மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன வயதில் இருந்து மூச்சுப் பயிற்சியை நாள் தவறாமல் செய்துவருகிறேன். ஆனால், அவ்வப்போது உடல் நலம் கெட்டு மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியம் நேர்கிறது. நான் தவறான வழியில் மூச்சுப் பயிற்சி செய்கிறேனா என்று சந்தேகம் கேட்டார்.

மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்து, அதனை வெளியிட்டபிறகு பேசத் தொடங்கினார் ஞானகுரு.

’’வியாதி, நரை, மூப்பு, மரணம் இல்லாத அஸ்வினி சகோதர்கள்தான் பிரான, அபானன் என்ற வாயுக்களாக மூச்சுக் காற்றில் இயங்குவதாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இடகலை, பிங்கலை, சூயகலை, சந்திரகலை, சுசூம்னை என்றெல்லாம் சொல்லி விதவிதமாக மூச்சுப் பயிற்சி கற்றுத் தருகிறார்கள். மூச்சு எத்தனை தூரம் அடக்குகிறோமோ, அத்தனை தூரம் ஆயுள் கூடும் என்றும் சொல்வதுண்டு. நிதானமாக மூச்சுவிடும் ஆமை பல்லாண்டு வாழ்வதாக கணக்கு காட்டுகிறார்கள்.

ஆனால், இந்த மூச்சுப் பயிற்சினால் மட்டும் நோயில் இருந்து உடலைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் நிஜம். ஆம், நடை பயிற்சி, உடற்பயிற்சி போன்று மூச்சுப் பயிற்சியும் உடல் நலனுக்கான ஒரு பயிற்சி மட்டுமே.

நோயை வெல்வதற்கு உடலுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். நோய்க்கு ஏற்ற உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை நீக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பயமும் பதட்டமும் இன்றி அமைதியுடன் இருக்க பழக வேண்டும்.

மூச்சுப் பயிற்சி என்றால் என்னவென்றே அறியாத ஒருவன் நீடுழி வாழ்வதும், தினமும் மூச்சுப்பயிற்சி செய்பவன் திடீரென மரணமும் அடையலாம். இதுதான் இயற்கையின் விசித்திரம். மூச்சுப் பயிற்சி செய் ஆனால் அது மட்டும் போதுமென இருந்துவிடாதே. அதுதான் மூச்சுப் பயிற்சியில் நீ கற்கவேண்டிய முதல் பாடம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *