை வேலைக்குச் செல்வது குழந்தைக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. அதனால், அதற்கேற்ப குழந்தையை தயார் செய்தபிறகே வெளியே செல்ல வேண்டும். பாப்பாவுக்கு சாப்பிட காய் வாங்கிட்டு வருவேனாம், வேலை பார்த்துட்டு வருவேனாம் என்று சொல்வதுடன், அதுவரை பாதுகாப்பாக இருப்பதற்கான வழிவகையும் செய்துவிட்டே கிளம்ப வேண்டும்.
வீட்டில் யாரேனும் குழந்தையை முரட்டுத்தனத்துடன் கையாளுதல், தவறாக பயன்படுத்துதல், மிரட்டுதல், அடித்தல் போன்றவையும் குழந்தைக்கு அச்சத்தை விளைவிக்கக்கூடியது. அதேபோன்று வீட்டில் திடீரென நடக்கும் நல்லது அல்லது கெட்ட விசேஷங்களுக்கு கூட்டம் கூடுவது, பலரும் குழந்தையைக் கையாள்வது போன்றவையும் அச்சத்தைக் கொடுத்துவிடும்.
குழந்தையைக் கவனிக்காமல் மற்றவர்கள் பேசிக்கொண்டு இருத்தலும், மருந்துகளின் பக்கவிளைவு, போதிய உணவு இல்லாமை, தூக்கக் குறைவு போன்றவையும் குழந்தையின் மனதை பாதிக்கிறது. மனதளவில் பாதிப்பு இல்லாத குழந்தையால் மட்டுமே, தைரியமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடியும். அதுதான் குழந்தைக்கு உடல் மற்றும் மன வளர்ச்சியைக் கொடுக்கும். ஆகவே, குழந்தைக்கு உணவும், பொம்மையும் கொடுப்பது மட்டும் போதாது, மனம் பாதிக்கப்படாமல் போதிய நேரம் குழந்தைக்கு ஒதுக்கி, அதன் மனதை பாதுகாக்க வேண்டியதும் பெற்றோர் கடமையே.