ஒரே ஒரு புன்னகை

வண்ணத்துப்பூச்சியை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருமே அதன் அழகில் மயங்குபவர்கள்தான். ஆனால் இப்போது வண்ணத்துப்பூச்சியை எங்கே போய் தேடுவது என்று கவலையா? உன் எதிரே நிற்பவரின் முகத்தில் தேடு… நிச்சயம் கண்டடைவாய்.

ராகவியின் நிறம் கருப்பு. போதாக்குறைக்கு அவளுக்கு படிப்பும் ஏறவில்லை. அதனால் +2 முடித்ததும் திருமணம் முடித்துக்கொடுக்க வீட்டில் முயற்சி எடுத்தார்கள். மாப்பிள்ளையாக வந்த நபர்கள் எல்லாம் அவளது கருப்புக்கும், படிப்பின்மைக்கும் சேர்த்து ஏகப்பட்ட நகை கேட்டார்கள். அதனை கொடுக்கமுடியாமல், வீட்டிலும் வைத்திருக்க முடியாமல் அவளை வேலைக்கு அனுப்பினார்கள்.

ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தாள் ராகவி. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள். அவளுக்கு அருகே வேலை செய்யும் சில பெண்கள் எந்த நேரமும் சிரிப்பும், கேலியும் கிண்டலுமாக இருப்பார்கள். ஆனால் ராகவி குனிந்த தலை நிமிரமாட்டாள். சரியான நேரத்துக்கு வந்து சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போய்விடுவாள். யாரிடமும் அநாவசியமாக எதையும் பேசவும் மாட்டாள்.

ராகவி வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள் செண்பகம். வேலை செய்யும் அத்தனை பெண்களும் சிரித்துக்கொண்டிருக்க, அதில் கலந்துகொள்ளாமல் தனித்து வேலை பார்க்கும் ராகவியை நினைத்து பரிதாபப்பட்டாள். அவளுடன் பேசத் தொடங்கினாள். கேட்ட கேள்விகளுக்குப் பதில் பேசுவதற்கே தயங்கினாள் ராகவி. ஒருவழியாக இருவருக்கும் கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டது.

நீ ஏன் எப்போதும் முகத்தை உர்ரென்று வைத்திருக்கிறாய்., கொஞ்சம் சிரித்தால் என்ன?

நான் சிரிக்கவில்லை என்று இங்கே யார் அழுதது? நான் கருப்பாக இருக்கிறேன் என்பதால் என்னை இங்கே யாருக்கும் பிடிப்பதில்லை. நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் எல்லோருடனும் பேசிப்பழக ஆசைப்பட்டேன். முதல் நாள் எல்லோரையும் பார்த்து சிரித்தேன். ஆனால் யாரும் என்னை மதிக்கவே இல்லை. அதனால்தான் நான் யாரிடமும் பேசுவதும் இல்லை, சிரிப்பதும் இல்லை என்று மனதில் இருப்பதை எல்லாம் கொட்டித்தீர்த்தாள்.

உன்னைப் பற்றி நீயே தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கிறாய். உன் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர் மீது பழி போடாதே என்றாள் செண்பகம். ஆனால் இதை ராகவி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அடுத்த ஒரு மாதம் கண்ணில் தென்படும் அத்தனை பேரையும் கண்டு ராகவி புன்னகை புரியவேண்டும், அதன்பிறகும் மாற்றம் எதுவும் நிகழவில்லை என்றால் ராகவி சொல்வதுதான் உண்மை என்று ஏற்றுகொள்வதாக சொன்னாள் செண்பகம். அதனை நடைமுறைக்கு கொண்டுவந்தாள் ராகவி.

அடுத்தநாள் வேலைக்கு வந்ததும் வாசலில் நிற்கும் வாட்ச்மேனைக் கண்டு புன்னகை புரிந்தாள். அதிசயமாக பார்த்தான். அன்று முழுவதும் கண்ணில் கண்ட அத்தனை பேரிடமும் புன்னகை புரிந்தாள். அனைவரும் ஆச்சர்யப்பட்டார்களே தவிர புன்னகை புரியவில்லை. உடைந்தே போனாள் ராகவி. இதனை நாளையும் தொடரத்தான் வேண்டுமா என்று ரொம்பவும் யோசித்தாள். ஆனாலும் செண்பகம் வற்புறுத்தல் காரணமாக மேலும் தொடர்ந்தாள்.

அடுத்தடுத்த சில நாட்கள் ராகவிக்கு அதே அனுபவம்தான் கிடைத்தது. அடுத்த வாரத்தின் முதல் நாள் வாட்ச்மேனுக்கு புன்னகை புரிவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே நெருங்கும்போதே… அவளைப் பார்த்து ஒரு சல்யூட் வைத்தான். ஆச்சர்யமானாள் ராகவி. பெரிதாக புன்னகை புரிந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களும் அவளுக்கு முன்னரே புன்னகைக்கத் தொடங்கினார்கள். அப்புறமென்ன சில நாட்களில் மற்ற பெண்களைப் போலவே சிரிக்கவும் கொண்டாடவும் கற்றுக்கொண்டாள் ராகவி. இப்போது ராகவி தன்னுடைய கருப்பு நிறத்தைக் கண்டு கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவளிடம்தான் புன்னகை என்ற அற்புதமான ஆயுதம் இருக்கிறதே…

இன்டர்வியூ நடக்கும் இடங்களுக்குப் போயிருக்கிறீர்களா? ஒரு நாளில் ஏராளமான நபர்களை கழிக்க வேண்டியிருக்கும், ஒருசிலரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஆனால் நேர்முகத்தேர்வு என்பது ஒருசில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அப்படியிருக்கும்போது எப்படி ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள்?

யாருடைய முகத்தில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்பதைத்தான் பார்க்கிறார்கள். புன்னகையும் நம்பிக்கையும் இருப்பவன் முகத்தில் நிச்சயம் மலர்ச்சி தெரியும். நெருக்கடியான  நேர்முகத் தேர்வு நேரத்திலும் புன்னகையுடன் இருப்பவனால் நிச்சயம் பல சாதனைகள் செய்துவிட முடியும். மனம் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் முகத்தில் அது நிச்சயம் பிரதிபலிக்கும். முதல் பார்வையிலே ஒருவர் மீது நம்பிக்கையும் அன்பும் வரவேண்டும் என்றால் அந்த முகத்தில் புன்னகை நிலவ வேண்டும்.  முதல் பார்வையில் ஒருவரை கவரமுடியவில்லை என்றால், கடுமையான முயற்சிகளாலும் அவரை கவரமுடியாது.

முகத்தில் பட்டாம்பூச்சி பறக்குமா என்ன?

குழந்தைகளின் முகத்தைப் பாருங்கள். நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு பார்க்காமல் யாரைப் பார்த்தாலும் பூவைப் போன்று சிரிக்கும். யார் கூப்பிட்டாலும் அவர் கைக்குத் தாவும். குழந்தைக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகிறது? குழந்தையின் மனதில் எந்த கல்மிஷமும் தில்லுமுல்லுவும் இல்லை. எதிர்காலம் குறித்த அச்சமும் இல்லை, கனவும் இல்லை. அதனால்தான் குழந்தையின் முகம் பெளர்ணமி நிலவு போல் ஜொலிக்கிறது. காணும் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.

குழந்தைகளுக்கு பிரச்னைகள் கிடையாது, ஆனால் மற்றவர்களுக்கு அப்படியில்லையே?

பிரச்னை இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. கோடீஸ்வரனாக இருப்பவனுக்கும் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உண்டு. எத்தனை நஷ்டம் வந்தாலும் குடி முழுகப் போவதில்லை என்றாலும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் வயிறு பசிக்கும்போது சாப்பிடுகிறார்கள். கண்ணை சுழட்டும்போது தூங்குகிறார்கள். ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது என்பதற்காக அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பதில்லை. ஆனால் அவ்வப்போது புன்னகைத்தால் மட்டும் குறைந்தா போவார்கள்.

புன்னகைக்கும் பட்டாம்பூச்சிக்கும் என்ன தொடர்பு?

ஒவ்வொரு முறை நீ புன்னகை சிந்தும்போதும் முகத்தில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறக்கும். உன் முகத்தில் பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பவர்களின் முகத்திலும் சந்தோஷம் வரும். அவர்களும் புன்னகை புரிவார்கள், அவர்கள் முகத்திலும் பட்டாம்பூச்சி பறக்கும். இந்த புன்னகை ஒரு சங்கிலி போன்று பரவி, அத்தனை மனிதர்கள் முகக்திலும் பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடியும். புன்னகை சிந்தும் மனிதன் அழகாகத் தெரிவான். அவன் முகத்தைப் பார்க்கும் எவருக்கும் எதையும் மறுக்கத் தோணாது. இன்று மக்கள் மனதை கொள்ளையடித்திருக்கும் சினிமா நட்சத்திரங்களில் இருந்து அரசியல்வாதிகள் முகம் வரையிலும் கண்ணை மூடி நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய சிரித்த முகம்தான் கண்ணுக்கும் நிற்கும்.

புன்னகை புரிந்தால் வேறு என்ன கிடைக்கும்?

ஆண்டவனை கும்பிட்டால்கூட என்ன பலன் கிடைக்கும் என்று கணக்குப்போட்டு பார்ப்பதுதான் மக்களின் வாடிக்கைதான். அதனால்தான் புன்னகையால் என்ன பலன் என்று கேட்கிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவழித்து கச்சிதமாக ஆடையணிவதால் மட்டும் ஒருவர் வசீகரமாக மாறிவிட முடியாது. புன்னகையுடன் சிரித்த முகத்துடன் தோன்றுபவரே அனைவருக்கும் இனியவராக மாறுகிறார். புன்னகையால் எதிரியையும் கவர்ந்துவிட முடியும். புன்னகை புரிபவர்களையே நம்பிக்கையாளராக பார்க்கிறார்கள்.

புன்னகை செய்ய நினைத்தாலும் முடியவில்லையே?

சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பது நம் தமிழ் பொன்மொழி. உன் மனசுக்குள் ஏராளமான சிக்கல்களும் கசடுகளும் இருந்தால் புன்னகைக்க முடியாது. மனதில் நல்ல எண்ணங்களை மட்டும் வளர்த்துக்கொள். அவநம்பிக்கைகளை மனதில் இருந்து விரட்டு. தேவையற்ற ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே. குறிப்பாக யாரையும் எதிரியாக பாராதே. எல்லோரும் நல்லவரே என்ற சிந்தனையை வளர்த்துக்கொள். தெரிந்த ஒருவரை, நல்லவராக நினைக்கும் ஒருவரை எதிரே பார்க்கும்போது புன்னகைக்க முடியாதா என்ன..?

புன்னகை செய், பூமி முழுவதும் பட்டாம்பூச்சிகள் பரவட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *