ஆயிரம் முறையாவது மன்னிப்பு கேட்டிருப்பான் ராமச்சந்திரன். தாங்கள் என்னை சந்தேகித்த பாவத்தால்,  ஏதாவது கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று பாட்டி பயந்து நடுங்கினார். புலம்பிக் கொண்டு இருந்தவர்களை அருகே அமரவைத்து, சகஜமாக உரையாடினேன்.

’’மனம் ஒரு மாயக்குரங்கு. அடிக்கடி தாவிக்குதித்து சேட்டைகள் செய்யும். அதனால் நடந்தவை குறித்து உங்கள் மீது வருத்தம் இல்லை… நீங்கள் சாதாரண மானுடர்கள்தானே…’’ என்றேன்.

இந்தமுறை பாட்டி ‘தொப்’பென்று காலில் விழ முயற்சி செய்யவே… நான் எழுந்து கொண்டேன்.

’’உங்கள் நெஞ்சில் இருக்கும் பயம் போகவேண்டும், அதற்காகவே உங்களுடன் மீண்டும் வருகிறேன்…’’ என்று அவர்களை சமாதானப்படுத்திக் கிளம்பினேன். நான் வீட்டுக்குள் காலடி வைத்ததும், ஓடோடி வந்து காலில் விழுந்து, ‘மன்னிக்கவேண்டும்’ என்று கதறினான், கோவிந்தன். நான் புன்னகை பூத்ததும், பெட்டிப் பாம்பாக ஓரத்தில் ஒட்டிக் கொண்டான்.

பாட்டி சூடாக ஒரு டம்ளர் பால் கொண்டுவந்து பயபக்தியோடு என்னிடம் நீட்டினாள். பிறகு தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல் பேச ஆரம்பித்தாள்.

’’ராமச்சந்திரனோட அப்பாவுக்கு, அதான் என் மருமகனுக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆயிடும். இப்போ பொண்டாட்டியோட டெல்லியில் இருக்கார். ராமச்சந்திரன் சின்ன வயசில் இருந்தே சென்னையில் என்கிட்டத்தான் வளர்ந்தான். இப்பவும் என்கூடவே இருப்பேன்னு அடம் பிடிக்கிறான். இந்தக் கிழட்டுக் கட்டையுடன்  இருப்பதால்தான் இவனுக்குப் பெண் அமையவில்லை. அம்மா, அப்பாவுடன் போய் இருக்க மாட்டேன் என்கிறான். இவன் டெல்லிக்குப் போய் அப்பா, அம்மாவோட இருந்துட்டான்னா போதும். ஒண்டிக்கட்டை நான் காசியிலேயே அக்கடான்னு காலத்தை முடிச்சுக்குவேன்’’ என்று சொன்னாள் பாட்டி.

’’மரணத்தை வரவேற்கத் தயாரான உங்கள் மனநிலை மிகவும் உயர்வானது. ஆனால், உயிர்விட காசியும் கங்கையும்தான் உகந்த இடம் என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் வசிக்கும் சென்னை புனிதம் இல்லையா… தள்ளாத வயதில் தனிமையை விரும்பாமல், உறவுகளின் மத்தியில் இருந்தபடி, மிச்ச காலத்தையும் கழிக்கலாமே… எதற்காக ராமச்சந்திரனை அனுப்பிவிட்டு காசியில் மரணிக்க நினைக்கிறீர்கள்’’ என்று பாட்டியிடம் அமைதியாகக் கேட்டேன்.

’’இந்தக் கிழடால் யாருக்கு என்ன நன்மை சாமி… எல்லோருக்கும் நான் இப்போ பாரம்தான். ராமச்சந்திரனுக்குக் கல்யாணம் ஆனாலும், மாட்டுப்பெண் எப்படி இருப்பாளோ… வேண்டாம் சாமி. காசியில செத்தா நேரா மோட்சமாம்… இனிமே பிறப்பே வேண்டாம் கடவுளே…’’ என்று கைகூப்பினாள்.

’’அவ்வளவு கஷ்டப்பட்டு விட்டீர்களா?’’

கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவள் பொலபொலவென கண்ணீர் சிந்தினாள்.

’’கல்யாணம் ஆன நாளில் இருந்து நான் என்ன சுகத்தைக் கண்டேன் சாமி? ஏதோ ஊர் உலகத்துக்காக ஒண்ணா சேர்ந்து குடும்பம் நடத்தினேன். அந்த மனிதனிடம் பட்ட கஷ்டங்களை நான் வெளியே சொன்னது இல்லை… இதோ இவனுக்குக்கூடத் தெரியாது. உண்மையில் அவர் செத்ததும் வெளி உலகத்துக்காகத்தான் அழுதேனே தவிர, உண்மையில் வருத்தமே இல்லை. அந்த அளவுக்கு மனசு மரத்துப் போய் இருந்தது. இன்னும் சொல்லப்போனா, அந்த மனுஷனோட சாவு எனக்கு மகிழ்ச்சியான தினமாக… அதாவது சிறையில் இருந்து விடுதலை கிடைச்சமாதிரி இருந்துச்சு…’’ என்று மீண்டும் அழுதாள். அவள் நன்றாக அழட்டும் என்று அமைதியாக இருந்தேன்.

’’அவரது மரணத்திற்கு நான் சந்தோஷப்பட்டது, என் மனதில் குற்ற உணர்ச்சியாக தங்கிவிட்டது. ஒரு உயிர் பிரிதலை ரசிக்கும் அளவுக்கு ராட்சஸியாகி விட்டேன். வயசான காலத்தில் அதுவே என் மனதை அரிக்குது. குற்ற உணர்ச்சியை சுமந்துகொண்டு நிம்மதியாக இருக்க முடியலை, அதான் பாவத்தைக் கங்கை மடியில் கரைச்சுட்டு இங்கேயே பிராணனை விட்டுடலாம்னுதான் காசிக்கே வந்தேன்…’’ என்று சொல்லி முடித்தபோதும் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டே இருந்தது.

பாட்டியை சமாதானப்படுத்த நினைத்தேன். ‘கெஞ்சினால் இந்த மயில் இறகு போடாது’’ என்று எனக்குப் புரிந்தது. அதனால் அவளை திசை திருப்புவதற்காக, அவள் கையைப் பிடித்து ரேகை பார்த்தேன்.

’’இன்னும் பத்து வருடங்கள் உங்களுக்கு ஆயுள் கெட்டி. ராமச்சந்திரனுக்குத் திருமணமாகி, அவன் குழந்தைக்கு இங்குவந்து பெரிய விஷேசமே நடத்தப் போகிறீர்கள். விரைவில் ராமச்சந்திரனைத் தேடி அவனது பெற்றோர்கள் சென்னைக்கே வந்து விடுவார்கள். அதனால் நான் சொன்னதை தெய்வவாக்காக எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்புங்கள்’’  என்றேன்.

‘‘நியூமராலஜி பலிக்காதுன்னு சொன்னீங்க… கைரேகை மட்டும் பலிக்குமோ…’’ ஆச்சர்யமாக என்னை மடக்கினான் ராமச்சந்திரன்.

சடக்கென விழித்துக் கொண்டேன். அவனைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, ‘‘கையைப் பிடித்தது ரேகை பார்ப்பதற்கு இல்லை ராமச்சந்திரா… இடகலை எனப்படும் இடது நாடி, பிங்கலை எனப்படும் வலது நாடி, சுழிமுனை எனப்படும் நடு மூச்சு நாடி… இவை மூன்றும் எப்படி செயல்படுகிறது என்பதை ஒருவரின் கையைப் பிடித்துப் பார்த்தே அறிந்து கொள்ள முடியும். அதில் மனிதர்களின் ஆயுள் தெரியும், மேலும் மூலாதார சக்தியை தொட்டுப் பார்த்தால் எதிர்காலத்தை நடக்க இருப்பதையும் அறியமுடியும்’’ என்றேன்.

என்ன புரிந்ததோ, அளவுக்கதிகமாக ராமச்சந்திரன் பிரகாசமானான், ‘‘சாமி நீங்க எப்ப சென்னைக்கு வரப்போறீங்க?’’ என்று கேட்டான்.

காசியும் கங்கையும் எனக்கும் அதற்குள் சலித்துப் போயிருந்தது. இத்தனை ஜன சமுத்திரத்திற்குள் அடைந்து கிடப்பது பிடிக்கவில்லை. அதனால், ‘‘எனக்குப் பொதிகை மலை சித்தர்களிடம் இருந்து சூட்சும அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது, நானும் கிளம்ப வேண்டியதுதான்’’  என்று கல்லை வீசினேன்.

உடனே பாட்டி நான் எதிர்பார்த்தபடியே, ‘‘எங்க கூட சென்னை வரைக்கும் வந்தீங்கன்னா சந்தோஷமா இருக்கும்…’’ என்றாள். அன்புத் தொல்லை காரணமாக ஏற்றுக் கொள்வது போல் சம்மதித்தேன். ஆனால் நான்கு நாட்கள் கழித்தே ரயிலில் இடம் கிடைத்தது. அதுவரை வீட்டில் அடைந்து கிடக்க பிடிக்காததால், ‘‘ரயில் கிளம்பும் தினத்தன்று நான் நேராக ஸ்டேசனுக்கே வந்துவிடுகிறேன்…’’ என்று  சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *