ஞானம் என்பது..
புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்றால், அதுவரை அவர் எப்படியிருந்தார்..?
கொஞ்சம் குழப்பத்துடன் இருந்தார். செல்வத்தாலும் அதிகாரத்தாலும் மனிதர்களின் துன்பத்தை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்றால், துன்பத்தை கடக்கும் சரியான வழியை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருந்தார். அதற்கான தெளிவு அவருக்கு போதி மரத்தடியில் கிடைத்தது என்று எடுத்துக்கொள்ளலாம்.
அப்படியென்றால் ஞானம் என்றால் என்னவென்பதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள். ஆம், தெளிவான அறிவு என்று எளிமையாக சொல்லலாம். ஏனென்றால், அனைத்து மனிதர்களுக்குமே அறிவு உண்டு. ஆனால், அதில் தெளிவு இருக்குமா என்பதில்தான் சந்தேகம்.
அறிவு என்பது வெளியில் இருந்து வருவது. பெற்றோர், ஆசிரியர், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் ஒருவருக்குக் கிடைப்பது அறிவு. ஆழ் மனதில் இருந்து தோன்றுவது தெளிவு. அறிவை ஒருவருக்கு யாரேனும் கற்பிக்க முடியும், ஆனால், தெளிவை கற்பிக்க முடியாது, தானே, தனக்குள் தேடித்தான் தெளிவை கண்டடைய முடியும்.
மனித உடல் மற்றும் மனதின் ஆற்றல் எந்த அளவுக்குச் செயல்படும் என்பதை புரிந்துகொள்ளும் அறிவும் தெளிவும்தான் ஞானம். இந்த நிலையை அடைவதற்கு பலரும் அறிவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அறிவினால் புதிதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க முடியுமே தவிர, ஏற்கனவே இருக்கும் இயற்கையின் ஆழத்தை அறிய முடியாது. ஏனென்றால் அறிவு என்பது, ஒருவருடைய சொகுசு மற்றும் சந்தோஷமான வாழ்வுக்குத்தான் வழி காட்டும். நிம்மதியான வாழ்க்கைக்கு அறிவு மட்டும் போதாது, தெளிவுதான் முக்கியமாக இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் மனம், ஆத்மா, தலையெழுத்து, பிறவிப்பயன், முன்வினை போன்ற ஏராளமான கேள்விகள் தோன்றலாம். இப்படி தோன்றும் தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்துவது அத்தனை எளிது அல்ல. ஆனால், இவை குறித்து தெளிவான அறிவு இருந்தால் மட்டுமே, இவற்றால் பாதிக்கப்படாமல் நகர முடியும்.
தெளிவு எனப்படும் ஞானம் அடைந்துவிட்டால் என்ன ஆகும்? எதுவும் ஆகாது. இன்பம், துன்பம் போன்ற சாதாரண விஷயங்களில் இருந்து விடுபட முடியும். இந்த உலகத்து நிகழ்வுகளை மூன்றாவது மனிதர் போன்று வேடிக்கை பார்க்க முடியும். இந்த பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு தூசு என்பதை புரிந்துகொண்டு அடக்கமாக இருந்து அடக்கமாக முடியும்.
அதுசரி, ஞானம் அடைந்துவிட்டால் கடவுளை காண முடியுமா?
முதலில் ஞானம் அடைந்து பார். பின்னர் உனக்கே எல்லாம் புரிந்துவிடும்.