கடவுள் எப்படி இருப்பார்?
வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை மரத்தின் மீது மரணத்தின் தருவாயில் புலம்பிக்கொண்டு இருந்தது.
கடவுளே, எனக்கு அடுத்த பிறவி என்பதே வேண்டாம். மீன்களைத் தேடித்தேடி களைத்துவிட்டேன். மழை, வெயிலை தாக்குப்பிடிப்பதும், எதிரிகளிடம் இருந்து தப்புவதும் கடினமாக இருக்கிறது. எனக்கு முக்தி கொடு இறைவா என்று பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தது. இதைக் கேட்டதும் வேடனுக்கு சந்தோஷமாகிவிட்டது. ஆஹா, இந்த நாரையிடம் பேசினால் கடவுள் பற்றிய ரகசியம் அறிந்துகொள்ளலாம் என்று நினைத்தான். நைசாக நாரையிடம் பேச்சுக் கொடுத்தான்.
கடவுளிடம் இத்தனை தூரம் வேண்டுகிறாயே, கடவுள் எப்படி இருப்பார் என்று தெரியுமா என்று கேட்டான். அதை எதற்கு நீ கேட்கிறாய் என்று நாரை திருப்பிக்கேட்டது.
நானும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள் வைக்கவேண்டும், அதற்கு நீதான் உதவவேண்டும் என்று சொன்னதும், நாரை கடவுள் பற்றி பேசத்தொடங்கியது.
கடவுளுக்கு மிகப்பெரிய அலகு இருக்கும். கடவுளால் கடலில் எத்தனை ஆழத்தில் இருக்கும் மீனையும் பிடித்துவிட முடியும். கடவுளின் கால்கள் மிகவும் நீளமாக இருக்கும். போன பிறவியில் நாரைகளுக்கு கொடுமை இழைத்தவர்கள்தான் இந்த பிறவியில் மீன்களாக பிறந்து எங்களுக்கு உணவாகிறார்கள். கடவுள் நினைத்தால் வானில் இருந்தும் மீன் மழை பொழிய வைப்பார். கடவுளுக்கு கோபம் வந்தால் கடலை வற்றிவிடச் செய்வார். கடவுளுக்கு இறகுகள் கலர் கலராக, வண்ணமயமாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனது நாரை.
வேடனுக்கு சப்பென்று ஆகிப்போனது. இந்த நாரை முட்டாள்தனமாக கடவுள் நாரையைப் போன்று இருப்பதாக நம்புகிறதே என்று சலித்துக்கொண்டான். அடுத்தபடியாக தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயதான காட்டெருமையை எழுப்பினான். கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டான்.
கடவுளுக்கு எட்டு கொம்புகள் இருக்கும். அந்த கொம்புகள் ஒவ்வொன்றிலும் ஒரு மிருகத்தின் தலையை மாட்டியிருப்பார். ஆயிரக்கணக்கான புலிகள், யானைகள் வந்தாலும் கடவுள் மோதி கொன்றுவிடுவார். கடவுள் வெள்ளை நிறத்தில் மிகவும் அழகாக இருப்பார். கடவுள் இருக்கும் இடங்களில் புற்கள் தின்னத்தின்ன முளைத்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லியது காட்டெருமை.
வேடனுக்கு மிகுந்த குழப்பமாகிவிட்டது. நம்முடைய கடவுள் மனித ரூபத்தில் இருக்கிறார். ஆனால் நாரையின் கடவுள் நாரையாகவும், காட்டெருமையின் கடவுள் காட்டெருமையாகவும் இருக்கிறாரே, அப்படியென்றால் இந்த உலகைப் படைத்த உண்மையான கடவுள் யார் என்று ஞானிகளிடம் கேட்கத் தொடங்கினான். ஆளுக்கு ஒரு பதில் சொன்னார்கள். கடைசியில் வேடனிடம் ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருந்தார்கள். அத்தனை கடவுள்களையும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவன், ஒரு கட்டத்தில் அனைத்து கடவுள்களையும் கடலில் கரைத்துவிட்டு, தன்னுடைய வேட்டையாடும் தொழிலில் இறங்கி நிம்மதியாக வாழத் தொடங்கினான். இந்த வேடனுக்கு குழப்பங்களில் இருந்து கிடைத்த விடை, பல மனிதர்களுக்கு கிடைப்பதே இல்லை.
திருப்பதிக்குப் போய் கடவுளை தரிசித்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறான். அவர்தான் உண்மையான கடவுள் என்றும், அந்த உருவம்தான் கடவுளின் நிஜம் என்றும் நினைக்கிறான். அதன்பிறகு அவன் கேட்டது ஏதாவது கிடைக்கவில்லை என்றதும், கடவுள் அங்கே இல்லை என்ற முடிவுக்கு வருகிறான். அந்த கோயிலுக்கு சக்தி போய்விட்டது என்று வேறு ஒரு கடவுளைத் தேடிப் பார்க்கிறான். எங்கு அவன் ஆசை நிறைவேறுகிறதோ, அங்குதான் உண்மையான கடவுள் இருப்பதாக நம்புகிறான்.
கூட்டம் கூட்டமாக இருக்கும் கோயிலில் நுழைந்து சாமியை தரிசனம் செய்தால் நினைத்தது எல்லாம் நடந்துவிடும் என்று நினைக்கிறான். குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சாமி கும்பிட்டால், ஸ்பெஷல் வரப்பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறான். எப்படியென்றாலும் கடவுள் என்பது மனிதனைப் பொறுத்தவரை, ஒரு விளையாட்டு பொம்மை.
- கடவுள் என்பது மனிதனின் விளையாட்டு பொம்மையா?
சந்தேகமே இல்லாமல் கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய விளையாட்டு பொம்மைதான். பரிட்சையில் பாஸ் செய்வது தொடங்கி, பல் வலியை சரி செய்வது வரைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வகையில் கடவுள் தேவைப்படுகிறார். அவனால் எளிதில் செய்யமுடியாத ஒன்றை, கடவுள் முடித்துத்தருவார் என்று நம்புறான். அப்படியொரு கடவுள் இருந்தால் தன்னைவிட மேம்பட்டவராக இருப்பார் என்று எண்ணுகிறான். அதனால்தான் நான்கு கைகளும் ஆறு முகங்களும் கொண்ட கடவுளை மனிதன் படைக்கிறான். ஒரு பன்றிக்கு கடவுள் தேவைப்பட்டால், அது நிச்சயம் ஒரு பிரமாண்டமான பன்றியைத்தான் கடவுளாக வழிபடும். ஏனென்றால் அந்த குறியீடுதான் கும்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.
இந்து மதத்தில் பாம்பு, காகம், மயில் தொடங்கி ஏகப்பட்ட உருவங்கள் கடவுளாக வணங்கப்படுகிறது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல்லப்படும் இஸ்லாம் மதத்திலும் சில குறியீடுகள் இருக்கின்றன. அதனால் கடவுளை குறிப்பிடும் உருவம், குறியீடுகள் எல்லாமே மனிதன் படைத்தவையே. மனிதனை படைத்தது கடவுள் என்று வைத்துக்கொண்டாலும், பூமியில் இருக்கும் கடவுளை படைத்தது நிச்சயம் மனிதன்தான். அவனவனுக்குத் தெரிந்த வகையில் கடவுளை படைத்துவிட்டான் மனிதன்.
- உண்மையில் கடவுள் எப்படி இருப்பார்?
கிணற்றில் வாழும் மீனுக்கு, அந்த கிணறுதான் பிரபஞ்சம். கிணறைத் தாண்டி, அதைவிட பெரிதாக வேறு ஏதேனும் இருக்குமா என்பது தெரியாது. அப்படியே கற்பனை செய்தாலும், இப்போது இருப்பதைவிட பெரிய கிணறு ஒன்றைத்தான் மீனால் கற்பனை செய்யும். அப்படித்தான் மனிதனாலும் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே சிந்திக்க முடியும்.
மனிதனின் பார்வைக்கு இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. ஆரம்பமும் முடிவும் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. இத்தனை பெரிய பிரபஞ்சம் எப்படி சாத்தியமானது? எதுவுமே இல்லாத அண்டம் என்பதே அதிசயம். இத்தனை பெரிய பிரபஞ்சத்தை படைத்தவன், இதைவிட பெரியவனாகத்தானே இருக்கமுடியும்? கடவுளுக்கு உருவம் இருக்குமோ இல்லையோ, நிச்சயம் மனிதன் வரைந்தும் வடித்தும் வைத்திருக்கும் கடவுளுக்குள் உண்மையான கடவுள் சிக்கமாட்டார்.
- கடவுள் பிரமாண்டமாக இருப்பார் என்று எப்படி சொல்கிறீர்கள்? கடவுள் அணுவுக்குள் இருக்கிறார் என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்களே?
அணுதான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். ஆனால் அணுவை உடைத்துப் பார்த்தால் ஒளிந்திருக்கும் மின்சாரத்தையும் ஆயுதத்தையும் மட்டுமே பார்க்கமுடியும். கடவுளை எப்போதும் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி கண்டுபிடிக்க முடிந்தால், அவர் பெயர் கடவுளும் அல்ல. அணுவுக்குள், பாற்கடலுக்குள், ஜெருசலேமுக்குள், மெக்கா, மதீனாவுக்குள் கடவுளை கண்டுபிடித்துவிட முடியாது.
- அப்படியென்றால் நிஜ கடவுளை கண்டுபிடிக்கவே முடியாதா?
இந்த உடலாலும், இந்த கண்களாலும் கடவுளை காண நினைக்கிறான் மனிதன். கடவுள் இந்த உடலைத் தாண்டியவர். அதனால் பக்தி அல்லது தியானத்தால் கடவுளை கண்டறியமுடியும் என்று எண்ணுவது முட்டாள்தனம். கல்லாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கடவுளை பூதவுடலால் தேடும் எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். எண்ணங்களால், சிந்தனையால், ஞானத்தால் வடிவமைக்கப்பட்ட கடவுளை, உன்னுடைய மனதால் தேடவேண்டும். அப்போது கடவுள் தட்டுப்படலாம், தட்டுப்படாமலும் போகலாம்.
- சாதாரண மனிதன் கடவுளை காணவே முடியாதா?
உன்னை பெற்றவளின் அன்பைப் பார், நிச்சயம் கடவுள் தெரிவார்.