அதிர்ஷ்டம் எப்போது வரும்?
இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும் மனிதர்களே அதிகம். இன்னும் சொல்லப்போனால், தனக்கு மட்டும் அதிர்ஷ்டம் கிடைப்பதே இல்லை என்று வருந்துகின்றனர். உண்மை என்ன தெரியுமா? எல்லோரையும் தேடி அதிர்ஷ்டம் வரும். அதனை பலர் அடையாளம் கண்டுகொள்வதில்லை.
ஞானகுரு ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு உழைப்பாளியும் குளிக்க ஆற்றில் இறங்கினார். அவர் அவசரமாக குளித்துவிட்டு கரையேறும் நேரத்தில், ‘எனக்கெல்லாம் உங்களை மாதிரி நிம்மதியா குளிக்கக்கூட அதிர்ஷ்டம் இல்லை சாமி…’ என்று புலம்பினான்.
’’நீயும் எவ்வளவு நேரமானாலும் குளிக்கலாமே..’’
‘’அதெப்படி சாமி, நான் சீக்கிரமா குளிச்சுட்டு வேலைக்குப் போனாத்தான், வார சம்பளம் வாங்க முடியும், உங்களை மாதிரி நிம்மதியா குளிக்க அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்… எனக்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தமே இல்லை’’ என்றான்.
உடனே ஞானகுரு தன்னுடைய இடுப்பு வேட்டியில் முடிந்துவைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவனிடம் கொடுத்து, ‘’இந்த கல் உனக்கு அதிர்ஷ்டம் தரும்..” என்று கொடுத்து அனுப்பினார்.
அடுத்த நாள் காலையும் ஞானகுரு குளித்துக்கொண்டு இருந்த நேரத்தில் அந்த உழைப்பாளி வந்து சேர்ந்தான். ‘’நீங்க குடுத்த கல் அதிர்ஷ்டம் தரும்னு சொன்னீங்க, அப்படி எதுவும் நடக்கலை. திடீர்னு மழை பெஞ்சதால வேலையும் நடக்கல, சம்பளமும் கிடைக்கலை’ என்றான்.
‘’அப்படியா.. அந்தக் கல் எங்கே..?” என்று கேட்டார்.
‘’அதான் எதுவும் நடக்கலையே, நேத்து ராத்திரியே ஆத்துல தூக்கி வீசிட்டேன்’’ என்றான்.
‘’அதிர்ஷ்டம் வரும்போது, அதை பயன்படுத்திக் கொள்பவனே வெற்றி அடைவான்… நேற்று உன்னிடம் நான் கொடுத்தது ஒரு வைரக் கல்’’ என்றபடி கரையேறினார் ஞானகுரு. விக்கித்துநின்றான் உழைப்பாளி.