கனவை நிறுத்து…
கல்லூரி படிப்பை முடித்த மோனிகாவை பேரழகி என்று சொல்லமுடியாது என்றாலும் அழகிதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். திருமணத்துக்கு நகை சேர்க்கவேண்டிய கட்டாயத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு ராஜேஷை சந்தித்தாள். மோனிகா வேலை பார்க்கும் நிறுவனத்தில், அமெரிக்க கிளைக்கு பொறுப்பாளனாக இருந்தான். இந்தியாவுக்கு வரும் நேரத்தில் எல்லாம் மோனிகாவின் அமைதியான குணத்தையும் அவளது மோனலிசா புன்னகையையும் பார்த்து மயங்கினான்.
ஒரு சுபயோக சுபதினத்தில் மோனிகாவை தனிமையில் சந்தித்தான் ராஜேஷ். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். உனக்கு அமெரிக்கா வருவதற்கு விருப்பம் இருந்தால் சொல், நான் என் பெற்றோரிடம் பேசி மேற்கொண்டு நடக்கவேண்டியதை கவனிக்கிறேன். என் பெற்றோர் சம்மதம் கிடைக்கும்வரை நம் விஷயத்தை யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று சொன்னான். மறுபேச்சு பேசாமல் சந்தோஷமாக தலையை ஆட்டினாள் மோனிகா.
அடுத்த நிமிடம் முதல் மோனிகா கனவு காணத்தொடங்கினாள். அமெரிக்காவுக்கு செல்வது போலவும், பனி மழையில் நனைவதாகவும், தோழிகள் பொறாமைப்படுவதாகவும் நினைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு நிமிடமும் கனவில் வாழ்ந்தாள். தனியே சிரித்தாள். தனக்குள் பேசினாள். பணத்தில் மிதப்பதாகவும் சொர்க்கத்தில் வாழ்வதாகவும் கனவு கண்டாள். இந்த மாற்றத்தைக் கண்ட மோனிகாவின் பெற்றோர், என்னமோ நடக்கிறது என்று யோசித்தார்கள். உடனே தூரத்து சொந்தத்தில் ஒரு வரனை பேசிமுடிக்கும் வேலையில் இறங்கினார்கள்.
அடுத்த மாதம் அமெரிக்காவில் இருந்துவந்த ராஜேஷ், மோனிகாவைப் பார்த்து புன்னகை செய்யவும் யோசித்தான். கஷ்டப்பட்டு ஒரு தனிமையை உருவாக்கி ராஜேஷை சந்தித்தாள் மோனிகா. முதலில் தயங்கினாலும் தெளிவாகப் பேசினான் ராஜேஷ்.
உன்னை திருமணம் முடிப்பது குறித்து என் பெற்றோரிடம் பேசினேன். உன் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். சாதாரண நடுத்தரக் குடும்பம் என்பதால் ஒரேயடியாக நிராகரித்துவிட்டார்கள். என் பெற்றோர் பேச்சை என்னால் தட்டமுடியாது. அதனால் இனிமேல் என்னை சந்திக்க வேண்டாம். நாம் இனி அலுவலக தோழர்களாக மட்டுமே இருப்போம் – என்று பொறுமையாக சொல்லிவிட்டு விலகினான்.
அதிர்ச்சி அடைந்தாள் மோனிகா. உலகமே தன் தலையில் இடிந்து விழுந்ததாக உணர்ந்தாள். இந்த நேரத்தில் மாப்பிள்ளையாக அறிமுகம் செய்யப்பட்டான் வேல்ராஜன். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சொந்தமாக சிறிய ஹோட்டல் நடத்தி வந்தான். மோனிகாவின் தோற்றத்தைக் கண்டதும் நகை எதுவும் போடவேண்டாம் என்று சொல்லி திருமணத்துக்கு சம்மதித்துவிட்டான். கல்யாணத்தை தடுக்கும் சூழலில் மோனிகா இல்லை என்பதால் சிம்பிளாக விரைவில் கல்யாணம் நடந்துமுடிந்தது.
மிகவும் நல்லவனாக இருந்தான் வேல்ராஜன். மோனிகாவை தங்கத்தட்டில் வைத்துத் தாங்கினான். ஆனால் மோனிகாவுக்கு இந்த வாழ்க்கை அவமானமாகத் தெரிந்தது. அமெரிக்காவில் வாழவேண்டிய தன்னை ஒரு குருவிக்கூட்டில் அடைத்து வைத்திருப்பதாக உணர்ந்தாள். வேல்ராஜன் தனக்கு தகுதியானவன் இல்லை என்று ஆணித்தரமாக நம்பினாள். அதனால் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள். அவன் நெருங்கி வந்தாலும் விலகிப் போனாள். மீண்டும் மீண்டும் ஆசையுடன் மோனிகாவை நெருங்கிய வேல்ராஜிடம் ஒரு நாள் உறுதியான குரலில் பேசினாள். என்னுடைய அழகுக்கு நான் அமெரிக்காவில் வாழவேண்டியவள். எனக்கு உங்களுடன் வாழ விருப்பம் இல்லை என்று சொன்னாள். வேல்ராஜன் மறுபேச்சு பேசவில்லை. மோனிகாவை உடனடியாக அவளது அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.
இப்போது மோனிகா வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். வேல்ராஜனுடன் திருமணம் முடிந்ததை ஒரு கெட்ட கனவாக நினைக்கிறாள். தன்னை அமெரிக்காவுக்கு கூட்டிச்செல்ல ஒரு இந்திரனோ, சுந்திரனோ வருவான் என்று கனவு காண்கிறாள். ஆனால் அந்த கனவு இன்னமும் நிறைவேறவில்லை என்பதால் எரிச்சலும் கவலையுமாக வாழ்க்கையை நகர்த்துகிறாள். மோனிகாவை வேல்ராஜனுடன் சேர்த்துவைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப்போனதால், அவள் குடும்பமும் கவலையுடன் வாழ்கிறது. தங்கள் கவலைக்கு என்ன காரணம் என்பது புரியாமல் கவலைப்படுகிறார்கள்.
மோனிகாவின் கவலைக்கு காரணம் தெரிகிறதா?
கனவு உலகத்தில் வாழ்ந்ததுதான் மோனிகாவுக்கு கவலை தருகிறது. தான் கண்டது கனவு என்பதை உணராமல் இன்னமும் கனவில் வாழ்கிறாள். அந்த கனவை ஆனந்தமாக ரசிக்கிறாள். அவள் எப்போது கனவை வெறுக்கிறாளோ அப்போதுதான் கவலையில் இருந்து வெளிவர முடியும்.
மோனிகாவின் குடும்பத்தினர் கவலைக்கு காரணம் என்ன?
அவர்களும் ஒரு கனவு கண்டார்கள். தாங்கள் சொல்லும் மாப்பிள்ளையுடன் மோனிகா சந்தோஷமாக வாழ்வாள் என்று நினைத்தார்கள். கணவனை மதித்து திறமையாக குடும்பம் நடத்துவாள் என்று கனவு கண்டார்கள். அந்த கனவு உடைந்துபோனதால் கவலைப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல வேல்ராஜனும் ஒரு கனவு கண்டான். மோனிகா போன்ற அழகி தனக்கு மனைவியாக வந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கனவு கண்டான். ஆனால் வேல்ராஜன் புத்திசாலி. கவலையை அருகில் வைத்திராமல் விரட்டிவிட்டான். வேலையில் மூழ்கிவிட்டதால் கனவையும் கவலையையும் மறந்துவிட்டான்
புரமோசன் கிடைக்கும் என்று கனவு காண்பவன், அடுத்து கார் வாங்குவது போலவும், புது வீடு கட்டுவதாகவும் நினைத்துப் பார்க்கிறான். புரமோசன் கிடைக்கவில்லை என்றதும் மாபெரும் கவலையில் விழுகிறான். அதேநேரம் புரமோசன் பற்றி எந்த கனவும் இல்லாத ஒருவனுக்கு, புரமோசன் கிடைக்கவில்லை என்றாலும் எந்த கவலையும் வருவதில்லை. அதனால் கனவை நிறுத்து.
கவலையில் இருந்து வெளிவர என்ன செய்யவேண்டும்?
தூக்கத்தில் காணும் கனவை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படியொரு கனவு கண்டதை யாரும் நினைவு வைத்திருப்பதில்லை. அதேபோன்று வாழ்க்கையில் காணும் கனவுகளில் இருந்தும் முற்றிலுமாக வெளிவர வேண்டும். கனவை உடைத்து வெளியேறிவிட்டால் கவலை நிச்சயம் காணாமல் போய்விடும்.
கனவை உடைக்க முடியுமா?
கனவு இனிமையாக இருப்பதால் சிலருக்கு உடைப்பதற்கு மனம் வருவதில்லை. புண்ணை குத்தி வேதனையில் இன்பம் காண்பதுபோல் கனவிலேயே வாழ்கிறார்கள். தங்கள் கவலைக்கு உண்மையான காரணம், தாங்கள் கண்ட கனவு என்ற உண்மை புரியவேண்டும். ஒரு சினிமாவைப் பார்த்ததும் அந்த நாயகன் அல்லது நாயகியுடன் வாழவேண்டும் என்ற கனவு வருவது சகஜம். ஆனால் அது நடக்காது என்பது நிச்சயம் தெரியும். அதனால் அந்த கனவை உடைத்து வெளிவந்துவிடுவாய். அதுபோல் இப்போதைய கவலைக்குக் காரணமாக கனவில் இருந்தும் வெளிவர வேண்டும். கனவில் இருந்து வெளிவருவதற்காக தனிமையில் தவிப்பது, குடிப்பது, அழுவது போன்றவை நிரந்தர தீர்வு தராது. கவலைக்கு என்ன காரணம் என்று யோசித்து யோசித்து ஒரு தாளில் எழுது. அதை மீண்டும் மீண்டும் படித்துப் பார். அவைதான் கவலைக்குக் காரணம் என்பது உறுதியானதும் நிதானமாக அதனை நெருப்பில் போடு. கனவும் கவலையும் சேர்ந்தே கருகிப்போகும்.
உடைக்கவே முடியாத கனவென்று எதுவும் இல்லை!