சூரியக் குளியல்
மனிதன் விசித்திரமானவன். நல்லதைக் கண்டு ஓடி ஒளிவதுதான் அவனுடைய குணம். அதற்கு உதாரணம் சூரியன். தன் மீது சூரிய ஒளி பட்டுவிடும், கருத்துவிடுவோம், வியர்த்துவிடும் என்று வெயில் படாமல் வாழ்கிறான். அப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டாலே கொதிப்பார் ஞானகுரு.
அதிகாலை நேரமது. இளம் பெண்ணொருத்தி குடையுடன் வந்து நின்றாள். சூரியக் கதிர்களை மேனியில் தவழவிட்டு படுத்திருந்த ஞானகுருவுக்கு பர்ஸை திறந்து பிட்சையாக பணம் கொடுத்தாள்.
‘’பெண்ணே உன் குடையை எனக்குத் தர முடியுமா..?’’ ஞானகுரு கேள்விக்கு குழம்பினாள்.
‘’வேண்டுமானால் பணம் தருகிறேன்…” படுத்திருந்த சாக்குக்குள் இருந்து பணம் அள்ளிக் கொடுத்தார். மிரண்டு போன இளம்பெண், உடனே தன் கையில் இருந்த குடையைக் கொடுத்துவிட்டு தள்ளி நின்றாள்.
அந்தக் குடையை வாங்கிப் பார்த்த ஞானகுரு, அதனை நிதானமாகக் கிழித்து, உடைத்து, நார்நாராக்கி தூர எறிந்தார். அதைப் பார்த்து மிரண்டு போயிருந்த பெண், ‘’ஏன் இப்படி செஞ்சீங்க?’’ என்று உதடு துடிக்கக் கேட்டாள்.
’’அக்னி தேவனுக்கு கருப்புக் கொடி காட்டாதே. உன் உடலில் அக்னி குறைந்தால் சர்க்கரை வியாதி வரும், ரத்தக் கொதிப்பு வரும், உடல் பருமன் வரும், தோலில் அலர்ஜி வரும்… மூட்டு வலி வரும், ஜீரணக் கோளாறு வரும்… இதெல்லாம் தேவையா பெண்ணே..?”
‘’ஆனால், தோல் கருத்துவிடுமே…’’
‘’அது சூரியனின் வேலை அல்ல மகளே. வியாபாரிகள் உன் மூளையை மழுங்கடித்து, அழகு க்ரீம் விற்பனைக்காக, சூரியனை உன்னிடமிருந்து விலக்கி வைக்கிறார்கள். உடலுக்கு வைட்டமின் டி கிடைப்பதற்கு சூரிய வெளிச்சம் தவிர வேறு எந்த வழியும் கிடையாது. காலையும் மாலையும் சூரியக் கதிர்களின் வெப்பம் குறைந்தே இருக்கும். உன் உடலில் சூரியக் கதிர் சுள்ளென்று சுடும் வரையிலும் சூரியக் கதிர் பருகு. என்றென்றும் இளமையுடன் திகழ்வாய்…”
திகைத்துநின்றாள் இளம்பெண்.