தீப ஒளி எங்கே போனது?

ராமேஸ்வரத்தில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து, கிடைத்ததைப் புசித்து, களைத்த இடத்தில் படுத்து, தூங்கித்தூங்கியே பொழுதைக் கழித்த நேரம். என்னை சில நாட்களாகவே கவனித்துக் கொண்டிருந்த ஒரு சந்நியாசி அருகில் வந்து அமர்ந்தார். அவரைவிட பெரிய தாடிவைத்திருந்த என்னை, தனக்கும் மிஞ்சிய பெரிய சாமியார் என்று நினைத்தாரோ என்னவோ, நேரடியாகவே கேள்விக்கு வந்தார்.

’’சாமி… நான் போன பிறவியில என்னவா பிறந்திருந்தேன்?’’

’’நாலு வேளைக்கு முந்தி சாப்பிட்ட, சாப்பாடு என்னன்னு ஞாபகத்துல இருக்கிறதில்ல. சின்ன வயசுல யார் யார் மடியில படுத்துத் தூங்கினோம், யாரு சோறு ஊட்டுனாங்கன்னு யோசிக்க முடியறதில்ல. இதுல போன பிறவியை எப்படிக் கண்டுபிடிக்கிறது?’’

இப்படி ஒரு பதிலை நான் சொன்னதில் அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி… அதிருப்தி. விட்டேத்தியாகப் பதில் சொல்வதுதான் தேர்ந்த சாமியார்களுக்கு அழகு என்று நினைத்துத் திருப்திபட்டுக் கொண்டாரோ என்னவோ, சுதாரித்துக் கொண்டு மீண்டும் கேள்வியைத் தொடர்ந்தார்.

’’சாமி… நீங்க இமயமலை, காசிக்கு எல்லாம் போயிட்டு வந்தவர்னு சொல்லிக்கிறாங்க. அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு முன் ஜென்மத்தைக் கண்டுபிடிக்கிற சக்தி இருக்கும்…’’ என்று பேசிக் கொண்டே போனவரை இடைநிறுத்தி,

’’போன ஜென்மத்து வாசனையைக் கண்டுபிடிக்கும் மூலிகை ஏதாவது இமயமலை, காசியில் இருக்குதா என்ன?’’

’’தப்பாக் கேட்டிருந்த மன்னிக்கணும் சாமி… முற்பிறவியைக்கூட தெரிஞ்சுக்காம காவியைக் கட்டிக்கிறதுல என்ன அர்த்தம் சாமி இருக்கு. ஏனோ ரொம்பநாளாவே இந்த கேள்வி என் மனசை அரிச்சிக்கிட்டே இருக்குது. இது தெரிஞ்சுக்கிட்டா நிம்மதியா செத்துப்போகலாம்னு தோணுது. உங்களுக்கு எல்லாமே தெரியும். ஆனா, அதைத் தெரிஞ்சுக்கிற தகுதி எனக்கு இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்க. என்ன இருந்தாலும் நான் சாமியார் மாதிரி இருக்குற பரதேசிதானே..!’’ என தன்னைத்தானே நொந்து கொண்டார்.

பார்க்கப் பாவமாக இருந்தது. அவரை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசத் தொடங்கினேன்.

’’இந்த உலகத்தில் தோன்றிய உயிர்கள் எல்லாமே இறந்துவிடும், ஆனால் அழிந்து விடாது”

’’புரியலீங்களே..’’

’’ஒரு மரம் தன்னுடைய காலம் முடிந்ததும் அழிந்து விடுகிறது, ஆனால் தன்னுடைய விதைகளைப் பிரப்பி ஆயிரக்கணக்கான மரங்களா மறுபிறவி எடுக்கிறது. இது நமது கண்களுக்கே நன்றாகத் தெரிகிறது. விதைகளாக மட்டும் மறுபிறவி எடுப்பது இல்லை. அதனை வெட்டி எரிக்கும்போதோ அல்லது புதைக்கும்போதோ, அது வேற ஒண்ணோட கலந்து இன்னொண்ணா மாறிடுது. ஆனாலும், இந்த பூமியில் வேறு வடிவில் இருக்கவே செய்கிறது. மனுஷன் செத்துப் போனாலும் அவன் உடம்புல இருக்கிற கோடிக்கணக்கான செல்களும் ஏதாவது ஒண்ணா மாறிடுது, இல்லைன்னா காத்தோட காத்தா கரைஞ்சி இங்கேதான் சுத்தி வருது. அதனால, எந்தப் பிறவிக்கும் முழுமையான அழிவுங்கிறது இல்ல…’’

’’அப்படின்னா நம்ம உசுர் எங்கே போகுது சாமி?’’

’’ஒரு தீபம் அணைஞ்சா அதோட ஒளி எங்கே போகுது? அதுக்கு முந்தி அந்த தீபத்தை வைச்சு எத்தனையோ விளக்குகளை கொளுத்தினோமே… அந்த ஜோதி எல்லாம் அதுக்கு முந்தி எங்கே இருந்திச்சு..? சரி, இதை எல்லாம் தெரிஞ்சிக்கிறதுல உங்களுக்கு என்ன லாபம்?’’

படபடவென கன்னத்தில் போட்டுக்கொண்டவர்,

’’சாமி… நீங்க சொல்றது எல்லாமே புரியுற மாதிரி இருக்குது, புரியாமலும் இருக்குது. இருந்தாலும் எனக்காக நீங்களே கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன். நான் போன பிறவியில என்னவா இருந்தேன்னு?’’ கேள்வியில் விடாப்பிடியாக இருந்தார், அவர்.

அவருக்குத் தேவை தத்துவம் அல்ல… அவர் விரும்பும் பதில். என்ன பேசினாலும், செக்குமாடு மாதிரி ஒரே இடத்தில்தான் வந்து நிற்பார் என்பது புரிந்தது. என்ன சொன்னால் அவர் திருப்தியாவார் என்று கண்களை மூடி யோசித்தேன். துடித்த என் புருவங்களைப் பார்த்து, ஞானதிருஷ்டி மூலம் நான் பின்னோக்கிப் பயணம் செய்வதாக அவர் நினைத்து இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. கண் திறந்தபோது முன்பைவிட அதிகமாக என் முன்னே ஒடுங்கிக் கிடந்தார்.

’’நீ போன பிறவியில் மீனவ குடியில் பிறந்தாய். ஆனால் மீன் பிடிப்பதை விரும்பாமல் சமையல்காரனாக இருந்தாய். ஏராளமான மனிதர்கள் வயிறாற உண்டு, மனதார வாழ்த்தியதால் மறுபடியும் மனிதனாகப் பிறந்துவிட்டாய். அதனால்தான், எந்த வேலையும் செய்யாமல் உக்கார்ந்து சாப்பிடும் யோகமும் உனக்கு வாய்த்தது.

பலருக்கு சோறு போட்டு புண்ணியம் தேடிய நீ… கட்டிய மனைவிக்கு துரோகம் செய்தாய். பல பெண்களுடன் சம்போகம் செய்தாய். அதனால்தான் வீட்டுக்குள் இருக்கமுடியாமல், தெரு நாய் போன்று ரோட்டில் அலைந்து திரிந்து யாசகம் செய்து சாப்பிடுகிறாய். குடும்பம் இருந்தும் சேரவும் முடியாமல் பிரிந்து கிடக்கவும் முடியாமல் தவிக்கிறாய். இப்படியே அலை பாய்ந்த மனதுடன் திரிந்தால்… அடுத்தது நாய்ப் பிறவிதான்..!’’ அவர் கேட்காத எதிர்காலத்தையும் சொல்லி முடித்தேன்.

கண்களில் நீர்  வழிய நெடுஞ்சாண்கடையாக என் காலில் விழுந்தார், அந்தப் பரதேசி.

’’சாமி, இனிமே நான் உங்க அடிமை. உங்க வேலைக்காரன்…’’ என்று உடனடியாக என் காலை அமுக்கிவிடத் தொடங்கினார். இப்படி அவர் சிசுருஷை செய்வதைப் பார்த்தால், இன்னும் அவருக்குக் கேள்விகள் ஏராளமாக இருப்பதாகத் தெரிந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்வரை என்னைவிட்டு விலக மாட்டார் என்று தெரிந்தது. அதனால் அன்று இரவே, அவர் மல்லாந்து படுத்து குறட்டை விட்ட நேரம் என் ‘டேரா’வைத் தூக்கி விட்டேன்.

‘கடவுளே சாமியார் உருவத்தில் வந்து நமது முற்பிறவி சந்தேகத்தைத் தீர்த்து விட்டு, கண் திறந்து பார்ப்பதற்குள் மறைந்துவிட்டார்’ என்றுகூட அவர் நினைத்து இருக்கலாம். ஆனால், அடுத்தது நாய்ப் பிறவி என்று சொன்னதில் பயந்துவிட்டாரோ என்னவோ, ராமேஸ்வரத்தில் கற்பூரம் விற்பனை செய்து பிழைக்கத் தொடங்கியதாகப் பின்னர் கேள்விப்பட்டு, எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *